உயிர் பிரிந்து மேலகத்தினை நோக்கி பறந்து சென்று ஈராண்டு காலம். நமதன்பு பாட்டி இனி வையகத்திற்கு மீள இறங்கி – இரங்கி – எமக்கு தரிசனம் தரமாட்டாரோ என்றேயேங்கி நிற்க, இனிய கனவொன்று கண்டேன்……

அம்மந்தி பொழுது . அகம் நிறைய நல்லுறவினரும் விருந்தாளிகளும் சிலர். சிறிய மேடையொன்றில் அமர்ந்திருந்தவாறு சுற்றத்தைப் பார்த்துக்கொண்டு கலகலப்புமிக்க பேச்சுக்களையும் இரசித்து கொண்டிருந்தேன். அந்நேரம் சற்றே இடப்பக்கம் தலை திரும்பி பார்க்க பாட்டி என்னருகே வந்து உட்கார்ந்திருந்தார்! உள்ளம் குளிர்ந்தது. உச்சி நெகிழ்ந்தது. மெய் சிலிர்த்தது. வாழும் நாளில் எங்ஙனம் இருந்தாரோ அங்ஙனமே தத்ரூபமென ஜகத்ஜ்யோதியாய்ப் பொற்காட்சி அளித்தார் நம் செல்லக் குஞ்சா பாட்டி! இறந்து சில வாரங்களுக்குள்ளே இதே போன்று பாட்டி இரண்டு மூன்று முறை ஏற்கெனவே என் ஸ்வப்னத்தில் வந்திருந்தார் என்றதனாலோ என்னவோ மிக்க மகிழ்வுற்ற எனக்கு பெரிதும் வியப்பு என்று ஏதுமில்லை. பளீரென்று சற்று முதலே நீராடிவிட்டு வந்திறங்கியிருந்தாற்போல் மங்கா மங்களகரமான தங்க அரளி மஞ்சள் நிறத்துடன் கருமையும் கலந்த பருத்தி நூல் சுங்குடி மடிதாறினை க் கட்டியிருந்தார். கருணையோடு, கவலையுடன், சிறிது சிரங்குனிந்து என்னைக் கண்டு,

“ஏன் கொழந்தே, நோக்கு ஒடம்புலாம் சரியா இருக்கோனோ?”

- என்று வினவினார்.

“ம்ம்”

என்று தலையாட்டினேன், யதார்தத்தினை விவரிக்க விரும்பாமல்.

எப்பொழுதும் போலேப் பாட்டி இடுப்பை இறுக்க கட்டிக்கொண்டேன். கை விட மனதே இல்லை. அன்னண்டை விழிக்கவோ துணிவிராது

பாட்டி என் பக்கத்தில் வந்ததே இதமாயிருந்தது; மருந்தாயிருந்தது; ஒரு மாதிரித் தெம்பினையும் ஊட்டியிருந்ததாற்போலிருந்தது. அவ்வாறே உணர்ந்திருக்கையில், நான் பெருமூச்சு விட்டு:

“இது என்ன கொடுமை பாட்டி, பகவான் சிருஷ்டி? வேணுங்கிறவாள்ளாம் செத்து செத்து போய்டறா. நிரந்திரமா எல்லாரும் ஒண்ணு சேர்ந்து கூட இருக்க முடிஞ்சா எத்தனை நன்னா இருக்கும்??”

என்றவாறு புலம்பி அழுதேன்.

மனை முழுக்க மக்கள். எனினும் வேறு யாரையும் பெரிதாய்க் கண்டுகொள்ளாது பாட்டியின் பரிபூர்ண கவனமும் என் மீதே. ப்ரதியக்ஷமாய்; பிரதியேகமென – ஏன், எனதந்தரங்கத்தினையே உருவகப்படுத்திய பிரதிபலிப்பாக எனக்கென இத்தனை தூரம் அவதரித்திருந்தார் என்றெண்ண என்னுள் பரவசமும் பெருமிதமும் பொங்கியெழுந்தன. அம்மா கூட முன்னே அமர்ந்திருந்தாள். பெயரனைப் பாட்டுக்கு பாட்டியுடன் பேச விட்டுவிட்டு அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தாள். முகத்தில் திகைப்பொன்றும் தென்படவில்லை. அங்கு திரண்டிருந்த அனைவருக்குள் பலருக்கு பாட்டி உள்ளமை நன்கு தெரிந்திருந்தது போலும் சிலருக்கு மட்டுமே ஏதோ தெரியவில்லை போலிருந்தது. பாட்டி எம்மெதிரேத் தோன்றியது நன்கு தெரிந்தும் உணர்ந்தும் பாதி பேர் தமக்குள்ளே தொடர்ந்து அரட்டையடித்துக் கொண்டிருந்தனர். என் பார்வையோ பாட்டியிடமிருந்து எள்ளளவும் விலகவில்லை. கண்ணிமைப்பின் புசுக்கென காற்றோடு கரைந்துசென்று நம் பக்கம் இனியடுத்து எப்போது வருவாரோ யார் கண்டார்……?

