மகாத்மா! என்னவொரு மகாத்தான வார்த்தை! இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் ஈடுபட்டிருந்த ஒவ்வொருவர் இதயத்திலும் நிறைந்திருந்த வார்த்தை! அவர்கள் சோர்ந்து இருந்தபோது அவர்களுக்கு புத்துணர்வு கொடுத்த வார்த்தை! இதற்கு உரிமையானவர் தான் மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி. அவரே பின்னர் எல்லோராலும் `மகாத்மா' என அழைக்கப்பட்டார்! அவருக்கு இந்த பட்டம் ஜெத்பூர் மேயரான திரு. நதும்லால் மேத்தாவினால் 1915-ம் வருடம் ஜனவரி 21-ம் தேதி பெருமையுடன் கொடுக்கப்பட்டது. அன்று முதல் அவர் அன்பர்களுக்கு மகாத்மாவானார். இன்று காந்தி என்ற பெயரை சம்பந்தம் இல்லாத பலரும், அரசியல் ஆதாயத்துடன் உரிமை கொண்டாடுவதால், பின்வரும் காலத்தில், உண்மையான காந்தி யார் என்பதில் குழப்பம் வரக்கூடும். நாம் தான் பார்த்திருக்கிறோமே, ஆத்திசூடி எழுதிய ஒளவையார் யார் என்பதில், இலக்கியவாதிகளிடம் சர்ச்சை இன்றுவரை இருப்பதை. எனவே, இன்று இருக்கும் நிலையில், மகாத்மா என்ற பெயருக்கு போட்டியிட எவரும் இல்லாத உறுதியான காரணத்தால், நான் அந்த மகானை இனி `மகாத்மா’ என்றே அழைப்பதாக முடிவெடுத்துள்ளேன். வாசகர்கள் அதை சரி என்றே ஏற்று கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு முழுவதும் இருக்கின்றது.

மகாத்மாவின் அவசியம் 70-80 வருடங்களுக்கு முன்னால் எந்த அளவுக்கு இருந்தததோ அதைவிட அதிக அளவு இன்று இருக்கிறது என்றால் அது மிகை ஆகாது.

அரசியல் சூதும், லஞ்சமும், ஏமாற்றலும், குடும்ப அரசியலும் தலைவிரித்தாடும் இந்த நாளில், நாம் மகாத்மாவை நினைவில் வைத்திருப்பதற்கு அடையாளமாக இன்றும் இருப்பவை, அவரது சமாதியும், ஒவ்வொரு நீதிமன்றத்திலும் தொங்கும் அவரது படமும், நூறு ரூபாய் நோட்டில் அச்சடிக்கபட்டுள்ள உருவபடமும், தன்னை சுற்றி நடக்கும் அக்கிரமங்களை பார்த்துக்கொண்டே இருக்கும் அவரது சிலைகளும், அவரது வாசகமாக, அரசாங்க வங்கியின் நுழை வாயிலில் ` வாடிக்கையாளர்கள் மிகவும் முக்கியமானவர்கள். அவர்களுக்கு சேவை செய்வது நம் கடமையாகும்' என கடமைக்கு எழுதி வைக்கப்பட அறிவிப்பு பலகையும் தான். இதற்கும் மேலாக அவர் பிறந்த, மற்றும் நினைவு நாளில், மகாத்மா சமாதியில், மலர் வளையம் வைத்து ஒரு சில நிமிடம் மௌனம் சாதித்து தாங்கள் செய்யும், மற்றும் செய்ய போகும் அக்கிரமங்களுக்கு வெட்கி தலை குனிந்து விட்டு பின்னர் அவரை முற்றிலுமாக மறந்து போகும் நம் அரசியல் தலைவர்கள்! இதனால்தான் "நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கேட்ட மனிதரை நினைந்துவிட்டால்” என்று மகாகவி பாடி சென்றாரோ?

மகாத்மாவின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்; உண்மையின் வெளிப்பாடு; சத்தியத்தின் விளக்கம். அவரது சுயசரிதம் அவரது கொள்கை பிடிப்பையும், சத்தியத்தின் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையும், இந்த நாட்டின் மீது வைத்திருந்த பற்றையும் வெளிப்படுத்துவதோடு, அவரது குறைகளையும், தவறுகளையும் மறைக்காது வெளிக்கொணர்கிறது.

