ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பதுபோல் ஒவ்வொரு பிரச்சனைக்கும் குறைந்த பட்சம் இரண்டு முற்றிலும் மாறுபட்ட தீர்வுகள் இருப்பதாகத் தோன்றும். அது வெறும் மாயையே. நம் இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் கூட அப்படி இரண்டு வேறுபட்ட மார்க்கத்தை நம் விடுதலை போராட்ட வீரர்கள் கைக்கொண்டார்கள். ஒன்று, மகாத்மாவின் அஹிம்சை வழியில் அமைந்த சத்யாகிரக போராட்டம்; மற்றொன்று, வீரம் பொங்கும் இளைஞ்சர்கள் பொறுமை இழந்து மேற்கொண்ட ஆயுதம் ஏந்திய போராட்டம். இதில் எது இறுதியில் வெற்றி பெற்றது என்பதை சரித்திரம் அறியும். இன்றைக்கும் உலகில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கும் மக்கள் இந்த இரண்டு வழி முறையையும் கையாண்டு வருகின்றனர். இதில் வேதனைப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இரண்டாவது முறையையே பெரும்பாலோனோர் இன்றும்கூட கையாண்டு வருகின்றனர். இது வீட்டிலிருந்து உலகம் வரை பொருந்தும். எனவே அன்று சுதந்திர வேட்கையில் மகாத்மா போன்றோருக்கு எந்த வகையிலும் குறைவில்லாது தேசபக்தி கொண்ட பல இளைஞ்சர்கள் இந்த இரண்டாவது வழியை கையாண்டு போராடினர். அவர்களுக்கு வெற்றி கிடைத்ததா என்றால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நாம் முன்னே சொன்னது போல், அவர்கள் கையாண்ட வழி தான் வேறே தவிர, அவர்களது சுதந்திர வேட்கை எந்த வகையிலும் மற்றவர்களுக்கு குறைந்தது அல்ல. எனவே அவர்களது தியாகத்தை நினைவுகூர்வது இன்று இங்கு மிகவும் அவசியம்.

நாம் இங்கு நினைவு கூறப்போவது 1920-இல் இருந்து 1931 வரை நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட இளம் வீரர்களை பற்றியது தான். ஆம், கையில் ஆயுதம் ஏந்திய பிறகு அவர்கள் வீரர்கள் அல்லவா! இந்தியாவின் சுதந்திர போராட்டத்தின் காலம் 400 ஆண்டுகளுக்கும் மேல் ஆகும். மகாத்மா போராட்டத்திற்கு தலைமை ஏற்கும் வரை, ஏன் அவர் தலைமை ஏற்ற ஆரம்ப காலத்தில் கூட, வெள்ளையரின் அராஜகத்திற்கு, அவர்கள் நடத்திய படுகொலைகளுக்கு தீர்வு, அதற்கு காரணமானவர்களை கொலை செய்வதே என பல வீர இளைஞ்சர்கள் எண்ணி இருந்தனர். பல குறுநில மன்னர்கள் அப்படிதான் எண்ணி போர் செய்து தோல்வி கண்டனர். மக்களிடையே மகாத்மாவின் வழி தான் சரியானது என்று புரிபட காலம் தேவை பட்டது. அந்த இடைவெளியில் நடந்ததை தான் நாம் இங்கு பார்க்க போகிறோம்.

இங்கு நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். இந்த இரண்டு இயக்கங்களின், நோக்கம் என்னவோ ஒன்று தான்; அது இந்தியாவிற்கு வெள்ளையர்களிடமிருந்து விடுதலை. வழி முறை தான் வேறு. வேகம் இருக்கும் இடத்தில் வீரம் தான் பேசும்; விவேகம் இருக்கும் இடத்தில், நிதானம் பேசும். அது தான் வித்தியாசம். அன்று நடந்தது இன்றைக்கும் பொருந்தும். இன்றும் வேகம் வெற்றி பெறாது; விவேகமும், விட்டு கொடுக்கும் தன்மையும் சுயநலமின்மையும் தான் இறுதில் வெல்லும் என்று தெரிந்திருந்தாலும், பல வல்லரசுகளும், பல தனியார் அணிகளும், போர் ஒன்று தான், உயிர் பலி ஒன்று தான் நம் பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கும் என்று பொய்யாக நம்பி தீர்வு காணாமல்,உயிர் சேதம், பொருள் சேதம் செய்துகொண்டு இருக்கிறார்கள்.

