அறம் செய்ய விரும்பு

அறம் செய் என்று சொல்லி இருந்தால், வறுமையால் பிறருக்கு உதவமுடியாதார் நிலை என்னவாகும்? அதனால்தான் ஒளவையார், அறம் செய்ய விரும்பு என்றார். விருப்பமில்லாமல் செய்வதைவிட, செய்ய முடியவில்லை என்றாலும், செய்ய வேண்டும் என்று மனதார விரும்புவது மேன்மை,

ஆறுவது சினம்

அப்படி அறம் செய்யும்போது, உதவி கேட்டுப் பலரும் வரக்கூடும். அதனைப் பளுவாக நினைத்துக் கோபம் வந்தவிடக்கூடும். அதனாலேயே, அடுத்ததாக ஆறுவது சினம் என்றார்.

இயல்வது கரவேல்

அப்படித் தருமம் செய்வதனால், கர்வமோ புகழ் பெறும் ஆசையோ வந்துவிடக்கூடாது என்பதற்காகவே, செய்வதை எல்லோருக்கும் விளம்பரப்படுத்தாதே என்றார்.

ஈவது விலக்கேல்

நாம் அறம் செய்வதைப் பார்த்து, மற்றவரும் அறம் செய்தால்,அதனைப் பொறாமையால் தடுக்க வேண்டாம் என்பது அடுத்த வாக்கு!

உடையது விளம்பேல்

சரி, என்னிடம் நிறைய இருக்கிறது, அதனாலே கொடுக்கிறேன் என்று பகட்டு இருக்கக்கூடாது என்பதுதான் உடையது விளம்பேல்.

ஊக்கமது கைவிடேல்

அத்தகைய உயரிய வாழ்க்கை நடத்தும்போது, சோதனைகள் வரலாம். எனினும் அறம் செய்யும் ஊக்கத்தைக் கைவிடக் கூடாது என்பது அடுத்த உரை!

எண் எழுத்து இகழேல்

ஆங்கோர் ஏழைக்கு அறிவு கொடுத்தல் மிகப்பெரிய அறம். அதனால், எண்ணும் எழுத்தும் உயர்த்தும் கல்விப் பணி செய்க!

ஏற்பது இகழ்ச்சி

அவ்வாறு பிறருக்குத் தியாகம் செய்வதை விடுத்து, பலனை எதிர்பார்த்து, அதற்காக கடமை ஏற்பது இகழ்ச்சி!

ஐயம் விட்டு உண்

(அப்படி அறம் செய்தும் எனக்குத் துன்பம் வருகிறதே என்றெல்லாம் குழம்பாமல்) நிச்சயமான மனதுடனே, வாழ்க்கையில் வருவதை ஏற்று அனுபவி (உண்).

ஒப்புர ஒழுகு

அவ்வாறு நல்லோரது எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையில் வாழ்!

ஓதுவது ஒழியேல்

இந்த அறிவினைப் பிறருக்கும் தனக்கும் எப்போதும் கற்பிப்பதை நிறுத்தாதே!

ஒளவியம் பேசேல்

அதனை விடுத்து, மாறான, தவறான கருத்தினைப் பேசாதே!

அஃகஞ் சுருக்கேல்

அத்தகைய உயரிய வாழ்வினால், (அஃகம் = அகம்) உள்ளம் சுருங்காமல், பரந்து இருக்கட்டும்!

ஆத்திசூடி - ஆதாரமாகிய அத்தகைய அறிவுத் தீயினை சூடிக்கொள்!