நாம் இங்கு இன்றைய நிலையில், இந்தியாவிற்கு, ஏன் இந்த உலகிற்கு அவர் எவ்வளவு அவசியம் என்பதை, அவர் அடிமை இந்தியாவில் சாதித்த ஒரு சிலவற்றை கொண்டு காணப்போகிறோம். அவரது வாழ்க்கை வரலாறு தெரிய வேண்டும் என்றால் இன்று எவ்வளவோ பதிப்பீடுகள் உள்ளன. அவரது அவசியத்தை இன்று நாம் உணர வேண்டுமென்றால், நம் நாட்டு சரித்திரத்தை சற்றே புரட்டி பார்ப்போம்.

வெள்ளையர்களை எதிர்த்து, நானூறு ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு குறுநில மன்னர்கள் அவ்வப்போது போராடி வெற்றி காண முடியாது தோல்வி கண்டனர். காரணம்? நம்மிடையே ஒற்றுமை இல்லாததும், நம்மையே காட்டிகொடுக்கும் கைக்கூலிகள் நம்மிடையே இருந்ததும் தான் காரணம். அந்த சமயத்தில் தான், மகாத்மா, தென்ஆப்பிரிக்காவில் அமைதி முறையில் வெள்ளையர்களை எதிர்த்து போராடி வெற்றி கண்டு இந்தியா திரும்பினார். அவர் வருகை நீரில் மூழ்கிக்கொண்டு இருந்தவனுக்கு சிறு மரக்கட்டை கிடைத்தாற்போல், இங்கு வழி அறியாது பாடுபட்டு கொண்டிருந்த பால கங்காதர திலகர், கோகலே, மோதிலால் நேரு போன்றோருக்கு இருந்தது.

மன்னர்கள் அடைய முடியாத வெற்றியை மகாத்மா பின்னர் அடைய காரணம், அவர் இந்தியாவை ஒன்று படுத்தியது தான். "ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு" என்று பாரதி பாடினார் அல்லவா. அந்த ஒற்றுமை மீண்டும் இங்கு வேண்டும். இந்தியாவிற்கு மட்டும் அல்ல, உலகிற்கே வேண்டும். அதை நமக்கு உணர்த்த மீண்டும் நம்மிடையே ஒரு மகாத்மா வேண்டும்.

நாம் எதையும்சாதிக்க வேண்டும் என்றால், நம்மிடையே உள்ள பல இன, மொழி, சாதி போன்ற வேற்றுமைகளை கடந்து தேச நலன் என்ற நல்லெண்ணம் முன்னிட்டு நிற்க, அதன் முன்னேற்றத்தில் உறுதியான நம்பிக்கை கொள்ள வேண்டும். அந்த நம்பிக்கையை நமக்குள் மீண்டும் எழுப்ப மீண்டும் ஒரு மகாத்மாவை நாம் தேடுகிறோம். நான் இந்தியா குறித்து மட்டும் சொல்லவில்லை. அமெரிக்காவில் எவரோ தும்மினால், மத்ய கிழக்கு நாடுகளிலும், ஆசியாவிலும் பலபேருக்கு ஜலதோஷம் பிடித்துகொள்கிறது அல்லவா. எனவே உலகிற்கே ஒரு மகாத்மாவை நான் தேடுகிறேன். இந்த உலகில் இயற்கை தந்த, தருகின்ற, தரப்போகின்ற வளங்களை அனைவரும் பாதுகாத்து பகிர்ந்து கொண்டு அமைதியுடன் மகிழ்ச்சியாக, அனைவரையும் நமது நண்பர்களாக, எண்ணி வாழ வழி காட்ட உலகிற்கே ஒரு மகாத்மா தேவை.

