இந்திய இலக்கியங்களில் கிரகணம் முக்கியப் பங்கு வகிக்கிறது. உலகின் பழமையான மதப் புத்தகமான ரிக் வேதத்திலிருந்து தற்காலக் கதை, கட்டுரைகள் வரை கிரகணங்களைக் காண்கிறோம். சந்திர கிரகணங்களைப் பற்றி அதிகமான குறிப்புகளையும் சூரிய கிரகணங்களைப் பற்றி குறைவான குறிப்புகளையும் காணலாம். ரிக் வேத ஐந்தாவது மண்டலத்தில் அத்ரி மஹரிஷியின் பாடலில் (5-40) ச்வர்பானுவின் பிடியில் சூரியன் சிக்குவதாகவும் பின்னர் விடுதலை பெறுவதாகவும் குறிப்பிடுகிறார். தற்கால பத்திரிகைகளில் வரும் செய்தியைப் போல அவரும் கிரகணத்தில் சூரியன் மறைந்த பின்னர் பிராணிகளுக்கும் பறவைகளுக்கும் ஏற்படும் குழப்பம் பற்றி வருணிக்கிறார். இதை ஆராய்ந்தோர் கி.மு 3928ல் இது நிகழ்ந்ததாகக் கூறுகின்றனர்.

யாஸ்கர் தனது நிருக்தத்திலும் (2-6) கௌதம மஹரிஷி தனது பாடலிலும் (ரிக் 1-84-15) கிரகணம் பற்றிப் பேசுகின்றனர். அத்ரி மஹரிஷியின் பாடலில் அவருக்கு மட்டுமே கிர்ஹணத்திலிருந்து சூரியனை விடுவிக்கத் தெரியும் என்பதைப் படிக்கும் போது அந்தக் காலத்தில் அவர்களுக்கு மட்டும் கிரஹணத்தைக் கணக்கிடும் முறை தெரிந்திருந்ததாக நினைக்கத் தோன்றுகிறது. பஞ்சவிம்ச பிராமணத்தில் இதை மேலும் விளக்குகின்றனர். நான்கு கட்டங்களில் அவர் இதை விடுவிப்பதாகக் கூறி அவைகளை சிவப்பு ஆடு, வெள்ளி நிற ஆடு,பின்னர் சிவப்பு ஆடு, கடைசியில் வெள்ளை நிற ஆடு என்று வருணிக்கின்றனர். அதாவது சிவப்பாக மாறி வெளிப்புற நிழலில் நுழைந்து பின்னர் முழுதும் மறைந்து மீண்டும் சூரியன் விடுதலை பெறும் அறிவியல் கருத்தை அழகாகக் கூறுகின்றனர்.

மகா பாரதம் ராமாயணம் ஆகிய இதிஹாசங்களில் நிறைய குறிப்புகள் உண்டு. வால்மீகி ராமாயண ஆரண்ய காண்டத்தில் மிக அழகான வருணனை 15 ஸ்லோகங்களில் (சர்கம் 23) உள்ளது.

வேதகாலத்தில் முழுநிலவை ராகா என்றும் அமாவாசையை சீனிவாலி என்றும் அழைத்ததாக வடமொழி அறிஞர்கள் கூறுவர்.அப்போது ராஹு, கேது கிரஹங்கள் கிடையாது.

சங்கத் தமிழ் இலக்கியத்தில் நிறைய இடங்களில் சந்திரனை ராகு என்னும் பாம்பு விழுங்கும் (அகம் 114,313: புறம் 260, சிறுபாண்185,, பரி 10-76, குறு 395, நற் 128,377: பெரு.383, கலி. 4 இடங்கள்) கருத்து வருகிறது.