பாட்டியிடம் இவ்வரிய சந்தர்ப்பத்தை வீணாக்கிக்கொள்ளாதிருக்க இடையிராது உடனே அடுக்கடுக்காய்க் கேள்விகள் கேட்டல் ஆனேன். பாட்டி பேரறிவாளி; சுறுசுறுப்புமிக்கவர். கை எந்நேரமும் துருதுருக்கும். சும்மாவே இருக்கமாட்டார்! இப்படிப்பட்ட இருப்புக் கொள்ளாமைக்கு ஆளாக்கப்பெற்றிருந்த பாட்டிக்கு அடிக்கடி அலுப்பு தட்டிவிடும், எனவே:

“அங்கே உங்களுக்குப் பொழுது போறதா, பாட்டி?”

என்று பெயரனுக்குரிய தனி அக்கறையுடன் கேட்டேன். பட்டென எதிர்மறையான விடையே கிடைக்கும் என்று நம்பிவிட,

“ஓ… இங்கே நிறையா சின்ன பசங்கள்ளாம் ஓடி பிடிச்சு விளையாடிண்டிருக்காளோல்லியோ? அவாள பார்த்துண்டிருக்கிறதிலியே பாதி நேரம் போய்டுறது.”

என்றார் நம் பாட்டி!

சமையல் கலைஞர், சாப்பாட்டுப் பிரியரான அவரிடம் நான் பின்னர் சிறிது தயக்கத்துடன் கடாவினதோ:

“ஏன் பாட்டி, அங்கே சாப்பாடுலாம் உங்களுக்கு சரியா கிடைக்றதோ?"

என்று

அதற்குமே பாட்டி பல்வேறுபட்ட, பெரும்பாலும் கேள்வியேப் படாத “இந்தக் காய், அந்தக் காய்” என்று வரிசையாக சகலவிதமான காய்கறி வகைகளைப் பட்டியலிட்டு கூறிவிட்டு, கடைசியில் கருத்தளித்தாவது :

“பூஹ்… நீங்கள்ளாம் என்னலாமோ வாய்லியே நுழையாத பேரெல்லாம் சொல்லி சொல்லி தம்பட்டம் அடிக்கறேள், ஆனா இதுலாம் ஒரு நாளாவது கேள்வி பட்டிருப்பேளா என்ன?!”

“சரி, தாத்தாலாம் எப்படி இருக்கா பாட்டி?”

“ஆமா, அவர் அப்படியேத் தான் இருக்கார். அவரல்லாம் திருத்தவே முடியாது போ!”

நாழி ஆகிவிடும் முன் இறைவனடி சேர்ந்திருந்த என் தாயாரின் அன்னை, ஜயம் பாட்டியினது குசலத்தினையும் விசாரிக்க வேண்டும் என்று மனதளவு ஆவலோடு நின்றேன். ஆயினும் இதனை எண்ணியது நானே தானோ, இல்லை கனவுலகினில் உதித்திருந்த என்றன் நிழலாட்டம், அந்தச் சாயாபுருஷன் தானோ அறியவொண்ணா! இரு வேறுபட்ட இவ்-“அகங்கள்”-க்கிடையே தொடற்பு குறைபாட்டினாலோ எதனாலோ வார்த்தை மட்டும் வரவில்லை…

எந்த அவசரமுமின்றி அப்படியே சாவகாசமாய் ஒன்றரை மணிநேரம் முற்றிலும் எம்முடன் உரையாடிவிட்டுத் தான் மறைந்துசென்றிருப்பார் பாட்டி. திரும்பிப் பார்ப்பதற்குள், சமையலறைக்கு நகர்ந்து தரையில் அமர்ந்து தமது தடித்த, திடமான குற்றடிகள் இரண்டையும் நீட்டியவாறு பெண்டிர் பலரது மத்தியில் கறிகாயைச் “சருக் சருக்”-கென முடிவெடுத்துக்கொண்டு அரிவாண்மணையில் நறுக்கிக்கொண்டிருந்தார். இவ்வடுப்பங்கரையே பாட்டியின் வாழ் நாளில் தம் சிற்றுலகம் எனலாம். அங்கிருந்து எத்தனைப் பேருக்கு, அம்மாடியோ, எத்தனை வகை வகையான சமையல் செய்து சாப்பாடு அள்ளி அள்ளிப் போட்டிருப்பார்?? ~

- sathya99@hotmail.com


  1. அழகான அந்தி நேரம்.
  2. பன்னிரண்டு குழந்தைகளில் தாய் தந்தைக்குக் கடை குட்டியாக பிறந்த இந்த பாட்டிக்கு இறுதி வரை ஒழுங்கான பெயரே சூட்டப்பெறவில்லை! சிற்றகவையில் அண்ணன் ஒருவர் தங்கையைச் செல்லமாய்க் கொஞ்சி கொஞ்சி “குஞ்சு பாப்பா” என்றழைத்திருந்தபடியால் அவரைத் தொடர்ந்து மற்றவர்களும் இந்தம்மாவைக் “குஞ்சா” என்றேக் கூப்பிடத் துவங்கிவிட்டனராம்!!
  3. “மடிசார்” என்பது இதன் திரிபே.