இந்த "கர" வருடம் SIS தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட்டம், ஏப்ரல் 30 அன்று Beaufort Road டில் உள்ள " Church of Ascension Hall " இல் நடைபெற்றது. விழாவிற்கு வந்திருந்தவர்கள் அனைவருக்கும் ஒரு இனிய மாலை பொழுது காத்திருந்தது. நிகழ்ச்சிகள் சரியாக மாலை 6 மணிக்கு தொடங்கியது.
கௌசிக் அகேல்லாவின் மழலைக் குரலில் 'முதாக்கராத்த மோதகம்' என்ற விநாயகர் வாழ்த்துடன் நிகிழ்ச்சிகள் இனிதே தொடங்கியது. திரு.சந்தானம் சுவாமிநாதன் தமிழ் பஞ்சாங்கத்திலிருந்து ஓவ்வொரு ராசிக்கும் "கர" வருட பலன்களை எல்லோருக்கும் எளிதில் புரியும் வண்ணம் தொகுத்து வழங்கினார். தொடர்ந்து திருமதி ஜெயஸ்ரீ சுந்தரேசன், சவிதா சுந்தரேசன் ஆகியோரது நடன நிகழ்ச்சி அரங்கேறியது. தாயும் மகளும் அருமையாக ஆடி கண்களுக்கு நல்ல விருந்து படைத்தனர். இன்றைய காலகட்டத்தில் சாதிக்க நினைக்கும் பலருக்கு திருமதி.ஜெயஸ்ரீ ஒரு நல்ல "inspiration" என்பதில் ஐயமில்லை.
கண்களுக்கான விருந்தைத்தொடர்ந்து செவிகளுக்கு விருந்தாக இசை நிகழ்ச்சி வழங்கினர் ஆதேஷ், சவிதா, ஆதித்யா , ஸ்ரீஹரி மற்றும் பிரசன்னா. அவர்கள் ஸ்ருதியோடு பாடிய பாடல்களுக்கு ஏற்றபடி ஸ்ரீனி பாலாஜி மிருதங்கம் வாசித்து மேலும் மெருகூட்டினார் .
"Dances of TamilNadu " என்ற நடன நிகழ்ச்சியை திருமதி சத்யா நடனமமைத்து அழகாக தொகுத்து வழங்கினார். அவர் தேர்வு செய்த பாடல்கள் ஒவ்வொன்றும் அருமை என்றால் அந்தப் பாடல்களுக்கு ஏற்றபடி ஆடிய குழந்தைகள் ஆடிய ஆட்டம் எல்லோரையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியது. "கர" வருடத்தை களிப்புடன் அழகாக வரவேற்றார் சம்யுக்தா. அபிநந்தன் மற்றும் தேஜஸ், முருகனுக்கு "காவடி" எடுத்து அனைவரையும் பரவசப்படுத்தினார்கள்.ஷ்ரேயா கொஞ்சும் முகத்தோடு குறத்தியாக வந்து குறி சொல்லி அனைவரது உள்ளத்தையும் கவர்ந்தார். கலக்கலாக வந்து கரகாட்டம் ஆடி எல்லோரையும் கலக்கினார் சஹானா.வில்லாக வளைந்து, தெம்மாங்கு தெருக்கூத்து ஆடி "ஜில் ஜில் ரமாமணி"க்கு சவால் விட்டார் சாஹித்யா. சௌஜன்யா, அபராஜிதா மற்றும் அபிநயா கிராமிய நடனங்கள் ஆடி நம் மனதை கொள்ளை கொண்டார்கள்.
இதனைதொடர்ந்து திரு. சிவராமன் எழுதி இயக்கிய "All is Well" என்ற நாடகம் அரங்கேறியது. சாப்பிடும் பொருள்களில் ஒன்றான "வடாம்"ஐ கருவாக வைத்து அவர் கற்பனை நயத்தோடு அமைத்த நாடகத்திற்கு அந்தந்த கதாப்பாத்திரமாகவே மாறி உயிர் கொடுத்தவர்கள் வெங்கட், மைதிலி வெங்கட், சத்யா, சுனிதா சத்யா மற்றும் Dr .சந்தோஷ். இந்த நாடகத்தின் "production manager " திருமதி.கீதா சிவராமன் ஸ்கிரிப்ட்ஐ வைத்துக்கொண்டு நாடகம் நன்றாக வர வேண்டுமே என்று கலவரத்தோடு மேடை ஓரமாக நின்றுகொண்டு இருந்தது ரசிக்கும்படி இருந்தது.
இறுதியாக "Karaoke " நிகழ்ச்சியில் ஹிந்தி பாடல்களைப்பாடிய ஹரிஷ் மற்றும் வினிதா தம்பதியினரும், தமிழ் பாடல்களைப்பாடிய அஜீத் மற்றும் தீபா தம்பதியினரும் தாளம் தவறாமல் பாடி பார்வையாளர்களை தாளம் போட வைத்தனர். எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் சிறுவன் ரிஷி அஜீத் மேடை ஏறி பாடிய மழலைப்பாடல் பார்வையாளர்களுக்கு ஒரு ஊக்கப்பரிசாக (incentive) அமைந்தது.
நிகழ்ச்சிகளை திரு.கடவாசல் கார்த்திக் ராகவன் தொகுத்து வழங்கினார். அவர் கலைஞர் கருணாநிதி, 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன், அஜீத்,பாலய்யா, மேஜர் சுந்தர்ராஜன், விஜய், கமல், ரகுவரன், கார்த்திக் மற்றும் ரஜினிகாந்த் போல் பேசி பங்கு பெற்றவர்களை வாழ்த்தி பேசியது புதுமுயற்சியாகவும்,சுவாரஸ்யமாகவும் இருந்தது. இறுதியாக SIS Chairman திரு.நடராஜன் நன்றியுரை கூறினார்.
இவ்வாறு இசை, நடனம், நாடகம் என நம் புலன்களுக்கு விருந்து கிடைத்தபிறகு வயிற்றுக்கும் நல்ல விருந்து கிடைத்தது. நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அனைவரும் மனதும் வயிறும் நிறைந்து சந்தோஷமாக கிளம்பினர். SIS உறுப்பினர்கள் இதேபோல் தரமான நிகழ்சிகளை எதிர்காலத்திலும் கொடுக்கவேண்டுமே என்று எண்ணியதை கண்கூடாக பார்க்க முடிந்தது. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள். இத்தகைய ஒரு இனிய மாலைப்பொழுதை ஏற்பாடு செய்த SIS குழுவினருக்கு மனமார்ந்த நன்றி!
|
Tamil New Year - April 2011 |