அட்சய திருதியை சித்திரை மாத சுக்ல பட்ச திருதியை அன்று கொண்டாடப் படுகிறது. இந்த நாள் திருமாலுக்கு விசேஷமானதாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் தான் பரசுராமர் அவதரித்தார் என்பது கர்ண பரம்பரை செய்தி. த்ரேதா யுகத்தில் இதே நாளில் கங்கை நதி பூமிக்கு வந்ததாகவும் ஒரு வரலாறு உண்டு.

Kodumudi temple
Kodumudi temple

வடமொழியில் அக்ஷய என்பதற்கு குறைவற்ற என்று பொருள். இந்நாள் நல்ல அதிர்ஷ்டமும் வெற்றியும் கொண்டு வரும் என்பது நம்பிக்கை. இன்று செய்யப்படும் தான தருமங்கள் பல மடங்கு புண்ணியத்தைத் தரும். தயிர் சாதம், புது வஸ்திரங்கள் ஆகியவை தானமாகக் கொடுக்கப்படும். இன்று தொடங்கப்படும் தொழில்கள் நன்றாக விருத்தியாகும் என்றும் நம்பப்படுகிறது. ஆனால் வியாபாரத் தந்திரத்தால் இன்று நகைகள் வைரங்கள் வாங்கினால் மேலும் மேலும் கிடைக்கும் என்ற ஆசை ஏற்பட்டு நகைக்கடைகளில் நல்ல வியாபாரம் நடக்கிறது. வங்கிகளுக்கும் கொண்டாட்டம் தான்.

அக்னி நக்ஷத்ரம்

மே மாதத்தில் மிக வெப்பமான பதினான்கு நாட்கள் அக்னி நக்ஷத்ரம் அல்லது கத்திரி வெயில் எனப்படும். வானிலைத் துறையின் நோக்கில் இது ஒரு அறிவியல் நடப்பு இல்லை. ஹிந்து பஞ்சாங்கப்படி இது இந்த வருஷம் மே நான்காம் தேதி முதல் இருபத்தொன்பதாம் தேதி வரை நீடிக்கும்.

முருகப்பெருமானுக்கு உகந்த நாட்கள் இவை. கடம்ப மரங்கள் வாசனைப் பூக்களை வாரித் தருகின்றன. பழனியில் திருவிழாக் காலம் இது. சித்திரையில் கடைசி ஏழு நாட்களும் வைகாசியில் முதல் ஏழு நாட்களும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடம்ப மாலை அணிந்துகொண்டு காலையிலும் பிற்பகலிலும் மலையை கால் நடையாக வலம் வருகிறார்கள். தொன்று தொட்டு வந்திருக்கிற பழக்கம் இது. அக்காலத்திலேயே சித்தர்கள், ரிஷிகள், முனிவர்கள் ஆகியோர் கிரி வலம் செய்திருக்கிறார்கள்.

Pazhani temple
Pazhani temple

கொடுமுடி என்ற ஊரிலிருந்து காவிரி நதியிலிருந்து நீர் எடுத்து தலையில் சுமந்துகொண்டு இசை வாத்தியங்களுடன் பஜனை செய்துகொண்டு பழனிக்கு வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்வார்கள். பழனி கோவிலின் சிவாச்சாரியார்கள் முதலில் கொடுமுடியிலிருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.

Kodumudi Kaveri River
Kodumudi Kaveri River