மகாத்மாவின் சுதந்தர இயக்கத்தின் வெற்றிக்கு ஆணிவேர் அவர் இந்திய மக்களை முழுமையாக புரிந்துகொண்டதுதான். இந்தியாவிற்கு தென் ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பியவுடன், இந்தியாவை, இந்திய மக்களை புரிந்து கொள்ள அவர் ஒரு நீண்ட ரயில் பயணம் மேற்கொண்டார். அந்த ரயில் பயணம் அவர் வாழ்க்கையை முற்றிலும் மாற்றியது. அவர் தோற்றம் மாறியது; மனம் வேதனை பட்டது; வைராக்கியம் பிறந்தது; தன் கடமை என்ன என்பதை அவர் நன்கு உணர்ந்தார். கோட்டு சூட்டுடன் அதுவரை வாழ்ந்து வந்தவர், அவர் சென்ற ரயில், ஒரு ஆற்று பாலத்தில் நின்றபோது, ஆற்றில் ஏழை பெண்கள், தங்கள் உடலை முழுவதும் மறைக்க இயலாது கிழிந்த உடையில் அவதிபடுவதை பார்த்த அவர் வெட்கி தலை குனிந்தார். இந்தியாவின் ஏழ்மையை கண்ணார கண்டார். இப்படி மக்கள் தவிக்கும் போது, தான் படாடோபமாக தேவைக்கு அதிகமாக உடை உடுத்தி வாழ்வதை எண்ணி தன்னையே நொந்து கொண்டார். அந்த நிமிடமே தன் தேவைக்கு அதிகமான உடைகளை அந்த சகோதரிகளுக்கு கொடுத்துவிட, அன்று முதல் அவர் இடையில் ஒரு நாலு முழ வேட்டி கச்சையாக மிளிர்ந்தது. அந்த எளிமை நிறைந்த தாத்தாவை தான் நமக்கு தெரியும். மாற்று உடைகள் நம் பீரோவில் குவிந்து கிடக்கும் போதே கடையில் தொங்குவது கண்ணுக்கு நன்றாக உள்ளது என்ற ஒரே காரணத்தால் நாம் வாங்கி குவிக்கிறோமே. மகாத்மாவோ மாற்று துணி ஒன்றுடனே வாழ்ந்தவர்.

சுற்றுலாவாக நாம் பல இடங்களுக்கு உலகம் முழுவதும் சுற்றுவோமே தவிர, மக்களை, அவர்கள் வாழ்க்கை நிலையை புரிந்துகொள்ள நாம் எப்பொழுதேனும் பயணித்திருக்கிறோமா? அதுதான் மகாத்மாவிற்கும் சராசரி மனிதர்களுக்கும் உள்ள வித்தியாசம்.

அவரது சுதந்திர போராட்டத்தின் முக்கிய ஆயுதமாக அமைந்தது அவரது அமைதி முறையிலான `சத்யாகிரக போராட்டம்,' "கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று செய்குவோம்" என்றார் பாரதி. ஆயுதம் கொண்டு பல குறுநில மன்னர்கள் சாதிக்க முடியாததை அவரது சத்யாகிரக போராட்டம் சாதித்தது. வெள்ளையரை கிடுகிடு என்று ஓடவைத்தது. அதன் வெற்றி கண்டு, உலகில் அதன்பின் பல தலைவர்கள் தங்கள் கையில் அதை ஏந்தினர். அவர்களில் முக்கியமானவர்கள், அமெரிக்காவில் மார்டின் லூதர் கிங் மற்றும், தென் ஆபிரிக்காவில் நெல்சன் மண்டேலா, இன்று மியான்மாரில் சூ குயி, எகிப்தில் சென்ற வருடம் வெற்றிகரமாக நடத்திய அரபு புரட்சியாளர்கள். ஆனாலும் இன்னும் வேறு பலர், ஆயுதம் ஒன்றே தீர்வை கொடுக்கும் என்று எண்ணி, தங்களையே ஆயுதமாக மாற்றிக்கொண்டு ரத்த களரி செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு நல் வழிகாட்ட மீண்டும் இங்கே ஒரு மகாத்மா தேவை. எத்தனையோ மக்கள் வேலை கிடைக்காமல் காத்துகொண்டு இருக்கும் இந்த நாளில், ஒரு வேலைக்கு, ஆள் கிடைக்காமல் அவதிபட்டு கொண்டு இருக்கிறோம். அதுதான் மகாத்மா என்ற பதவி! என்ன கொடுமை அய்யா இது?

