பாரதி யார்? இந்த கேள்வி இன்று பள்ளி வினாத்தாளில் வந்தால் அதற்கு எத்தனை மாணவர்கள் சரியான பதிலை கூறுவார்கள் என்று எனக்கு தெரியாது. சுதந்திரம் வந்த சமயத்தில் பிறந்தவர்களையோ அல்லது சுதந்திர போராட்ட காலத்தில் பிறந்தவர்களையோ கேட்டால், கட்டாயமாக சரியான பதிலாக `மஹாகவி சுப்ரமணிய பாரதி' என்று கூறியிருப்பார்கள்.

Subramanya Bharathiyar
Subramanya Bharathiyar

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்குமுன்னே “வெற்றி எட்டு திக்கும் எட்ட கொட்டு முரசே“ என வீர முழக்கம் செய்த தீர்க்கதரிசி அவர். அன்னாருடைய நினைவு நாள் இந்த மாதம் 21 - ம் தேதி வருவது இந்த அவசர யுகத்தில் எத்தனை பேருக்கு நினைவிற்கு வரும்? இதில் வேடிக்கை என்ன தெரியுமா? பாரதி பிறந்த தேதியும் இறந்த தேதியும் ஒன்றே தான். ஆமாம், அவர் டிசம்பர் 11 , 1882 -இல் பிறந்து, செப்டம்பர் 11 , 1921 - இல் தன் பூதஉடலை நீத்தார். அவர் மரணம் அடைந்த நாளில் கூட அவர் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டோர் 14 பேர் மட்டுமே. இத்தகைய மகா புருஷர்கள் எந்த அங்கீகாரத்தையும் எதிர்பார்த்து பிறப்பதில்லை; வாழ்வதில்லை. அவர்கள் பிறப்பிலும், வாழ்விலும், ஏன் இறப்பிலும் கூட ஒரு பொது நலமே இருக்கும்.

சின்னசவாமிக்கும் லக்ஷ்மி அம்மாளுக்கும் மகனாக பிறந்தார் சுப்பையா என்று சுப்பிரமணிய பாரதி. எட்டயபுர சமஸ்தானத்தில் அவரது சிறு வயதில் நடந்த கவி சம்மேளனத்தில் அவரது கவிதை திறமையை பாராட்டி, அவருக்கு கொடுக்க பட்ட பட்டமே பாரதி. பாரதி என்றால் சரஸ்வதியின் அருள் பெற்றவன் என்று பொருள். அதன் பின்னர் சுப்பையா என்ற பெயர் மறைந்து அவர் சுப்ரமணிய பாரதி என எல்லோராலும் அழைக்கப்பட்டார். இளம் வயதிலேயே தாய் தந்தையரை இழந்த அவர், மேல் நிலை பள்ளிக்கு மேல் படிப்பு தொடர வில்லை. அவரது 14 வயதிலேயே அவருக்கு பால்ய திருமணம் செல்லம்மாவுடன் நடைபெற்றது. இளம் வயதிலேயே அவருக்கு நல்ல இசை தேர்ச்சி இருந்தது. பின்னர் காசிக்கு சென்று ஹிந்தி மற்றும் சமஸ்க்ருதமும் நன்கு கற்றுக்கொண்டார். ஆங்கில புலமையும் அதிகம் உடையவராக, ஷெல்லி, கீட்ஸ் , மில்டன் போன்ற ஆங்கில கவிஞ்சர்களிடம் பெரு மதிப்பும் அவர்கள் கவிதைகளில் தேர்ச்சியும் பெற்றிருந்தார்.

எப்படி ஒரு சிறு தீப்பொறியானது கானகம் முழுவதும் தீப்பற்றிக்கொள்ள காரணமாகிறதோ, அவ்வாறே அவர் சுதேசமித்திரன், இந்தியா போன்ற பத்திரிகைகளில் எழுதி வந்த கட்டுரைகளும், தேசப்பற்றை ஊக்கிவிக்கும் கவிதைகளும் பல்லாயிரக்கணக்கானோர் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட காரணமாக இருந்தன. அன்று வெள்ளையரிடம் அடிமை பட்டு இருந்தோம்; ஆனால் இன்றோ நம்மவரிடமே சிக்கி தினருகின்றோம். அதுவே வித்தியாசம்.

எளிய தமிழில், எத்தனை உணர்ச்சி மிகுந்த தேச பற்று, தேச ஒருமைப்பாடு , மனித நேயம், பெண் விடுதலை, சமுதாய சீர்திருத்தம் பற்றிய பாடல்கள் அவர் பாடியுள்ளார் தெரியுமா?

