நான்கு திருடர்கள் கூட்டாக பொன்னும் பொருளும் திருடிக்கொண்டு வந்தார்கள். அவைகள் அனைத்தையும் ஒரு தோண்டியில் போட்டு நிரப்பி வைத்தார்கள். அதைப் பத்திரமாக ஓர் இடத்தில் வைக்க ஆசைப்பட்டார்கள்.
ஒவ்வொருவரும் ஒவ்வோர் இடத்தைச் சொன்னார்கள். ஒருவர் கூட மற்றொருவர் யோசனையை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில் ஒருவருக்கொருவர் நம்பிக்கை இல்லாமல் இருந்தனர். கடைசியாக நால்வரில் ஒருவன், "நாம் வழக்கமாகச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோமே ஒரு கிழவி வீட்டில் அவளிடம் அதைக் கொடுத்து வைப்போம். நல்ல கிழவி. பத்திரமாகக் காப்பாற்றி வைப்பாள். நாம் நால்வரும் ஒன்றாகச் சேர்ந்து போய் கேட்டால் மட்டுமே தோண்டியைக் கொடுக்கச் சொல்லி அவளிடம் சொல்லுவோம்" என்றான்.
மற்ற மூவரும் நாலாமவன் சொன்ன கருத்தை ஏற்றுக் கொண்டார்கள். நால்வரும் பாட்டியிடம் போனார்கள். "பாட்டி, நாங்கள் நால்வரும் பல நாட்களாக உழைத்துப் பாடுபட்டுக் கொஞ்சம் பொருள் சேர்த்திருக்கிறோம். அதை இந்தத் தோண்டியில் போட்டு வைத்திருக்கிறோம். இன்னும் சிறிது காலம் இந்த ஊரில் தங்க வேண்டியுள்ளது. அதற்குப் பிறகு இந்த ஊரை விட்டு நாங்கள் சென்று விடுவோம். அதுவரை இந்தக் குடத்தைப் பத்திரமாகக் காப்பாற்றி வைத்திருந்து நாங்கள் போகும் போது கொடுக்கவும். ஆனால் ஒரு நிபந்தனை. நாங்கள் நால்வரும் வந்து கேட்டால் தான் நீ இந்தத் தோண்டியைத் தர வேண்டும். தனியாக யார் வந்து கேட்டாலும் நீ கொடுக்கக் கூடாது. ஏனென்றால் இதில் உள்ள பொருள் அனைத்தும் எங்கள் நால்வருக்கும் சொந்தம்" என்றார்கள்.
பாட்டியும் தோண்டியை வாங்கி வைத்துக் கொண்டு அவர்கள் சொன்னவாரே நால்வரும் வந்து கேட்கும் போது தோண்டியைத் தருவதாகக் கூறினாள்.
சில நாட்கள் சென்றன.
ஒரு நாள் பாட்டி வீட்டில் நால்வரும் சாப்பிட்டு விட்டுச் சற்று தூரத்தில் இருந்த ஒரு மரத்தடியில் இளைப்பாறிக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது அந்த வழியாக மோர் விற்கும் பெண்மணி ஒருத்தி மோர் பானையுடன் வந்தாள். அவளைப் பார்த்ததும் திருடர்களில் ஒருவன், "அண்ணே தாகமாக இருக்கிறது. மோர் சாப்பிடலாமா?" என்று கேட்டான்.
மற்றவர்கள் சரி என்று கூறவே மோர்க்காரியைக் கூப்பிட்டு ஆளுக்கு ஒரு குவளை வாங்கிச் சாப்பிட்டனர்.
"அண்ணே, மோர் நன்றாக இருக்கிறது. இந்த அம்மாளிடம் இருக்கும் மொத்த மோரையும் வாங்கி வைத்துக் கொண்டால் தாகம் எடுக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்கலாம்" என்றான் ஒருவன்.
"அது சரி, மொத்த மோரையும் வாங்குவதற்கு நம்மிடம் பானை எதுவும் இல்லையே!" என்றான் ஒரு திருடன்.
"ஏன் நாம் வழக்கமாகச் சாப்பிடும் பாட்டியிடம் ஒரு தோண்டி வாங்கி வரச் சொல்லுவோம்" என்று சொல்லிய மற்றொரு திருடன் தன் பக்கதில் இருந்த திருடனிடம், "நீ போய்ப் பாட்டியிடம் ஒரு தோண்டி வாங்கி வா" என்றான்.
அந்த நொடியில் பாட்டி வீட்டிற்குச் சென்ற திருடனின் மனதில் ஒரு சூழ்ச்சி தோன்றியது. பாட்டியிடம், "பாட்டி நாங்கள் உன்னிடம் கொடுத்து வைத்தோமே, அந்தத் தோண்டியை வாங்கி வரச் சொன்னார்கள்" என்றான்.
"உன்னிடம் எப்படித் தர முடியும்? நீங்கள் நால்வரும் வந்து கேட்டால் தானே கொடுக்கச் சொன்னீர்கள். இப்போது நீ மட்டும் தனியாக வந்து கேட்கிறாயே!" என்றாள் பாட்டி.