சூரிய கிரகணம் பற்றி புறநானூறு பாடல் எண் 174 ல் மாறோக்கத்து நப்பசலையார் பாடுகிறார்:
அணங்குடை அவுணர் கணம்கொண்டு ஒளித்தெனச்
சேண்விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது,
இருள்கண் கெடுத்த பருதி ஞாலத்து
இரும்பைகொள் பருவரல் தீரக், கடுந்திறல்
அஞ்சன உருவன் தந்து நிறுத்தாங்கு,
அரசிழந்து இருந்த அல்லற் காலை

இதற்கு உரை எழுதியோர் பாற்கடலைக் கடைந்தபோது நிகழ்ந்ததேவாசுரப் போரையும் அப்போது ராகு கேது அமிர்த துளிகளைத் திருட்டுத்தனமாக சாப்பிட்டதையும் உடனே மோஹினி அவதாரத்தில் இருந்த விஷ்ணு ராகுவின் தலயை வெட்டியதையும் குறிப்பிடுகின்றனர். ஆனால் இதில் பாடப்பட்டவன் பெயரும் மலையமான் சோழிய ஏனாதி திருக் கண்ணன், சூரியனை விடுவித்து இருளைப் போகியவனும் கண்ணன் (அதாவது அஞ்சன வண்ணன்) என்பதைப் பார்க்கையில் இது மஹாபாரத 13ஆவது நாள் போரைக் குறிக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது. எல்லா கிரஹணங்களையுமே பாமர மக்கள் புரிந்து கொள்வதற்காக அரக்கன் வந்து விழுங்கினான், பாம்பு வந்து விழுங்கியது என்று கூறுவது வழக்கம். ஆனால் அஞ்சன வண்ணனான கண்ணன் சூரியனை ஒரு சில நிமிடங்களுக்கு மறைத்து பின்னர் வெளியே காட்டிய நிகழ்ச்சி மகாபாரதத்தில் 13 ஆம் நாள் நடந்தது. இன்று மாலை சூரியன் மறைவதற்குள் அபிமன்யுவைக் கொன்ற ஜயத்ரதனைக் கொன்று பழிவாங்குவேன் என்று அர்ஜுனனன் சூளுரைக்கிறான். சூரியனும் மறைந்துவிடுகிறது. ஜயத்ரதன் உயிருடன் வெளியே வந்து கொண்டாடுகிறான். அந்த நேரத்தில் திடீரென சூரியன் வெளியே வர அர்ஜுனன் தனது எதிரியைக் கொன்று பழி தீர்க்கிறான். அது சூரிய கிரஹண நாள் என்ற ரகசியம் அர்ஜுனன், கண்ணன் ஆகியோருக்கு மட்டுமே தெரியும் போலும். பாண்டவர்களில் கடைக் குட்டிகள் இருவரும் ஜோதிட சாத்திரத்தில் வல்லவர்கள்.

13ஆம் நடந்த போரில் பங்கு கொண்ட ஜயத்ரதன் சிந்து சமவெளி மன்னன் என்பது குறிப்பிடத் தக்கது. முன்பெல்லாம் மாபாரதப் போர் அமாவசை அன்று துவங்கியதாகக் கருதப்பட்டது. ஆனால் தற்போது இது முழு நிலவு நாளில் தவங்கப்படதைப் பல ஆய்வாளர்களும் ஒப்புக்கொள்கின்றனர். பழங்காலத்திலும் இன்றும் முக்கிய விழாக்கள் எல்லாம் பவுர்ணமியில்தான் நடக்கும். இரவு நேரத்தில் மக்கள் இடம்பெயர்ந்து செல்ல இது பெரிதும் உதவும். தர்மப் போர் நடத்திய மாபாரத காலத்தில் இரவு நேரத்தில் இரு தரப்பினரும் சந்திப்பதும் காயமடைந்தவர்களைக் கவனிப்பதும் எல்லோரும் அறிந்ததே. போர் , முழு நிலவில் துவங்கியிருந்தால் சூரிய கிரஹணம் 13வது நாள் மலையில் நடந்திருக்க முடியும். 13 நாட்களில் இப்படி முழு நிலவும் அமாவாசையும் வந்ததை வியாசர் மீண்டும் மீண்டும் ஒரு அதிசய நிகழ்ச்சியாகக் குறித்து வைத்துள்ளார். எப்படியாகிலும் சூரிய கிரஹணக் குறிப்பும் அதற்குக் கிடைக்கும் புராண அல்லது இதிஹாச விளக்கமும் தமிழ் நாட்டில் எந்த அளவுக்கு இந்த நம்பிக்கைகள் வேரூன்றியிருந்தன எனபதைக் காட்டுகின்றன.

கிரஹண ஆய்வு மேற்கோள்: Dr. B. N. Narahari Achar, Department of Physics, Memphis University, USA; (3) Dr. R. N. Iyengar, Department of Civil Engineering, IISc,Bangalore