அப்படி அவர் செய்த சத்யாகிரக புரட்சிகளில் மிகவும் முக்கியமானது `உப்பு சத்யாகிரகம்'. வெள்ளையர்கள், இந்திய மக்கள் கடலிருந்து, தங்கள் அன்றாட உணவுக்கு தேவையான உப்பை எடுக்க கூடாது என உத்திரவிட்டபோது, அதை எதிர்த்து, மகாத்மா கடலிருந்து உப்பு எடுக்க தொண்டர்கள் பூடை சூழ தண்டி யாத்திரை மேற்கொண்டார். அதே சமயம் நாட்டின் கடல் பகுதியில் வாழும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் (ஆண்,பெண்) கடலை நோக்கி பயணம் மேற்கொண்டனர். நம் தமிழரான மூதரிஞர் திரு.ராஜகோபாலாச்சாரியும் தொண்டர்களுடன் வேதாரண்யம் நோக்கி புறப்பட்டார். இதனால் கோபம் கொண்ட வெள்ளையர், தொண்டர்களை நோக்கி தடியடி பிரயோகம் நடத்தினர். ஆனால் எவரும் எதிர்க்காமல் அடியை வாங்கிக்கொண்டு கீழே விழுந்தனர் அல்லது பயணம் தொடர்ந்தனர். மகாத்மாவும் வேறு பலரும் வெற்றிகரமாக கடலிருந்து உப்பு எடுத்தனர். இது வெள்ளையருக்கு அவர் கொடுத்த பலத்த அடி. அதிலிருந்து அவர்கள் மீளவேயில்லை. ஒரு சிலர் `உப்பு பெறாத விஷயம்’ என்பார்கள் , ஆனால் அது சுதந்திர போராட்டத்தில் உப்பு எவ்வளவு முக்கியம் வாய்ந்தது என்று அவர்களை உணர வைத்தார்.

மகாத்மாவும் வேறு பல தலைவர்களும் , பலஆயிரக்கணக்கான தொண்டர்களும் பல முறை சுதந்திர போராட்டத்தில் சிறை சென்றனர். அவர் நடத்திய போராட்டங்களில் அடுத்த மிக பெரிய போராட்டம் `வெள்ளையனே வெளியேறு' என நாடு முழுவதும் 1942-ல் அவர் மேற்கொண்டது ஆகும். அதன் பலனாக 1947-ல் சுதந்திரம் கிடைத்த போது மகாத்மாவிற்கு, 1942-ல் இருந்த பெரு நம்பிக்கையும் சுதந்திர நாளில் காணப்போகும் மகிழ்வும் இருந்ததா என்று கேட்டால், நிச்சயமாக இல்லை என்று தான் சொல்லவேண்டும். அதற்கு காரணம் அந்த ஐந்து வருட இடைவெளியில் நாட்டில் நடந்த மாற்றங்கள்தான்; தலைவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள்தான்; வெள்ளையர்கள் கையாண்ட அவர்களுக்கே கைவந்த மக்களை பிரிக்கும் கலைதான். ஆம், விடுதலை கிடைத்தது என்ற மகிழ்ச்சியை விட நாடு பிரிவினை ஏற்படுத்திய துயரம் தான் அவரை வெகுவாக ஆட்கொண்டது. நவகாளி படுகொலைகள் அவர் இந்துக்கள், முகமதியர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையை தளர்த்தன. சுதந்திரம் அவர் எதிர் பார்த்தார். ஆனால் பிரிவினையால் தான் நமக்கு அது கிடைக்கும் என்ற நிலை வந்த போதே அவர் மனம் ஒடிந்து போனார். பசியால் வாடியவன் இலையில் உணவு வீழ்ந்த போது அதை தொடர்ந்து வந்த நிந்தனைகள் எப்படி அவனை உணவை உண்ண முடியாமல் செய்யுமோ, அப்படி அவர் நிலை இருந்தது இங்கே மக்கள் சுதந்திரம் கிடைத்த மகிழ்வில் குதூகலித்த போது அங்கே கல்கத்தாவில் ராசா பஜாரில் மீண்டும் உண்ணாவிரதம் மேற்கொண்டார். பின்னர் ஆறு மாதங்களுக்கு பிறகு கோட்சேயின் துப்பாக்கி குண்டுகள் அவர் மார்பை துளைத்தபோது, அவர் உடலை தான் சாய்க்க முடிந்தது. அவர் நாடு இரண்டாக பிரிந்த போதே பாதி இறந்து விட்டார்; நவகாளி ரண களையில் மீதி உயிர் பிரிந்து விட்டது.