"என் பேச்சில் நம்பிக்கையில்லையா பாட்டி, அதோ அந்த மரத்தடியில் தான் எங்கள் நண்பர்கள் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். நீ வேண்டுமானால் கொஞ்சம் வெளியே வா. அவர்களையே சொல்லச் சொல்கிறேன்." என்றான் அந்தத் திருடன்.
பாட்டி குடிசைக்கு வெளியே வந்தாள்.
திருடன் மரத்தடியில் உட்கார்ந்திருக்கும் மூன்று திருடர்களைப் பார்த்து, "பாட்டி தரமாட்டேனென்கிறாள்" என்று உரக்கக் கத்தினான்.
மரத்தடியில் உட்கார்ந்திருந்த மூவரும் "அவனிடம் கொடுத்தனுப்பு பாட்டி" என்றார்கள்.
பாட்டி "தோண்டியா?" என்று கேட்டாள்.
"ஆமாம் பாட்டி தோண்டிதான். சீக்கிரம் கொடுட்தனுப்பு" என்று மூவரும் பாட்டிக்குக் கேட்கும் படியாகக் கத்தினார்கள்.
பாட்டி உள்ளே சென்று பொன்னும் பொருளும் அடங்கிய தோண்டியைக் கொண்டு வந்து ஏமாற்றுக்காரத் திருடனிடம் கொடுத்தாள்.
தோண்டியை வாங்கிக்கொண்ட ஏமாற்றுக்காரத் திருடன் வேறு வழியாக ஓடியே போய் விட்டான்.
வெகுநேரமாகியும் அனுப்பிய ஆள் வராததால் சந்தேகமடைந்த மற்ற மூவரும் பாட்டியின் வீட்டுக்கு வந்தார்கள். "எங்கே அவன்"? என்று பாட்டியிடம் கேட்டார்கள்.
"அவன் அப்போதே தோண்டியை வாங்கிக் கொண்டு போய் விட்டானே!" என்றாள் பாட்டி.
"எந்தத் தோண்டி?" என்றான் மூவரில் ஒருவன்.
"ஏன்? நீங்கள் என்னிடம் கொடுத்து வைத்த தோண்டியைத்தான் வாங்கிக் கொண்டு போனான்" என்றாள் பாட்டி.
இதைக் கேட்டதும் திருடர்கள் மூவரும் பாட்டியை கோபத்துடன் "அதெப்படி நீ அவனிடம் தோண்டியைக் கொடுக்கலாம்? நால்வரும் ஒன்றாக வந்து கேட்டால் தானே நீ கொடுக்க வேண்டும். இப்படி எங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டாயே! அதனால் இந்த நஷ்டத்தை நீதான் ஈடு செய்ய வேண்டும்" என்று கூச்சல் போட்டனர்.
பாட்டி அதற்கு மறுக்கவே அவளை நீதிபதியிடம் அழைத்துச் சென்று முறையிட்டனர்.
வழக்கைக் கேட்ட நீதிபதி, "பாட்டி செய்தது தான் தவறு. ஒப்புக்கொண்டதற்க்கு மாறாக ஒருவனிடம் தோண்டியைக் கொடுத்ததால், அவள் தான் அதற்கு பொறுப்பேற்க்க வேண்டும்" என்று தீர்ப்பளித்தார்.
வழிநெடுக புலம்பிய படியே நடக்க வழியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனான மரியாதை ராமன் அழுது கொண்டே வரும் பாட்டியிடம் நடந்ததைக் கேட்டறிந்தான். நடந்தவை முழுவதையும் கேட்டறிந்த மரியாதை ராமன் "இது என்ன அநியாயமான தீர்ப்பு, இது சரியல்ல" என்று தனது கருத்தை தெரிவித்தான்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த அரசாங்க சேவகர்கள் மன்னரிடம் அப்படியே இந்தச் செய்தியைத் தெரிவித்துவிட்டனர்.
அரசன் மரியாதை ராமனை அழைத்து "தமது அரசவையில் கொடுக்கப்பட்ட தீர்ப்பையே நீ விமர்சனம் செய்தாயாமே! சரி நீ தீர்ப்பு சொல்லியிருந்தால் இந்த வழக்கில் என்ன தீர்ப்பு சொல்லியிருப்பாய்?" என்று கேட்டார்.
"அரசே, நான்கு பேரும் ஒன்றாக வந்து கேட்டால் தானே பாட்டி அந்தத் தோண்டியைக் கொடுக்க வேண்டும். ஆனால் இப்பொழுது மூன்று பேர் தானே வந்து தோண்டியைக் கேட்கிறார்கள். இவர்கள் மூவரும் போய் நாலாவது ஆசாமியையும் தம்முடன் கூட்டிக் கொண்டு வரட்டும். அப்பொழுது பாட்டி நிச்சயம் அவர்கள் கொடுத்த தோண்டியைத் திரும்பக் கொடுத்து விடுவாள்" என்றான்.
சிறுவன் மரியாதைராமன் அளித்த தீர்ப்பைக் கேட்டு மன்னர் மிகவும் வியந்து போனார்.
ராமனை அப்பொழுதே அரசவை நீதிபதியாக நியமித்தார்.