Tamil poems on legend of Prahladan

கங்கையின் சாபம்

இமயவனின் இருமகளில் ஈசனின் ஒருபாதி
உமையொருத்தி கங்கை எனும் மங்கை!

அவன் சடைமுடியில் மற்றொருத்தி
தண்எனும் சொற்பொருட்குத் தக்க நங்கை!

கங்காதரன் திருநாமக் காரணத்துப் பேரணங்கு
சடைமுடிந்த கங்கையைப் புவியிறக்கத் முனைந்து
தவமிருந்த நல்முனிவன் தக்கோன் பகீரதன்!

மனமிரங்கி வரமருள வந்ததிருக் கயிலையனைச்
சடைதளர்த்தி கங்கைபுவி சரியவரம் வேண்டிட்டான்!

முடிவிடுத்த கங்கைநதி முறுவலித்து ஆர்ப்பரித்தாள்!
முன்னரனைப் பணிந்தாள்! முனிவன்துயர் தீர்த்தாள்!

தவழ்ந்து தத்தையெனத் தாவிப் பரந்தெங்கும்
விரைந்தாள்! நந்நீராய் விளையாடி வளம்தந்தாள்!

தரணியை முத்தமிட்டாள்! தரையெலாம் செழிக்கத்தான்
பரவினாள்! நிலவளத்தைப் பாரெங்கும் காண்பித்தாள்!

ஈன்றனள் நற்செல்வம் எங்கும் நல்வாழ்க்கை!
தோன்றின கங்கைத் துறையெங்கும் குடியேற்றம்!

நாடுகளும் மற்றும் நகரங்களும் வரலாற்றை
ஆளுவன இதிகாசம் அதிலவளின் கைஎழுத்து!

காலத்தே தெய்வக் கங்கா எனஆனாள்!

கோலத்தை என்ன சொல்ல! கொடுமை எனவாகிச்
சாத்திரங்கள்,சடங்குஎனும் சன்னல்கள் வழியாக
ஈர்த்துவரும் பலகுப்பை இன்னல்கள் அவள்தலையில்!

தாயான கங்கைமடி தவழும்பல சடலங்கள்!
போயான பேர்சிவனைப் போயடைவார் எனஎண்ணம்!

நாகரீகம் விளைத்த நகர்க்கழிவுச் சங்கமத்தால்
போகமீன் விளைத்த பொய்கையிலே சங்கடங்கள்!

நான்முகனே கவலையுற நாவாய்களும் அச்சுறுத்தும்
சீவநதி சிதைகின்ற சீர்கேட்டின் உச்சகட்டம்!

முறையிட்டாள் முக்கண்ணன் முடிவிளைந்த என்னுள்
கறைசொட்டச் சாக்கடையைக் கலப்பதா எனச்சினக்க
கோபமே கங்கையின் சாபத்தின் முகவுரை!

தாபமே கொண்டு தனலான கங்கை!

அன்று வியாச முனிவன் கங்கை
சந்தனு மன்னனுக்கிட்ட கோரிக்கை
ஒத்ததொர் சாபம் விடுத்தாள்!

தான் வரண்டு இப்புவியில் ஓர் சொட்டு
நீர் மீஞ்சாது, எஞ்சும் உங்கள் கண்ணீரே!

மானுடரே, ஏனின்னும் மயக்கம்! கங்கைநதித்
தாயிடமே சென்றுநம் தவறுக்குப் பொறுப்பேற்போம்.

இரணிய வதைப்பாடல்

"நாமம் பலவெனனினும் நாராயணா எனும்
நாமம் தவின்று நான் வேறோர் பேரறியேன்
ஆசான் கற்பிக்கும் எந்தை நரத்துதியும் நவிலேனே”

தளரா பிரகலாதன் சொல்லிது! செவி மடுத்த தந்தை
அரக்கர் கோமான் இரணியனது, அரச கட்டளை
தன் நாமமொன்று தவிர வேறோர் நாமம்

எவர் வாயினின்றும் கேளாதென்பதை
தகர்த்தெறிந்தது தன் மகனோ என்று சினமுற்று
மடியிலிட்டு உச்சிமுகர்ந்த மைந்தனை
காலடியில் கிடத்திக் கண்களால் வெறித்து
பலவகையாய் அச்சுறுத்தியும், எதற்கும் அஞ்சாப்
பிஞ்சுப் பாலகனின் “நெஞ்சில் நாராயணன் அன்றி
வேறொரு நாமம் துதியேன்” என்ற கூற்று!

விண்ணோரும் மண்ணோரும் விதிர்விதிர்த்து
அவன்பெயர் கேட்டாலே நடுங்குவர் என்றால்
அரக்கர்கோமான் தனயன் வாய் விளிப்பதோ
தன் செவி கேளா “நாராயணா” எனும் சொல்லை!
ஈன்ற தன் மக னே தனக்கெதிரியா ?

