நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தரும் கொல்லென வேண்டா—நின்று
தளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால் ( வாக்குண்டாம் )
பொருள்: தென்னை மரம் நிலத்திலிருந்து குடித்த தண்ணீரை சுவையுடைய இளநீராக தலை வழியாகத் தருதல் போல, ஒருவர்க்கு உதவி செய்தால் தருணம் வரும்போது மிகுதியாகத் திருப்பிச் செய்வார். ஆகையால் ஒருவர்க்குச் செய்த உதவி எப்போது திருப்பிக் கிடைக்கும் என்று எண்ணத் தேவையே இல்லை.
இந்த அருமையான கருத்தை 1500 ஆண்டுகளுக்கு முன் வடமொழியில் நீதிசதகம் (ஸ்லோகம் : ப்ரதம வயசி ப்லுதம் தோயம்------) எழுதிய பர்த்ருஹரி என்ற புகழ்மிகு கவிஞனும் அழகாகப் பாடிவிட்டான்:
பொருள்: மரம் நட்ட சில ஆண்டுகளுக்கு மட்டுமே நீர் பாய்ச்சுகிறோம். அதற்கு நன்றிக் கடனாக வாழ் நாள் முழுதும் தன் தலையில் பெரிய பாரத்தைச் சுமந்து கொண்டு சுவையான இளநீரைத் தருகிறது தென்னை.
தென்னை மரத்துக்கும் இளநீருக்கும் இப்படி அறிமுகம் தேவை இல்லை. தேங்காய் என்பது கோவில்களிலும் பூஜைகளிலும் உணவிலும் தவிர்க்க முடியாத ஒன்று. இலை முதல் நார் வரை எல்லா பகுதிகளும் பயன் படுவதால் இந்த மரத்தை கற்பக விருட்சமாகக் கருதுவோரும் உண்டு.
தமிழ்நாட்டில் திருத் தெங்கூர், வட குரங்காடு துறை முதலிய கோவில்களில் தல விருட்சமாக விளங்குகிறது. சித்த, ஆயுர்வேத வைத்தியத்தில் தேங்காய் எண்ணை முதல் மரத்தின் பல பகுதிகளும் பயன்படுத்தப்படுகின்றன. கள், சர்க்கரை, கயிறு, கூடை, விசிறி, கட்டில், உத்தரம் என எல்லாம் தந்து மனிதனின் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்து விட்டது.
இளநீர் சூட்டைத் தவிர்க்கும் என்பது உலகறிந்த உண்மை. கோடை காலம் வந்து விட்டால் சாலை ஓரம் முழுதும் மலை போலக் குவித்து, பொழுது சாயும் வரை விறுவிறுப்பாக விற்கின்றனர். இதெல்லாம் பழைய கதை.
புதிய கதை என்னவென்றால் இதை அட்டை டப்பாவில் ( carton) அடைத்து ஜூஸ் போல அமெரிக்கவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் விற்கத் துவங்கி விட்டார்கள். இதன் காரணமாக இதற்கு புது கிராக்கி வந்துவிட்டது. கோகோஸ் ந்யூசிபெரா (cocos nucifera) என்ற தாவரவியல் பெயருடன் உலகின் பெரும்பாலான கடற்கரைகளை அழகுபடுத்தும் மரம் இது.
வெளிநாடுகளில் ஒரு பொருளை விற்கவேண்டும் என்றால் அதன் எடை, அது தயாரிக்கப்பட்ட நாள், எத்தனை நாள் வரை அதைப் பயன்படுத்தலாம், அதில் என்ன என்ன சத்துக்கள் எவ்வளவு இருக்கின்றன என்று எல்லா வற்றையும் எழுத வேண்டும். இப்படி எழுதிய உடனே இளநீருக்கு புது “மவுசு” வந்து விட்டது.
இளநீரில் பொட்டாசியம் மக்னிசியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், தாமிர, கந்தக, இரும்புச் சத்து, வைட்டமின்கள் உண்டு. வாழைப்பழத்தைப் போல இரண்டு மடங்கு பொட்டாசியம் இருக்கிறது. கொழுப்புச் சத்து அறவே இல்லை. சர்க்கரைச் சத்தோ ஆரஞ்சு பழரசம் போன்ற பழ ரசங்களை விட மிகக் குறைவு. வயிற்றிலுள்ள புழுக்களைக் கொல்லும். சிறு நீரகத்தைப் பாதுகாக்கும். சில வகை புரதச் சத்து பசும்பாலை விட அதிகம் கொண்டது. குழந்தைகள் முதல் பெரியோர் வரை யாருக்கும் கொடுக்கலாம். சிறு நீரக, குடல் தொற்று நோய்கள், வயிற்றுப் போக்கு எல்லாவற்றுக்கும் மருந்தும் ஆகும்.
தென்னை 5, 6 ஆண்டுகளில் பலன் தரும். பனை மரமோ பலன் தர 30 ஆண்டுகள் ஆகும்.