என்ன, நம் சுதந்திர போராட்டத்தை பற்றி எழுத சொன்னால், இன்றைய உலக நிலைமையை பற்றி விமரிசிக்கிறீர்களே என்று எண்ணுகிறீர்களா? சம்பந்தம் இருப்பதால் தான் இத்தனை பெரிய முன்னுரை. நாம், நமக்கு சுதந்திரம் கிடைத்து விட்டதாக நம்பி கொண்டு இருக்கிறோம். அது பகல் கனவு. நமக்கு இன்னும் உண்மையான சுதந்திரம் கிடைக்கவில்லை. வெள்ளையர்களுக்கு பதில், நம்மவரே நம்மை சூறையாடி கொண்டு இருக்கின்றனர். ஏழ்மையில் இருந்து இன்னும் பூரண விடுதலை கிடைக்கவில்லை; அறியாமையில் இருந்து பூரண விடுதலை கிடைக்கவில்லை; சுதந்திர காற்று இன்னும் பல கிராமங்களை எட்டவில்லை; கொடும் நோயில் இருந்து பூரண விடுதலை கிடைக்கவில்லை, சொல்லப்போனால், நாம் இயற்கையை எதிர்த்து போராடி அதன் வளங்களை சூறையாடி நோய்களை அதிகரித்து , சுனாமியையும், சூறாவளியையும், அன்றாட நிகழ்வுகளாக மாற்றி விட்டோம் என்பதே உண்மை. மேலும், சமதர்ம சமுதாயம் இன்னும் உருவாகவில்லை; ஏற்ற தாழ்வுகள் அதிகரித்து விட்டன. இப்படி அடுக்கி கொண்டே போகலாம். சற்றே மூச்சு வாங்குகிறது, நிலைமையை எண்ணி பார்த்தால். இப்படி நமக்கு உள்ள பிரச்சனைகளுக்கு நாம் அனைவரும், ஆயுத போராட்டம் நடத்தினால் முடிவு ஏது? சொல்லுங்கள் பார்க்கலாம். எனவே தான், நாம் இங்கு சற்றே அன்று நடந்ததை எண்ணி பார்க்க வேண்டும். பல விஷயங்களை இன்று நாம் கேட்கிறோம்; படிக்கிறோம்; பார்க்கிறோம் அதனால் நமக்கு விவேகம் வருவது இல்லை. எப்படி ஒரு பசு தான் உண்ட புல்லை பின்னர் சாவகாசமாக அசை போடுகிறதோ அதே போல் நாம் கேட்டவற்றை, படித்தவற்றை, பார்த்தவற்றை எண்ணிப் பார்க்க வேண்டும். அதையே தான் நம் உபநிஷத்துகளில், `நிதித்யாசனம்’ என்பார்கள். எண்ணிப்பார்த்து, பூரணமாக உணராதவறை நம் கல்வியால் எந்த பிரயோசனமும் இல்லை.

இங்கு குறிப்பிட்ட புரட்சியாளர்களில் முதன்மையானவர் தியாகி பகத் சிங் ஆவார். அவருடன் கூட்டாக செயல்பட்டு வீர மரணம் அடைந்தவர்களில் மிகவும் முக்கியமானவர்கள் சந்திர சேகர ஆசாத் மற்றும் சுகதேவ் ஆவார்கள். இவர்களால் ஈர்க்கப்பட்டு ஆயுத ஏந்தி புரட்சி செய்த தமிழ் நாட்டு புரட்சியாளர்களை பற்றி அடுத்து வரும் தொடரில் காண்போம்.

பகத் சிங் என்று சொன்னவுடன் அவரது கம்பீரமான முறுக்கு மீசையும், கூர்க்கா தொப்பியும், சிப்பாய் உடையும் கூடிய கம்பீரமான இளைஞ்சன் முகம் தான் நினைவிற்கு வரும். அந்த முகத்தை பார்ப்பவற்கே வீரம் வரும் என்றால், அந்த காலத்தில் அவருடன் சேர்ந்து போராடியவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்? செப்டெம்பர் 28- ம் தேதி 1907 வருடம் பிறந்த பகத் சிங் வாழ்ந்த காலம் 23 தான். ஆனால் அவரது தியாகம் அவர் மறைந்து 80 ஆண்டுகளுக்கு பிறகும் அப்படியே இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். சீக்கிய குடும்பத்தில் பிறந்தவருக்கு வீரத்துக்கா பஞ்சம்? மீன் குட்டிக்கு நீந்தவா சொல்லி கொடுக்க வேண்டும்? வீரம் அவர் ரத்தத்தில் ஊறிக்கிடந்தது. அப்படிப்பட்டவர் அவரது 12 -ம் வயதில், ஜாலியன்வாலா படுகொலை நடந்த இடத்தை பார்க்க சென்ற போது அவர் மனம் கொதித்து எழுந்தது. அன்றே சபதம் எடுத்து கொண்டார், வெள்ளையர்களுக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும் என்று.

