திராவிடா என்ற ஒரு பெண்ணின் பெயர் மிக மிகப் பழைய பெயராக சம்ஸ்கிருத இலக்கியத்தில் இடம்பெறுகிறது. இவர் திராவிட நாட்டிலிருந்து சென்ற அரச குலப் பெண்ணாக இருக்க வேண்டும். இவர் த்ருணபிந்து என்பவரின் மகள். விஸ்ரவஸ் என்பவரின் தாய். இந்த வம்சங்களை ஆராய்ந்து பர்ஜிட்டர் (parjiter) போன்ற புராண ஆராய்ச்சியாளருடன் ஒப்பிடும் ஆர்.மார்ட்டன் ஸ்மித் (R. Morton Smith: Dates and Dynasties in Earliest India, Motilal Banarsidas) இப்படி வரிசைப்படுத்துகிறார்.

First Dravidan Lady
First Dravidan Lady

த்ராவிடா—விஸ்ரவஸ்—விசால—ஹேமசந்திர—உசந்திர—தூம்ராஸ்வ—ஸ்ரீஞ்சய—சஹதேவ—க்ர்சாஸ்வ—சோமதத்த—ஜனமேஜய—ப்ரமாதி

ப்ரமாதி என்ற மன்னன் தசரதனின் தந்தையான அஜன் காலத்தவன். மார்ட்டன் ஸ்மித் கணக்குப்படி த்ருண பிந்துவின் காலம் கி.மு.1320. இந்த அரசர் வரிசை புராணங்களில் கொடுக்கப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் சுமேரிய, பாபிலோனிய, எகிப்திய கதைகளிலுள்ள மன்னர்களுக்கெல்லாம் காலம் கணித்த பின்னரும் நாம் மட்டும் புத்தர் காலம் (கி.மு ஆறாம் நூற்றாண்டு) முதல் வெள்ளைக்காரர் எழுதிய சரித்திரத்தையே இன்று வரை படித்து வருகிறோம். உண்மையில் ராமர், தசரதர் காலம் எல்லாம் இதற்கும் முன்னிருக்க வேண்டும். ஆனால் மார்ட்டன் ஸ்மித் , பர்ஜிட்டர் போன்றவர்கள் ஒவ்வொரு மன்னனுக்கும் 20 முதல் 30 ஆண்டு மட்டுமே ஒதுக்கியும் கூட அவர்கள் காலம் கி.மு.1300ஐ ஒட்டிச் செல்கிறது!

ஆனால் இதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை. விஜயன் என்ற மன்னன் இந்தியாவின் ஒரிஸ்ஸா/ வங்காளப் பகுதிலிருந்து நாடு கடத்தப் பட்டு இலங்கையை அடைந்தவுடன் அவனுக்கும் அவனுடைய மந்திரிகளுக்கும் மணம் முடிக்க பெண்கள் இல்லை. பாண்டிய நாட்டுப் பெண்கள்தான் அங்கு சென்று அவர்களைக் கல்யாணம் செய்துகொண்டனர் என்று இலங்கை வரலாற்றைக் கூறும் மஹாவம்சம் என்ற நூலில் உள்ளது. இது நடந்தது கி.மு ஐந்தாம் நூற்றாண்டு.

மன்னர்கள் பல நாட்டுப் பெண்களை மணப்பது தொன்று தொட்டு நடந்துவருகிறது. காந்தார (ஆப்கனிஸ்தான்) நாட்டுப் பெண்ணான காந்தாரியை திருதராஷ்ட்ரன் மணந்தான். கேகய (ஆப்கனிஸ்தான் /ஈரான்) நாட்டுப் பெண்ணான கைகேயியை தசரதன் மணந்தான். செல்யூகஸ் நிகடார் என்ற கிரேக்க மன்னனின் மகளை மௌர்ய சந்திர குப்தன் மணந்தான்.