மகாத்மாவின் கனவு இந்தியாவில், கிராமங்கள் முன்னிலையில் இருந்தன. கிராம வளர்ச்சி தான் இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும் என அவர் உறுதியாக நம்பினார். ஆனால் இன்று வரை அவர் எண்ணத்தை நாம் நிறைவேற்றியதாக தெரியவில்லை. 64 ஆண்டுகளுக்கு பிறகும், கிராமங்கள் அடிப்படை தேவைகளில் பின்தங்கியே உள்ளன. நகரங்களின் வளர்ச்சி நம்மை பிரமிக்க வைத்தாலும், பொருளாதார ஏற்ற தாழ்வுகள் நம்மை மலைக்க செய்கின்றன. மகாத்மா சுதந்திரம் இந்திய மக்கள் அனைவருக்கும் தான் வாங்கி தந்தார்.

இன்று இந்தியாவில், மற்றும் இந்த உலகில் நாமாக ஏற்படுத்திக்கொண்ட நில, நீர் பங்கீட்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காண , நம்மிடையே மகாத்மா இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்க்கிறீர்களா? நானும் அப்படி தான் எண்ணுகிறேன்.

அரசியலில் மக்கள் சேவை என்பதை அழித்து சுயநலம்; பதவி மோகம் என்பவை குடி கொண்டுள்ளன; ஜனநாயகம் சர்வ சாதாரணமான பொருள் ஆகிவிட்டது; லஞ்சம், ஜாதி சண்டை பெருகிவிட்டன; பிற மத நம்பிக்கையை மதிக்கும் தன்மை, மங்கிவிட்டது. ஒரு காலத்தில் பஞ்சத்தில் உணவுக்கு கை ஏந்தி நின்றோம்; ஆனால் இன்றோ நம்மிடையே உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் தலைவர்களை நோக்கி இருக்கின்றோம்; அவர்களை குறை கூறி, வேறு ஒருவரை கொண்டு வந்தால், இவர்களைவிட அவரே மேல் என சொல்லும்படி செய்து விடுகின்றனர். உலகெங்கும் இதே பிரச்சனை. பதவி மனிதனை மாற்றிவிடுகின்றது. சமீபத்தில் சுதந்திரம் பெற்ற நாட்டிலும் இதே பிரச்சனை; இருநூற்று முப்பத்தாறு ஆண்டுகளுக்கு முன் சுதந்திரம் பெற்ற வல்லரசு நாட்டிலும் இதே பிரச்சனை. இதற்கு தீர்வு தான் என்ன?

கீதையில் சொன்னது போல், எப்பொழுதெல்லாம் தர்மம் அழிகிறதோ அப்பொழுதெல்லாம் கடவுள் அவதாரம் செய்வார் என்று நம்பி வானத்தை அண்ணாந்து பார்த்துகொண்டு இருக்கும் ஏமாளிகள் நாம். அப்படி இருந்தால் இந்த உலகிற்கு விமோசனம் கிடையாது. இங்கு நாம் ஒன்று உணர வேண்டும். 1869 -ம் வருடம் அக்டோபர் 2-ம் தேதியில், குஜராத்தில் போர்பந்தர் என்ற ஒரு குக்கிராமத்தில், ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த `மோகன் தாஸ் கரம் சந்த்’ எப்படி மகாத்மாவானார் என்பதை சற்று சிந்திக்க வேண்டும். அதற்கு முன் அவர் வாழ்க்கை எப்படி இருந்தது? அவரும் நம்மைபோல எல்லா ஆசாபாசங்களுடன் தானே ஆரம்ப காலத்தில் வாழ்ந்து வந்தார். அவர் எப்படி மகாத்மாவானார்? சிந்தியுங்கள். விடை கிடைக்கும்.