“வந்தே மாதரம் என்போம் எங்கள் மானிட தாயை வணங்குதும் என்போம்” என்று முதல் முழக்கம் செய்த தமிழர் ஆவார்.

ஜாதிகள் ஆயிரம் இங்கு இருந்தாலும் அதை சாதகமாக பயன்படுத்தி வேற்று நாட்டினர் வந்து புகுதல் என்ன நீதி என்று தைரியமாக கேட்டவர் அவர். அன்னியருக்கு பயந்து, அஞ்சி இருக்கும் கோழைகளுக்கு அறிவுறுத்த “அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே” என்று பாடினார்.

பாரதி தன் நாட்டின் மீது பற்று மட்டுமல்லாமல் அதன் எதிர் காலத்தின் மீது மிகுந்த நம்பிக்கையும் வைத்திருந்தார். இந்த நாடு விடுதலைக்கு பிறகு எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என கனவுகள் பல கண்டார். இன்று இளைஞ்சர்களை கனவு காணுங்கள் என்று நமது மதிப்பிற்குரிய குடியரசு தலைவர் உயர்திரு. அப்துல் கலாம் அவர்கள் கேட்கின்றார் அல்லவா. அதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே கனவு கண்டவர் நம் பாரதி.

“வெள்ளி பனி மலையின் மீது உலாவுவோம் - அடிமேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம்”என்று கனவு கண்டார்.

இன்று பள்ளி கூடங்கள் எல்லாம் பணம் பறிக்கும் சாலைகளாக மாறும் என்பதை தெரிந்து கொள்ளாமலே ”பள்ளி தளம் அனைத்தும் கோயில் செய்குவோம்” என்று மேலும் அவர் கனவு தொடர்கிறது.

தேசிய ஒருமைப்பாட்டில் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்ததால்,

“சிங்க மராட்டியர் தம் கவிதைகட்கே சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்” என்றார் அந்த அப்பாவி தேச பக்தர். இன்று நிலைமை அப்படியா உள்ளது? மனிதனுக்கு அத்யாவசிய தேவையான தண்ணீரை பகிர்ந்து கொள்வதில் கூட நாம் போடும் உள்நாட்டு சண்டைகள் தெரிந்து இருந்தால் அவர் அப்படி பாடி இருக்க மாட்டார்.

“எங்கள் பாரத தேசம் என்று பேர் சொல்லுவோம்” என மார் தட்டிய பொற்காலம் அது. “தாயின் மணிக்கொடி பாரீர் அதை தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்” என மக்களை அழைத்தார்.

பாரத தாயின் மீது அவர் கொண்டிருந்த பற்று அளவிட முடியாதது. நாம் நம் தாயின் மேல் வைத்திருக்கும் பற்றை விட பல மடங்கு மேல். ஒரு சமயம் பாண்டிச்சேரியில், ரயில் கிளம்பிய பிறகு ஓடும் வண்டியில் ஏற முயன்று, தவறி கீழே விழுந்து விட்டார். நாம் என்றால் என்ன செய்திருப்போம்? கூக்குரல் போட்டு, உதவி தேடியிருப்போம்; வண்டி ஓட்டியையும், கார்டையும் வாய் ஓயாமல் திட்டி தீர்த்திருப்போம். அவர் அப்படி ஏதும் செய்யவில்லை. மண்தரையான பிளாட்பாரத்தில் உருண்டு புரண்டார். மண்ணில் முத்தமிட்டார். பார்ப்பவர் அவரை பைத்தியக்காரன் என்றனர். அவரோ, `தாயே உன் பரிசம் கண்டு நான் மெய் சிலிர்த்தேன். என் வாழ்வின் பயனை இன்று கண்டேன் ' என்று ஆடி பாடினார். யுகபுருஷர்கள், நம்மை போன்ற சாதாரணமான மனிதர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவர்கள்.

அப்படிப்பட்டவர், மனித ஒருமைப்பாட்டு பற்றி மிகுந்த கவலை கொண்டார். நம் நாட்டிற்கு விடுதலை கிடைப்பது குறித்து அவர் என்றும் கவலை கொள்ளவில்லை. அப்படி சுதந்திரம் கிடைத்த பிறகு நாம் ஒற்றுமையாக அதை கட்டி காப்போமா என்ற கவலை அவருக்கு இருந்தது. அவர் ஒரு தீர்க்கதரிசி அல்லவா.

“ஒரு தாயின் வயிற்றில் பிறந்தோர் தம்முள் சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே, நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே” என்று அறிவுறுத்தினார். அதை அன்று மக்கள் கேட்டனர். இன்றும் நாம் அந்த அறிவுரையை கேட்க வேண்டியது அதைவிட மிகவும் அவசியம்.