தன் விரலே தன் கண்ணைக் குத்துவதா எனச்
சினங்கொண்டு சீரிய எழுந்த இரணியன்,
மகனென்றும் பாராமல் மதம் தலைக்கேறி
அன்பைத் துறந்து அகந்தைக்கு ஆளாகி
மத்தகத்தாலும், மலைலிருந்து உருட்டியும்
அரவம் கொத்தியும், ஆற்றில் மூழ்கியும், நெருப்பிலிட்டும்
நலியாமல் துணிவாக நாராயணக் கவசமணிந்து
தளரா நின்ற தனையனைக்கண்டு கலங்கி
நிலை குலைந்த அரக்கன் சீற்றம் பொங்க

“நீ வணங்கும் நாராணன் எங்குள்ளான்” என வினவ
“இத்ததூணிலுமுள்ளான் ,துரும்பிலுமுள்ளான்” என்று
துணிந்து விடையளித்த மகனை விளித்து,

“நீ போற்றும் நாரணன் இத்தூணில் இல்லையேல்
உன் தலை தரையில் தவழும்” என்று
முழு பலத்தோடு முன்னிருந்த தூணைத் தாக்க
அண்டம் பிளந்ததோ என்றோர் ஒலியுடன்
சீரும் அரிமுகமும் நரஉடலும் கொண்ட உருவம்,
செவ்வரிப் பிடரியும், செஞ்சுடர் ஞாயிற் கண்களும்
எரிமலையொத்த வாயும் கொண்டெழ, வடிவு கண்டு
மதி இழந்து கதிகலங்கி நின்ற அரக்கனின்
கரத்தை இமை மூடித்திறக்கும் நேரத்தில்
பற்றி இழுத்து உள்ளும் புறமுமில்லா
நடுநிலை வாசற்படியில் தன்மடியில் இட்டுப்
பகலும் இரவும் சேரா அந்தி வேளைதனில்
அரக்கன் தொந்தியை நகம் பற்றிக் கிழித்துக்
குடலுருவித் தன் கழுத்தில் மாலையாய் அணிந்து
வினோதமான இறவா வரம் பெற்ற இரணியனை
வதைத்தார்! வதைத்தும் சீற்றம் வதங்காதது கண்டு
தேவர் குழாம் நடுங்கி, ஒடுங்கி
திருமகளை வேண்டி முறையிட்டதும், அதற்கிணங்கி
சிம்மம் மடியமர்ந்து செல்வமகள் கரம்தழுவ
இந்து சீதளத்தால் மனம் குளிர்ந்து, எம்மான்
இலக்குமி நரசிம்மனுமானான்!

ஆறுமுகத்துக்கு அறிமுகமா?

(சுப்பிரமணியனா சூரனா)

விடிகாலை செஞ்சுடர் ஞாயிறு கடல் தொடு வானில் கதிர் ஒளி வீச அலை தவழும் கடற்கரையில் அமைந்ததோர் முருகன் கோயில், திருச்செந்தூர் செந்தில் வேல் முருகன் திருக்கோயில் , வானுர ஓங்கி ஒன்பது நிலை கோபுரவாயில் தாங்கி பிறவித் துயிர்க்கடலில் சிக்கி வழி நீங்கி இருளில் உழலோர்க்குக் கலங்கரை விளக்காய் கந்தனடி காட்டும் கோபுரம்

ஆறுபடை வீட்டுக்குள் ஒன்றான குன்றில்லா கோயில் கொண்ட குமரனாயினும் , சொல்லால் அடங்கா ஆறுமுகனின் ஆற்றல், பலம், போதம், செல்வம், சக்தி, பொலிவென்ற அருவகை குணங்கள் ஒருங்கிய அமலன் அவதரித்த தற்கோர் இலக்கு, தாரகாசூரனை வதைத்து விண்ணுலகில் தேவராட்சி நிலைக்கவே

கடுந் தவத்தால் தாரகா சூரனென்போன் ஈசனிடம் தன் மரணம் மகாதேவன் மகனால் அன்றி வேறெவராலும் நிகழா வென்ற வரத்தில் விளைத்தான் அளப்பரிய இன்னல்கள் தேவர் குழாம் தழைக்க, இந்திரனாலும் இயலாது நாதி அற்று அயனை அணுக ருத்திரனின் யோக நித்திரை, வைத்தது முத்திரை அவன் முயற்சிக்கு எனும் நிலையில் காமனை விட்டெய்திய அம்பில் கலைந்த தவத்தில் யோகேசுவரன் ருத்திரேசுவரனாகி திறந்தான் நெற்றிக்கண்ணை, எரித்தான்காமனை, தெரித்த பஞ்சபூத சக்தியோடு மனோ சக்தி இணைந்த தீப்பொரிகள் ஆறைத் கைத்தாங்கிய வாயுவும், அக்கினியும் விட்டனர் கங்கையில், சேர்ந்தது சரவனபொய்கையில், பொலிந்தது ஆறு கமலங்களில் அழகே உருவெடுத்து, அகோரம், அதோமுகம், ஈசானம், சத்புருடம், சத்யோஜதம் ,வாமதேயம் எனும் தத்துவத்துக்கேற்ப ஆறு தெய்வீக மணம் கமழும் குழவிகளை விண்ணிலிருந்து மண்ணோக்கி இவர்கள் வீழ்ந்த தாரகைகளோ! என ஆறுகார்த்திகைக் குமரிகள், கண்டனர், அணைத்தனர் ஆளுக்கோர் குழந்தையாய் மார்பில், பாலூட்டியும்,சீராட்டியும், கொஞ்சியும், கெஞ்சியும் விளையாடி ஆனந்தத்தில் திளைத்தனர், அன்பின் முகிழ்த்தனர்!