மஹாபாரத வீரன் அர்ஜுனன் மணக்காத இனமே இல்லை. அர்ஜுனன் பாண்டிய குமாரியை மணந்ததாக நாட்டுபுற பாடலும் உண்டு. (அர்ஜுனனும் வந்துவிட்டார் அல்லி ராணி).

2000 ஆண்டுகளுக்கு முன் அகத்திய மகரிஷி தென்கிழக்காசிய ( நாக நாட்டு) மங்கையை மணந்து அங்கு இந்து சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தார். அது முஸ்லீம்கள் வரும் வரை 1300 ஆண்டுகளுக்கு நீடித்தது. ஆனால் லோபமுத்ரா என்ற பெண்ணை மணந்த ரிக் வேத அகத்தியர் வேறு. மணி மேகலை கதையிலும் இதே போல நாகநாட்டு மங்கை பீலிவளையைச் சோழ மன்னன் கிள்ளிவளவன் மணந்த வரலாறு வருகிறது.

பாண்டியர் –குஜராத்தி தொடர்பு

“ஆவஸ்யக சூர்னி” என்ற சமண மத நூல் ஒரு அரிய தகவலைத் தருகிறது. மதுரைக்கும் சவுராஷ்ட்ர தேசத்துக்கும் (குஜராத்தின் ஒரு பகுதி) இடையே தொடர்ந்து கப்பல் போக்குவரத்து இருந்ததாகவும் பாண்டு சேனன் என்ற மதுரை மன்னன் தனது இரண்டு மகள்களுடன் சென்றபோது புயல் காற்று வீசி கப்பல் உடைந்தவுடன் முருகனையும் சிவனையும் வேண்டிக் கொண்டதாகவும் கூறுகிறது. முருகனும் சிவனும் தமிழுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்பதோடு அவர்கள் இருவரும் தமிழ் சங்கத்தில் தமிழ் ஆராய்ந்ததாகவும் நாம் படிக்கிறோம். ஆக, இது சங்க காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி என்றும் கருதலாம். புறநானூற்றில் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்ற மன்னன் கடல் பயணத்தில் இறந்ததையும் நினைவிற்கொள்ள வேண்டும்.

மதுரை மன்னன் மலயத்வஜ பாண்டியன் சூர சேன (குஜராத்) மன்னன் மகளான காஞ்சன மாலாவை மணந்து மீனாட்சியைப் பெற்றெடுத்தான். இதிலிருந்துதான் தற்கால மதுரையின் வரலாறே துவங்குகிறது. மதுரையைச் சுற்றி கி.மு. மூன்றாம் நூற்றாண்டு கல்வெட்டுகள் இருப்பதைக் கருத்தில் கொண்டால் மலயத்வஜன் காலமும் 2000 ஆண்டுகளுக்கு முந்தியதே.

(திராவிடம் என்பதை இப்போது அரசியல்வாதிகள் பயன்படுத்தும் சொல்லுடனும், வெளிநாட்டார், நம் மீது திணித்த ஆரிய திராவிடவாதச் சொல்லுடனும் குழப்பிக் கொள்ளக் கூடாது. சங்க இலக்கியத்திலும் பழைய வடமொழி நூல்களிலும் ஆரியர் என்பது முனிவர்கள் வாழும் பகுதி, வட நாடு, பண்பாடுமிக்கவர்கள் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டது. திராவிடம் என்பது தென் பகுதியைக் குறிக்கும் சொல். இப்போது ஆங்கிலத்தில் மத்திய கிழக்கு, தூரக் கிழக்கு என்றெல்லாம் பெயரிட்டது போல இது ஒரு நிலவியல் சொல்.)