ஆரம்ப காலத்தில், அவர் எல்லா தொண்டர்களையும் போல மகாத்மாவின் போராட்டத்தில் ஆர்வம் கொண்டு அவர் தலைமையில் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டார். ஆனால், தன் கண்முண் வெள்ளையர்கள் நடத்தும் கொடுமைகளைக்காண சகிக்காமல், சத்தியாகிரக போராட்டமுறை, வெள்ளையர்களின் கல்நெஞ்சத்தை உருக்காது என கருத்து கொண்டார். மெதுவாக அவர் மகாத்மாவின் போராட்ட இயக்கத்திலிருந்து வெளி ஏறினார். புயல் கண்ட நடு கடலில், பாய்மரம் கிழிந்த கப்பல் தவிப்பது போல் அவர் செய்வது அறியாது தவித்தார். அவரது வீரம் மிகுந்த மனத்திற்கு மகாத்மாவின் வழி முறை சரியானதாக படவில்லை. இளம் கன்று பயம் அறியாது அல்லவா. தன் உணர்வுகளுக்கு ஏற்ற அமைப்பை தேடினார். அப்பொழுதுதான் அவர் 1922 -ல் ஹிந்துஸ்தான் ஜனநாயக புரட்சி கழகத்தில் சேர்ந்தார். தன் ஈடுபட்டால், படிப்படியாக உயர்ந்து, விரைவிலேயே அதன் முக்கிய தலைவர்களில் ஒருவரானார்.

பின்னர் அந்த இயக்கத்திலிருந்து வெளியேறி, சந்திர சந்திரசேகர் ஆசாத் மற்றும் சுகதேவ் என்ற இரு வீர இளைஞ்சர்களுடன் இணைந்து, 1928 -ம் வருடம் டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் ஹிந்துஸ்தான் சமதர்ம ஜனநாயக புரட்சி என்ற புதிய இயக்கத்தை தோற்றுவித்து அதன் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அப்பொழுது அவருக்கு வயது 19 தான். 1928-லிருந்து 1931 வரை (அவர் இறக்கும் வரை) அந்த இயக்கம் ஆயுதம் ஏந்திய போராட்டமாக அமைந்தது. இரண்டு முறை மத்திய சட்டசபை கூட்டம் நடக்கும் போது குண்டு வீச முற்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் 116 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து நாட்டு மக்களின் கவனத்தை கவர்ந்தார். அவர் லாலா லஜ்பத் ராய் அவர்களின் தீவீர பக்தர் . லாலா லஐ்பத் ராய் மீது போலீசார் தடியடி பிரயோகம் செய்து அவர் போலீசாரால் தாக்கப்பட்டு மரணம் அடைந்தது கண்டு கொதித்து எழுந்தார். 1928-ம் வருடம் டிசம்பர் 17-ம் தேதி சான்டேர்ஸ் லாகூர் போலீஸ் தலைமை நிலையத்திலிருந்து வெளியே வந்து தன் மோட்டார் சைக்கிளை எடுத்து வெளியே வரும் பொழுது பகத் சிங் இயக்கத்தை சார்ந்த ராஜ குரு அவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றார். பகத் சிங் போலீஸ் அதிகாரி ஜான் சாண்டர்ஸ்-ஐ கொலைசெய்ததாக கைது செய்யப்பட்டார். இவருடன் சேர்ந்து, இவர் தோழர்களான ராஜ குரு மற்றும் சுகதேவும் கைது செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, மூவரும் மார்ச் 23-ம் தேதி 1931 வருடம் பொது மக்கள் முன்னிலையில் கொடூரமாக தூக்கில் இடப்பட்டார் . அவர் முகத்தில் அப்பொழுது கூட மரண பயம் தெரியவில்லை. பாரத மாதாவின் விடுதலை பணியில் தன்னால் ஒரு சிறு சேவை செய்ய முடிந்ததே என்ற திருப்தி அவர் முகத்தில் தெரிந்தது. அவ்வளவு உயர்ந்தது அவரது நாட்டு பற்று.

பகத் சிங்குடன் கைகோர்த்து போராடிய சந்திரசேகர் ஆசாத்தும் 1931 -ம் வருடம் போலீசாருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் பிப்ரவரி 27-ம் தேதி சுட்டு கொல்லப்பட்டார்.

இப்படியாக அதன் தலைவர்கள் ஒவ்வொருவராக உயிர் இழக்க, ஹிந்துஸ்தான் சமதர்ம ஜனநாயக இயக்கமும் மடிந்தது. இந்த இயக்கத்தின் பாதிப்பு தமிழ் நாட்டிலும் ஓரளவு இருந்தது. அது என்ன என்பதை அடுத்த தொடரில் காண்போம்.