"ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று
ஆடுவோமே பள்ளு பாடுவோமே"

என்று சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பே கனவு கண்டார் மகா கவி பாரதியார் .

அவர் கனவு மெய்ப்பட காந்திஜி, கோகலே, வல்லபாய் படேல் , ராஜகோபாலாச்சாரி, சத்யமூர்த்தி போன்ற பல தலைவர்கள் வழி வகுத்து அரும்பாடு பட்ட போதிலும், நமக்கு சுதந்திரம் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களின் சொல்லொணா துயரத்தினாலும், உயிர் தியாகத்தினாலும் கிடைத்தது என்பது தான் உண்மை. தலைவர்களை ஓரளவுக்கேனும் நினைவில் வைத்திருக்கும் நம்மில் பலர், அவர்களது ஆணிவேரான தொண்டர்களை நினைவில் வைத்துக்கொள்வது கிடையாது என்பதும் உண்மையே. பகத் சிங், சந்திரசேகர் ஆசாத், வாஞ்சிநாதன் போன்ற சுதந்திர தியாகிகளை திரைப்படத்தில், நமக்கு தெரிந்த நடிகர்கள் அவ்வப்பொழுது நடித்து காட்டுவதால் ஓரளவுக்கு தெரிந்து இருக்கும். ஆனால், `கொடி காத்த குமரனை’ இந்த தலைமுறையினரில் எவ்வளவு பேருக்கு தெரியும்? அது அவர்கள் தவறு என்று சொல்ல முடியாது. பகட்டும், பதவி மோகமும், ஆணவமும் தலை விரித்தாடும் தலைவர்கள் இடையே உண்மையெல்லாம் ஆடிக்காற்றில் பறந்த அம்மிக்கல் போல ஆகி விட்டது. எனவே இத்தகைய தியாகத்தொண்டர்களின் சரித்திரம் ஓரளவாவது தெரியப்படுத்த வேண்டிய அவசியம் இந்த சுதந்திர திருநாளில் ஏற்பட்டு இருக்கிறது. இதை எனக்கு நியாபகப்படுத்தியவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

1904 - ம் வருடம், அக்டோபர் திங்கள் 4 - ஆம் தேதியில், இன்றைய ஈரோடு மாவட்டம், அன்றைய கோயம்பத்தூர் மாவட்டத்தில், சென்னிமலை என்ற அழகான மலை பிரதேசமான சிறு நகரில் குமாரசாமி என்ற குமரன் அவதரித்தார். மகா புருஷர்கள் பிறப்பதில்லை, நம்மை போல, அவர்கள் அவதரிக்கின்றார்கள் என்பதே சரியாகும். அவரது தந்தையார் பெயர் நாச்சிமுத்து, அன்னையார் பெயர் கருப்பாயி அம்மாள் என்பதாகும். மகாத்மாவின் சொற்பொழிவுகளும், பாரதியாரும் வீர கவிதைகளும் அன்னையார் கருவில் இருக்கும் போதே கேட்டுக்கொண்டு இருந்திருப்பார் போலும். குமரன் இளம் வயதிலேயே நாட்டு பற்று மிகுந்தவராக வளர்ந்தார். அவரது பெற்றோர்களுக்கு அவரைப்பற்றி என்ன என்ன கனவுகள் இருந்திருக்குமோ தெரியாது. குமாரசாமியின் கனவு எப்பொழுதும் நாட்டு விடுதலை பற்றியே இருந்து வந்தது.

நாட்டு பெரும் தலைவர்களின் பேச்சுக்களில் ஆர்வம் கொண்டு அதன்படி நடக்க தன் ஊர் மக்களை ஊக்குவிக்க, திருப்பூரில் `தேச பந்து இளைஞ்சர் அணி’ ஒன்றை துவங்கினார். இங்கு `கழகம்’ என்று சொல்வதை விட `அணி’ என்று சொல்வதே சிறப்பு. ஏனெனில் அர்த்தம் விபரீதமாகி விடும் அல்லவா. அவ்வப்பொழுது, தலைவர்களின் வேண்டுகோள்படி, அஹிம்சை போராட்டத்தில் தானும் ஈடு பட்டு மற்ற தொண்டர்களையும் வழி நடத்தினார், வெகு திறைமையாக. அவர் பெற்றோர்கள் ஈன்ற பொழுதிலும் பெருமை அடைந்தனர்.

இந்த நிலையில், 1932 – ம் வருடம் ஜனவரி 6 - ம் தேதி மகாத்மா காந்திஜி ஆங்கிலேயர்களால் சிறையிடப்படுத்த பட்டார். நாடு கொந்தளித்தது. திருப்பூர் குமரன் அச்சமயம் நொய்யலில் அதை எதிர்த்து போராட்டத்தில் ஈடு பட்டிருந்தார். பின்னர் ஜனவரி 10 ம் தேதி திருப்பூரில் நடந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கி அமைதி ஊர்வலம் ஒன்று நடத்திக்கொண்டு இருந்தார்.

