வாழ்க்கையில் பிரச்சனைகள் இல்லாதோர் யாரும் இல்லை. கல்யாணம் ஆனவருக்கும் கல்யாணம் ஆகாதவருக்கும், குழந்தை பெற்றவருக்கும் குழந்தையே பெறாதவர்க்கும், பணம் இருப்பவர்க்கும் பணமே இல்லாதவர்க்கும், வேலை இருப்பவர்க்கும் வேலையே இல்லாதவர்க்கும் பிரச்சனைகள் உண்டு. இவைகளைத் தீர்க்க ஒன்று கிருஷ்ணர் ஆகலாம் இல்லையேல் அனுமார் ஆகலாம். அனுமார் ஆனால், அட, குரங்கே ! என்று கேலி செய்வார்கள் என்று நினைக்கலாம். ஆனால் அவர் பிரச்சனைகளைத் தீர்த்த முறையையாவது பின்பற்றலாமே!

கடலைத் தாண்டி சீதையைத் தேடப் போனான் அனுமன். முதலில் அவனுக்கு வந்த தடங்கல் மைநாக பர்வதம் என்னும் மலை. நன்றாக சொகுசாக ஓய்வு எடுக்க அருமையான இடம். நாம் எந்த ஒரு செயலைச் செய்யப் போனாலும் முதலில் அது நமக்கு மிகவும் பிடிக்கும். அதில் சொகுசு கண்டு ஓய்வெடுத்தால் அடுத்த கட்டம் செல்லவே முடியாது. அனுமன் ஏமாறவில்லை. மைநாக பர்வதம் என்ன சொன்னாலும் கேட்காமல், தான் முன் வைத்த காலை பின் வைக்கக் கூடாது என்று மீண்டும் விண்ணில் பறக்கத் துவங்குகிறான். சீதையை தேடிக் கண்டுபிடிப்பது ஒன்றே குறிக்கோள்.

Hanuman
Lord Hanuman

அனுமனுக்கு வந்த இரண்டாவது இடையூறு சுரசா என்னும் அரக்கி. அவள் பயங்கரமான உருவம் உடையவள். நமக்கு வரும் பிரச்சனைகளும் முதலில் பயங்கரமாகத்தானே இருக்கின்றன. அதை எண்ணி, எண்ணித் தூக்கம் கூட கெட்டு விடுகிறது. அனுமன் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் வழி விட மறுக்கிறாள் சுரசா. யாரானாலும் என் வாயில் புகுந்து பின்னர் வெளியேறலாம் என்கிறாள். அதாவது வாயில் புகுந்தால் அவனுடைய கதி சகதி என்பது அவள் கணிப்பு. அனுமன் அதற்கு ஒப்புக் கொண்டு தன் உருவத்தை மேலும் மேலும் பெரிதாக்குகிறான். சுரசாவும் வாயை மேலும் மேலும் பெரிதாக்குகிறாள். அனுமன் திடீரென தனது உருவத்தைச் சுருக்கி வாயில் புகுந்து காது வழியாக வெளியே வந்து ஆகாயத்தில பறந்து விடுகிறான்.

இதிலும் நாம் அனுமன் போல மாறி பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம். சாம, தான, பேத தண்டம் என்னும் சதுர்வித—4 வகையான—உபாயங்களைப் பின்பற்றித் தீர்வு காணலாம். முதலில் சுரசாவிடம் கெஞ்சினான். அவளோ அனுமன் கெஞ்சக் கெஞ்ச மிஞ்சினாள். அவளைக் கோபப்படுத்தி வாயை பிளக்கவைத்து எதிர்பாராத தருணத்தில் எதிர்பாராத விதமாகத் தப்பிக்கிறான். பல விஷயங்களில் நாமும் இப்படித் தீர்வு காண முடியும். வழக்குப் போட்டவனும் நம் மீது குற்றம் சாட்டியவனும் நாம் இப்படித்தான் நடப்போம் என்று நினைக்கும் நேரத்தில் நாம் பெரிய விஷயத்தை சிறிய உருவத்தில் ( சின்ன உபாயம் மூலம்) சந்தித்து அதிலிருந்து நழுவி விடலாம். சுருக்கமாகச் சொன்னால் செஸ் விளையாட்டில் எதிர்பாராத விதமாக காயை நகர்த்தி எதிரியைத் திகைக்கவைப்பது போல இது.

இதற்குப் பின்னர் அனுமன் சந்தித்த இடையூறு சிம்ஹிகை என்னும் அரக்கி. மாயா ஜாலங்களில் வல்லவள். அவள் எல்லோருடைய நிழலையும் அடக்கி ஆள்பவள். அது அவள் மீது பட்டாலே போதும் அவள் நம்மை அடக்கி ஆளமுடியும். அனுமனின் நிழல் கடலில் விழுந்தவுடன் அவனுடைய வேகத்தையே குறைத்துவிடுகிறாள். இதுவரை அனுமன் சந்தித்தவர்கள் அவன் உடலுக்குத் தீங்கு செய்ய எண்ணினார்கள். சிம்ஹிகை அவனது புகழுக்குப் பெயருக்குக் களங்கம் கற்பிக்கப் பார்ப்பதையே நிழல் என்று ராமாயணம் கூறுகிறது. நம் மீது பொறாமை கொண்டவர்கள் நம்மை நியாயமான முறையில் சண்டை போட்டொ, போட்டியிட்டோ வெல்ல முடியாவிட்டால், நம் மீது அலுவலகத்திலோ நம் குடும்பம் பற்றியோ அவதூறுகளைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள் அல்லவா? அதுதான் நிழல் அரக்கி.

சிம்ஹிகையை அனுமன் எப்படிச் சமாளிக்கிறன்? அவளுடைய வாய்க்குள் புகுந்து வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வருகிறான். நமக்கு எதிரான அவதூறு, அவப் பெயர்களைத் தருணம் பார்த்து கிழித்தெறிய வேண்டும் என்பது இதிலிருந்து கற்க வேண்டிய பாடம். இதே நிழலை நம் மனத்திலிருந்து வரும் பொறாமை, கோபம் முதலியனவாகவும் வருணிக்கலாம். மொத்தத்தில் ராமாயணம் எவ்வளவு அழகாக நிழல் அரக்கி என்று சொல்கிறது பாருங்கள்!! அற்புதமான மனோதத்துவ வருணனை.

இதற்குப் பின்னரும் இதற்கு முன்னரும் அனுமன் சந்தித்த எதிரிகள், பிரச்சனைகள் எவ்வளவோ. லங்கினி, ராவணன், சஞ்சீவி மலையைப் பெயர்த்தெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் இப்படி எத்தனையோ சோதனைகளைச் சொல்லலாம். அனுமனின் வாழ்க்கையைப் படிப்பவர்களுக்கு குடும்பம் மற்றும் அலுவலகப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது எளிது. அனுமான் சாலீஸாவைப் படித்தால் மட்டும் போதாது. பொருளை உணரவேண்டும், அதைப் பின்பற்றவேண்டும்.

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு, அயலான் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்

அனுமன் கண்ட எல்லா அரக்கிகள் ,சோதனைகளை ஒருவர் ஆன்மீக முன்னேற்றத்தில் ஏற்படும் சோதனைகள் என்றும் விளக்கலாம், வியாக்கியானம் செய்யலாம்.