தசரதன் எழுதிய கடிதங்கள்

எகிப்து நாட்டு அரசனுக்கு இரண்டு பெண்களை மணம் முடித்த தசரதன் (Tushratta கி.மு.1354) என்ற மன்னனின் கடிதங்கள் மிகவும் புகழ் வாய்ந்த கடிதங்கள். அவை 3500 ஆண்டுகளுக்கு முன் எகிப்திய மன்னனுக்கு எழுதப்பட்ட கடிதங்கள். இவை விக்கி பீடியா போன்ற தளங்களில் முழு விவரங்களுடன் கிடைக்கும். மிட்டன்னி மன்னனான தசரதன் தனது சகோதரி ஜிலுகிபாவையும்(Gilukhipa), மகள் ததுகிபாவையும்(Tadukhipa) எகிப்பதிய மன்னன் மூன்றாம் அமணதேவனுக்கு( Amenhotep III) மணம் முடித்தான். இதற்குப் பின் அவன் எழுதிய 10 கடிதங்கள் மிகவும் சுவையானவை. இப்பொது கியூனிபார்ம் எழுத்தில் மியூசியத்தில் உள்ளன. நமக்குத் தெரிந்து 4, 5 தசரதன்கள் இருப்பதால் இவர் ராமாயண தசரதனுக்கு முந்தியவரா பிந்தியவரா என்பது ஆய்வுக்குரிய விஷயம். மிக மிகப் பழமையான கலப்பின கல்யாணம் இதுதான். எகிப்து நாட்டுக்கே மிஸ்ரம் (கலப்பின) நாடு என்றுதான் பெயர்.

வட மொழி தென் மொழி நூல்கள் ஒரு உண்மையை மறைக்காமல் ஒத்துக் கொள்கின்றன. விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் முதல் அவதாரமான மச்சாவதாரம் தென்னாட்டில்தான் நடந்தது என்ற கதை வடமொழிப் புராணங்களிலேயே உள்ளது. திருஞான சம்பந்தரும் அவர் பிறந்த சீர்காழியைத் “தோணிபுரம்” (Boat City) என்றும் பிரளய காலத்தில் தோனி (Noak’s Ark) ஒதுங்கிய இடம் என்றும் பாடுகிறார். கடல் கோளும் சுனாமியும் சங்க இலக்கியத்தில் பல இடங்களில் குறிப்பிடப் படுகிறது. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு பார்க்கையில் தென்னாட்டு / திராவிட ராணிகள் பல நாடுகளுக்குச் சென்றது உண்மையே என்று அடித்துக் கூறலாம்.

தமிழ் இலக்கியங்களில் தென்னவன் என்ற சொல் யமனையும் பாண்டியனையும் ராவணனையும் குறிக்கும். இலங்கை ராவணன் , மிதிலைப் (பீஹார்- நேபாள எல்லை ) பெண்ணான சீதையைக் குறிவைத்ததும் இதனால் அன்றோ. ராமனுக்கெல்லாம் முன்னோனான அஜன் -- இந்துமதி ஸ்வயம்வரத்துக்கு பாண்டிய மன்னனும் வந்ததாக புகழ் பெற்ற கவிஞன் காளிதாசனும் பாடுகிறான். அவனும் 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவன். ஆக இது எல்லோருக்கும் தெரிந்த ஒரு வழக்குதான்.

திராவிடம் என்னும் நிலப்பரப்பைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் பல நாட்டு மக்களை மணந்து இணக்கமாக வாழ்ந்ததும், எந்த வேறுபாடும் இல்லாமல் மனித இனம் ஒன்றே என்ற கொள்கையை நிலை நாட்டி, புகழ் பரப்பியதும் இதனால் தெள்ளிதின் விளங்கும். இதை மேலும் ஆராய்ந்தால் புதிய செய்திகள் வெளியாகும்.

நண்பர்கள் கொடுத்த தகவல்:

ஒரிசாவின் தலைநகரமான புவநேஸ்வரின் பழைய பெயர் ஏகாம்பர சேத்திரம். அதன் முதல் மன்னனாக திராமிளா என்பவனை குறிபிடுகிறார்கள் ஒரிசாவின் வரலாறு என்ற நூலில் திரு கி சீ பணிக்கிறாய் கூட அவன் தென்னகத்தில் இருந்து தான் வந்தவன் என்று உறுதி படக் கூறுகிறார்.