நவராத்திரி விழா செப்டம்பர் 28 தேதியிலிருந்து அக்டோபர் 6 தேதி வரை கொண்டாடப்படுகிறது. மகாசக்தியின் பல வடிவங்களை இந்த ஒன்பது நாட்களில் வழிபடுகிறோம். முதல் மூன்று நாட்களில் துர்காவாகவும் அடுத்த மூன்று நாட்களில் திருமகளாகவும் கடைசி மூன்று நாட்களில் அன்னையை கலைமகளாகவும் பூஜிக்கிறோம். தமிழ் நாட்டில் கொலு வைத்துப் பல தெய்வப் பிரதிமைகளை அதில் அடுக்கி தினமும் ஸ்லோகங்களையும் அர்ச்சனைகளையும் படித்துப் பூஜை செய்வர். கொலுவுக்கு வருகை தரும் பெண்களுக்கு சுண்டல், குங்குமம் போன்ற மங்கலப் பொருட்கள் , ஏனைய பிரசாதங்கள் கொடுப்பார்கள்.

சரஸ்வதி பூஜையுடன் ஆயுத பூஜையும் நடைபெறும். வீட்டில் நாம் பயன் படுத்தும் பொருட்கள் , புத்தகங்கள் ஆகியவைகளை மனையில் வைத்து அவைகளுக்கும் பூஜை செய்வார்கள்.

பத்தாவது நாள் விஜயதசமி பூஜை நடைபெறும். அன்று ஒன்பது நாட்கள் நடைபெற்ற பூஜையை நிறைவு செய்வார்கள். கொலுவில் வைத்த பொம்மைகளை அகற்ற ஆரம்பிப்பார்கள். இந்த நன்னாட்களில் லலிதா தேவியை வழிபடுவோம். அன்னையை நம்மோடு வழிபடுபவர்களின் பட்டியலை லலிதா சகஸ்ர நாமத்தில் பார்ப்போம்.

Navarathri Kollu
Navarathri Kollu

சம்பத்கரி என்ற தேவதையின் யானைகள் ( 66 ), மந்த்ரிணி என்னும் தேவதை ( 69 ), சரஸ்வதி ( 123 ), மகா பைரவர் ( 231 ), அறுபத்து நான்கு கோடி யோகினிகள் ( 237 ), ஹரி பிரம்மா இந்திரன் ஆகியோர்கள் ( 297 ) அரசர்களுக்கு எல்லாம் அரசராகிய சிவன் ( 305 ), க்ஷேத்திர பாலகர்களாகிய ஆத்மா சாதகர்கள் ( 345 ) தபஸ்விகள் ( 359 ) , மன்மதன் ( 375 ), சிஷ்டர்கள்( 412 ), திவிஜர்கள் ( 423 ), கௌள மார்க்கத்தினர்கள் ( 441 ), வரதா முதலான சக்திகள் ( 518 ) , விஷ்ணு ( 558 ), பிரதமை முதலான திதிகள் ( 610 ), ரமா ( லக்ஷ்மி ) ( 614 ) மூன்று உலகங்கள் ( 627 ) கந்தர்வர்கள் ( 636 ), லோபா முத்ரா ( 647 ), சூரிய மண்டலத்தில் உள்ளவர்கள் ( 715 ) சனகர் முதலியோர் ( 726 ), ரம்பை முதலிய அப்சரஸ்கள் ( 741 ), வீரர்கள் ( 777 ), மார்த்தாண்ட பைரவர் ( 785 ) என்று பல தரப்பட்டவர்கள் அம்பிகையை ஆராதிக்கிறார்கள் என்று லலிதா சகஸ்ர நாமாவளியில் படிக்கிறோம். ( அடைப்பில் உள்ளவை நாமாவளி எண்கள் ).

நன்றி சுவாமி சித்பவானந்தர்!