நம் ஒவ்வொருவர் உள்ளும் சாத்தானும் இருக்கிறான்; சாதாரண மனிதனும் இருக்கிறான்; மகாத்மாவும் இருக்கிறார். தென்ஆப்பிரிக்காவில் நடந்த நிகழ்ச்சிகள் அவருள் உள்ள மகாத்மாவை வெளிக் கொணர்ந்தன. எப்படி இந்து மதத்தின் அத்வைத சித்தாந்தம் `பரமாத்மாவும், ஜீவாத்மாவும் ஒன்றே; நாம் ஒவ்வொருவரும் அந்த பரப்பிரம்ம சொருபம்; அதை உணருவதே மோக்ஷம்’ என்று கூறுகிறதோ அதேபோல் நாம் நம்மில் உள்ள மகாத்மாவை வெளிக்கொணர முயற்சிக்க வேண்டும். அப்படி தேடி வெற்றி பெற்றால், இந்த உலகில் ஒரு மகாத்மா என்ன, பல கோடி மகாத்மாக்கள் கிடைப்பார்கள்.

இனியும் ஒரு அவதாரத்தை எதிர்பார்த்து கொண்டிராமல், நாம் நம் பணியை தொடங்குவோம். மகாத்மா நமக்கு காட்டிய வழியை பின்பற்றுவோம்; சமதர்ம சமுதாயத்தை உருவாக்குவோம்; இன, மத சண்டைகளை ஒழிப்போம்; கிராமங்களை வளர்ப்போம்; தெருவிற்கு தெரு கோயில் கட்டுவதில் போட்டியை விடுத்து, பாரதி சொன்னதுபோல் கல்விதலங்களை கோயில்களாக்குவோம்; லஞ்சம் கொடுக்க மாட்டோம்; லஞ்சம் வாங்க மாட்டோம் என உறுதிமொழி எடுப்போம்; நாம் வாழ்ந்து பிறரையும் வாழவைப்போம்; கல்வி தரத்தை உயர்த்துவோம்; உணவு உற்பத்தியை பெருக்குவோம்; நம் முன்னோர்கள் பாடுபட்டு வாங்கிய சுதந்திரத்தை அர்த்தமுளதாக செய்வோம். நம் வரும் சந்ததியினர் வளமாக வாழ சூழ்நிலையை உருவாக்குவோம்.

யார் உண்மையானான வைஷ்ணவன் என 15 -ம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த நரசிம்ம மேத்தா என்ற குஜராத்தி கவிஞர் வெகு அழகாக (மகாத்மாவிற்கு மிகவும் விருப்பமான) `வைஷ்ணவ ஜனதோ' பாடலில் கீழ்வருமாறு கூறுகிறார். "எவன் ஒருவன் வைஷ்ணவனோ அவன் பிறர் துன்பங்களை உணருகிறான் ; பிறருக்கு எப்போதும் நல்லதே செய்கிறான் ,குறிப்பாக துன்பத்தில் இருப்பவர்களுக்கு; அவன் எப்பொழுதும் மனதில் `தான்’ என்ற அஹங்காரம் நுழைய விடமாட்டான்; அவன் சகிப்பு தன்மை உடையவன்; உலகம் முழுவதையும் உயர்வாக எண்ணுபவன்; வார்த்தை தவறாதவன்; அவன் சொல்லும் செயலும் தூய்மையாக இருக்கும்; எல்லோரையும், எல்லா மதத்தையும் சமமாக பார்ப்பவன்; பொறாமையும் பேராசையையும் ஒழித்தவன்" என அவர் வைஷ்ணவனின் குண நலன்களை அடுக்கி கொண்டே போகிறார். இத்தகைய குணங்களை உடையவன் ஒரு வைஷ்ணவன் மட்டும் அல்ல அவன் ஒரு மகாத்மாவும் ஆவான் என நம் பொக்கைவாய் கிழவர் உலகிற்கு நிரூபித்தார்.. இந்த பாடல் அவரை எந்த அளவிற்கு கவர்ந்தது என்றால், அது அவரது மாலை நேர பஜனில் முக்கியமாக ஒவ்வொரு நாளும் பாடப்பட்டது. நம் இசைபேரரசி திருமதி M.S.சுப்பலக்ஷ்மி அவர்களை மகாத்மாவின் அருகில் கொண்டு செல்ல காரணமாக இருந்தது.

நாமும் அப்படிப்பட்ட உண்மை வைஷ்ணவனாக வாழ முயற்சிப்போம்.