லால்குடி ஜெயராமன் சாரைப் பற்றி எழுதுவதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.நாங்கள் இருவரும் லால்குடி கீழ அக்ரஹாரத்தில் வசித்தவர்கள். என் வீட்டிற்கு நான்கு வீடுகள் தள்ளி அவர் இல்லம் இருந்தது. நான் சிறு குழந்தையாக இருந்தபோதே அவர் என்னை அறிவார். இன்றும் அவருடைய தாயார் என்னை அதே அன்புடன் வரவேற்கிறார்.

அவருடைய தந்தையார் திரு கோபால ஐயர் அவரின் குருவாக இருந்தார். மிகவும் கண்டிப்பான மனிதர். சிறுவன் ஜெயராமன் சாதகம் பண்ணும்போது எங்களை எல்லாம் தள்ளிப் போய் விளையாடச் சொல்லுவார். திரு ஜெயராமனை கட்டுக் குடுமியுடன் பார்த்திருக்கிறேன். அவருடைய சகோதரி பத்மாவதியின் திருமணத்திற்குச் சென்றது நினைவில் இருக்கிறது.

Lalgudi Jayaraman
Lalgudi Jayaraman

பிறகு அவர் சென்னைக்குக் குடியேறி விட்டார். நானும் லண்டனுக்கு வந்து விட்டேன். 1971 ல் திரு ஜெயராமன் லண்டனுக்கு வந்தபோது நியு பாண்ட் ஸ்ட்ரீட்டில் இருந்த ஹில் என்ற ஒரு வயலின் கடைக்குச் சென்றோம். கடைக்காரர் ஒரு ச்டாடிவாரியஸ் வயலின் வைத்து இருந்தார். ஜெயராமன் அதை வாசிக்க விரும்பினார். கடைக்காரரிடம் அவருடைய விருப்பத்தைத் தெரிவித்தேன். கடைக்காரருக்கோ ஒரே பயம். நான் கடைக்காரரைச் சாந்தப்படுத்தினேன் . திரு யஹுதி மெனுஹின் இவருடைய திறமையைப் பாராட்டி ஒரு வயலினே பரிசளித்து இருக்கிறார் என்று கூறினேன். கடைக்காரர் மிகுந்த தயக்கத்துடன் ஒரு நிமிஷம் மட்டும் வாசிக்க அனுமதித்தார்.

அந்த ஒரு நிமிஷம் என் வாழ்வில் மறக்க முடியாத நேரம். ச்டாடிவரியஸ் வயலின். வாசிப்பவர் லால்குடி ஜெயராமன். கொடுத்து வைத்த ஆடியன்ஸாக நான் ஒருவன் மட்டும். ( வேண்டுமானால் அரண்டு போன கடைக்காரர் / சிப்பந்திகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள் ) . அந்த ஒரு நிமிஷம் மோஹனம் வெள்ளமாகப் பாய்ந்தது. கடைக்காரரின் பயம் விலகியது என்றே சொல்லவேண்டும்.

அந்த வயலினின் விலையைக் கேட்டோம். 1971 ஆண்டு அதன் மதிப்பு ஒரு மில்லியன் பவுண்டுகள். ( சமீபத்தில் ஒரு ச்டாடிவாரியஸ் வயலின் 9 . 8 மில்லியன் பவுண்டுக்கு விற்கப்பட்டது என்ற செய்தி வெளிவந்தது ).

அடுத்த முறை திரு ஜெயராமன் லண்டன் வந்தபோது என் மனைவியையும் என்னையும் திரு பீம்சென் ஜோஷி அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். திரு ஜெயராமன் மற்றும் அவரோடு வந்த இசைக் கலைஞர்களை பல இடங்களுக்கு அழைத்துச் சென்றோம். விம்பிள்டன் பிள்ளையார் கோவிலில் அவர் முதாக்கராத்த மோதகம் முழுமையாகப் பாடியது நினைவுக்கு வருகிறது.

2009 ஆண்டு சென்னையில் உள்ள லால்குடி மக்கள் சிலர் ( கர்நாடக இசைப் பிரியர்கள் ) திரு ஜெயராமன் வீட்டிற்குச் சென்று அட்வான்சாக அவருடைய எண்பதாவது பிறந்த நாளைக் கொண்டாடினோம் . ஒரு மடல் வாசித்து அளித்துப் பொன்னாடைப் போர்த்திச் சிறப்பித்தோம். அடியேனும் லண்டனிலிருந்து சென்றிருந்தேன். இந்த ஆண்டு ( 2011 ) என் மகன் ரிஷி சர்மாவும் அவருடைய வீட்டிற்குச் சென்றிருந்தான்.

லால்குடி சிறிய ஊர். ஆயினும் பல பிரபலங்களை வெளிக் கொணர்ந்திருக்கிறது. அ.ச.ஞானசம்பந்தன் லால்குடி சுவாமிநாதன் , புலவர் கீரன், திருக்குறள்வேள் வரதராசப்பிள்ளை , லா ச ராமாமிர்தம், மணக்கால் ரங்கராஜன் ஆகியப் பெயர்கள் தமிழ் கூறும் நல்லுலகில் அறியப்படுபவை. ( பட்டியல் முழுமை அடையவில்லை என்றே நினைக்கிறேன் ). சில படங்கள் இணைக்கப் பட்டுள்ளன.