`வந்தே மாதரம், மகாத்மா காந்திஜி வாழ்க’ என்று முழங்கிக்கொண்டே ஊர்வலம் அமைதியாக காவல் நிலையத்தை கடந்து சென்றபோது, யாரும் எதிர்பார்க்காத விதத்தில், திடீர் என்று போலீசார் கூட்டத்தின் மீது சர மாரியாக தடியடி பிரயோகம் நடத்தினர். கூட்டத்தில் பலர் அடி தாங்க முடியாமல் நாலாபுறமும் சிதறி ஓடினர். அந்த நிலையிலும், திருப்பூர் குமரன் எதுவுமே நடக்காததுபோல் தன் கையில் ஏந்தி இருந்த தேச மூவர்ண கொடியை இறுக்கமாக பிடித்துக்கொண்டு முன்னேறி நடந்து கொண்டிருந்தார் இந்த அலட்சியத்தை ஆங்கிலேய போலீசார் பொறுக்க முடியாமால் மேலும் மேலும் அவரை தடியால் பலம் கொண்ட மட்டும் அடித்தனர். குமரனுக்கோ அந்த அடிகள் பூமாலைகளாக விழுந்தன. மண்டை பிளந்து இரத்த ஆறு ஓடியது. இருந்தாலும், குமரன் கைகள் தேச கொடியை மேலும் இருக்கமாக பற்றிக்கொண்டு இருந்தன. வாயோ `வந்தே மாதரம்’ என்று விடாமல் உச்சரித்து கொண்டு இருந்தது. மனம் வலிமை கொண்டு இருந்தாலும் உடல் எவ்வளவு நேரம் தாங்கும்? குமரன் உடல் ஓய்ந்து தரையில் சாய்ந்தது. ஆனால், வந்தே மாதரம் என்ற ஒலி ஓயவில்லை. கீழே விழுந்த நிலையிலும், உயிர் பிரியும் தருணத்திலும், ஓட முயற்சிக்காது, குமரன் மூவர்ண கொடியை, தன் உயிரை காப்பது போல் தன் உடலுடன் இறுக்க அணைத்து கொண்டு இருந்தார். தன் செல்வ மகன் உடல் வேதனையை தாங்க முடியாமல் பாரத அன்னை தன் இரு கரம் நீட்டி கொடி காத்த குமரனை ஏற்றுக்கொண்டாள். இந்த பாக்கியம் எவருக்கு கிடைக்கும்? அன்று பாரத தேச புனித கொடியை காக்க வீர மரணம் அடைந்த கொடி காத்த குமரனை இனி எவரேனும் மறக்க முடியுமோ?

குமரனை போல பல்லாயிரம் இளைஞ்சர்களின் உயர் தியாகத்தில் விளைந்தது தான் இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திர காற்று. அது கிடைக்காமல் இன்றும் வரை போராடி அதே சுதந்திரத்தை சமீபத்தில்தான் அனுபவிக்கும் பாக்கியம் பல அண்டை நாட்டு இளைஞ்சர்கள் அதன் அருமையை உணர்கிறார்கள். அது கிடைக்காமல் இன்னும் போராடிக்கொண்டு இருப்போரையும் நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.

இன்றைய தலை முறையினர் அரும்பாடு பட்டு கிடைத்த சுதந்திரத்தின் அருமை புரிந்து கொள்ள வேண்டும். அது எளிதில் வந்ததல்ல என்பதை உணர்த்துவதே திருப்பூர் குமரன் போன்ற தியாகிகளின் வரலாறு. எவ்வளவு பேர் பாடு பட்டு கிடைத்த சுதந்திரம்? பலரின் இரத்தத்தில் விளைந்த சுதந்திரம். அதன் பலன் நமக்கும் பின்வரும் தலை முறைகளுக்கும் முழுமையாக கிடைக்கும் முன்னே, சுயநலவாதிகளால் அழிந்து விடுமோ என்ற பயம் இருக்கத்தான் இருக்கிறது. அவ்வாறு நடக்க கூடாது என்றால், இந்தியர்களாகிய நம் அனைவருக்கும் (வெளி நாட்டில் இருந்தாலும் சரி) ஒரு முக்கிய கடமை இருக்கிறது. எவ்வாறு அன்று அக்கிரமத்தை எதிர்த்து, காந்தி வழியில் குமரன் போன்றோர் சத்யாகிரக போராட்டம் நடத்தினரோ, அதேபோல் இன்றைய சுதந்திர இந்தியாவிலும் நாம் அக்கிரமத்தை எதிர்த்து, ஊழலை எதிர்த்து, சமுதாய ஏற்ற தாழ்வை எதிர்த்து குரல் எழுப்ப வேண்டும். வேற்றுமை அற்ற சமுதாயம் அமைய ஒன்றாக உழைக்க வேண்டும்.சுதந்திர நாள் மட்டும் இந்த சிந்தனை கொள்ளாது, இந்த சுதந்திர நாளிலிருந்து புது அத்தியாயம் தொடங்குவோம்.

"பாரத சமுதாயம் வாழ்கவே, வாழ்க வாழ்கவே " என்ற பாரதி சொல்படி, அவர் கண்ட சமுதாயம் அமைய இங்கிருந்தே குரல் கொடுப்போம், அங்கிருப்போருக்கு கரம் கை கொடுப்போம்

ஜெய்ஹிந்த்!