தேச ஒருமைப்பாடு வேண்டுமென்றால், நாம் நம்மில் வேற்றுமை நீங்க வாழ வேண்டும் என்று உறுதியாக நம்பினார். மனிதர்கள் மட்டும் அல்லாமல், “காக்கை குருவி எங்கள் ஜாதி , நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் , நோக்கு திசை எல்லாம் நாமன்றி வேறில்லை” என்று புதிய உலகம் கண்டார். இன்று நாம் அவர் கனவை மெய்யாக்குவது போலவா நடந்து கொள்கிறோம்? இந்தியர்களான நாம் நம்மையே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி இது.

மகாகவியின் மற்றுமொரு சிறப்பு அவர் தன் மீது வைத்திருந்த அசையாத நம்பிக்கை; அது ஆணவம் அல்ல. தன்னால் வேண்டியபடி சுதந்திர போராட்டத்தில், நேரிடையாக கலந்து கொள்ள முடியவில்லையே என்று அவர் பாண்டிச்சேரியில் தங்கியிருந்த நாட்களில் பல முறை நினைத்து வேதனை பட்டது உண்டு. ஒரு முறை பராசக்தியை பார்த்து கேட்கிறார், “நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ சொல்லடி சிவசக்தி , எனை சுடர்மிகு அறிவுடன் படைத்துவிட்டாய்” என்று .

அவ்வாறே ஒவ்வொருவரும், `தான்’ என்று செருக்கு இல்லாமல், அதே சமயம், சுய பச்சாதாபம் இல்லாமல், தன்னம்பிக்கை உள்ளவர்களாக இருக்க வேண்டும். நமக்கே நம் மீது நம்பிக்கை இல்லை என்றால், பிறர் எப்படி நம்மை நம்புவார்கள். இன்று அரசியல் தலைவர்கள், பதவி மோகம் பிடித்து, எத்தனையோ பொய்கள் சொல்லி நம்மை நம்ப வைத்து ஆட்சியை பிடிப்பதில்லையா. அப்படிப்பட்ட பொய்யான தலைவர்களை நம்புவதைவிட நம் உழைப்பில் நம்பிக்கை வைப்பது சால நன்று.

அவரது கட்டுரைகளாலும், கவிதைகளாலும், வீர உணர்ச்சி கொண்டு, பலர் சுதந்திர போராட்டத்தில், ஈடுபட்டாலும், அன்றும் அன்னியருக்கு வால் பிடித்த கோழைகளை, வீணர்களை கண்டு பாரதி உள்ளம் வெதும்புகிறார். “அச்சமும் பேடிமையும் அடிமை சிறுமதியும் உச்சத்திற் கொண்டாரடி – கிளியே, ஊமை சனங்களடி, சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி-கிளியே செம்மை மறந்தாரடி “ இந்த சொல்லடி கேட்டும் திருந்தாதோர் வாழ்ந்துதான் என்ன பயன்?

தமிழ் நாட்டின் பெருமையை உணர்ந்தவராக, “செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே எங்கள் தந்தையர் நாடெனும் போதினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே” என்று பாடினார். அதேபோல் தேசிய ஒருமைபாட்டை உலகுக்கு விளக்கும் வகையில் "பாரத சமுதாயம் வாழ்கவே , முப்பது கோடி ஜனங்களின் முழுமைக்கும் பொது உடமை ஒப்பிலாத சமுதாயம் உலகத்துக்கு ஒரு புதுமை" என உலகத்திற்கு பிரகடனம் செய்தார்.

நாட்டிற்கு மட்டும் விடுதலை வந்தால் அது முழு விடுதலை ஆகாது. இங்கு உள்ள எல்லோருக்கும் உண்மையான விடுதலை வேண்டும் என்று நெஞ்சார விரும்பி “பறையருக்கும் இங்கு தீய புலையருக்கும் விடுதலை பரவரோடு குறவருக்கும் மறவருக்கும் விடுதலை” என்று விடுதலை குரல் கொடுத்தார்.

எனவே இத்தகைய மகா புருஷனை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுமென்றால், அவர் கனவு மெய்பட,

“ஏழை என்றும் அடிமை என்றும் எவனும் இல்லை ஜாதியில்
இழிவு கொண்ட மனிதர் என்பது இந்தியாவில் இல்லையே
வாழி கல்வி செல்வம் எய்தி மனம் மகிழ்ந்து கூடியே
மனிதர் யாவும் ஒரு நிகர் சமானமாக வாழ்வோமே”.