திருச்சடையோன் விடுத்த அறு பொறிகளின் விழைவு ஆறு குழவிகளாய் கார்த்திகைக் குமரிகளின் மடி தவழ வளர்வதை ஞானதிருட்டியில் கண்ட தருணத்திலே சரவணப் பொய்கையோரம் தோன்றிய பராசக்தி வாரியணைத்த ஆறு பிஞ்சுக் குழந்தைகள் ஒன்றிணைய ,ஓருடலும், பன்னிரு கைகளும் ஆறு முகங்களோடு பரிமளித்த சண்முகனைக் கண்டு, வியந்து, வணங்கி வசீகரத்தில் மெய்மறந்த கார்த்திகைக் குமரிகள் அன்னையின் ஆசியால் விளங்கினர், விண்ணில் என்றும் ஒளிரும் கார்த்திகைத் தாரகைகள் அறுவரும் பன்னிரு திங்களில் ஒன்றாகத் தீபச்சுடரால் வழிபடும் கார்திகைத் திங்களும் ஆயினர்

அன்னையின் அணைப்பால் ஆறுமுகங்கள் ஓருடலில் கொண்டோன் ஆறுமுகனென அருளத் தோன்றினன். சரவணப் பொய்கையில் ஆதலால் சரவணனென்றும் தோளிட்ட கார்த்திகைக் குமரிகள் பாலூட்டிப் பராமரித்ததால் பாலன் கார்த்திகேயனென முத்திரு நாமமும் ஒரே சமயத்தில் பெற்றோனுக்கு தித்திக்கும் பற்பெயர் திகழ்ந்திடுச் சென்றான் கயிலைக்கு அன்னையுடன் அப்பனைக் காண , ஐந்தலை அய்யன் அறுதலைத் தனையன் கண்டு அதிர்ச்சி உற்றான் உவகையுடன் ஆராஞ்சிரம் ஆழ்ந்த அறிவாற்றலின் அறிகுறியோ என வியக்க, ஆறுமுகம் அதுவும் பொருந்துமே என்பதற்குச்சான்றாக வயதுக்கு முன், முற்றிய முருகனறிவு பற்றியது படைக்கும் பிரமனை , இட்டது சிறையில் ப்ரணவத்தின் பொருள் அறியான் படைப்பது எங்ஙனமெனப் பரமனும் மகன் வாய் ஓங்கார ப்ரணவத்தின் பொருள் வேண்ட உபதேசித்த உமையின் மைந்தன் தகப்பன்சாமி சாமி நாதனுமாய் சாமிமலையில் கோயில் கொண்டான்

வீரம், ஆற்றல், திற்ன் அகிய மூன்றும் வயதுக்கு விஞ்சி விளங்கிய குமரன், ஆதி சக்தி ஈன்ற பூரண சக்தியிணைந்த வேலொன்றேந்தி எவருமென்னை நெருங்கானெனும் வேலாயுதன், அசுர குல வீழ்ச்சிக்குக் காலன், இருள் சூழ்ந்த இந்திரலோகம் காக்க தேவர் குழாம் படைக்கு வெற்றி காண பிறந்தோனை இந்திரன் தேவசேனாபதியாக்கத் தன் எதிரி ஓர் பாலகனா என்று தரகாசுரன் நகையாட நின்றோர் விழுந்தோர், விழுந்தோர் கிட ந்தோர், கிட ந்தோர் மடிந்தோர், மடிந்தோர் மறைந்தோர் என குமரனை எதிர்த்தோர்களில் ஒருவனான தாரகாசூரனுடன் பிறந்தோன் தன் உயிர் நீத்து முன், குமரனுக்கு வாகனமாக வேண்ட, வேலனும் மனமுவந்து தரு உருவில் மாயப் போரில் மடிந்த சூரபத்மனின் மேனியிற்பாதியை தான் ஏறி விளையாடும் மயிலாக்கி, மற்றோர் பாதியை சேவற்கொடியாக்கி மயில்வாகனனெனும்பெயர் பெற்றோன், அடுத்து தாரகாசூரனின் மற்றோர் இளவலான சிங்கமுகனையும் கொன்று, அவன் மரணத் தருவாயில் கோரியபடி சிம்ம வாகனமாக்கி, அன்னைக்குப் பரிசாக்கி, சூரனின் பல் வேறு போர்த்திறனையும் முறியடித்து, இறுதியில் வேலன் வீசிய வெற்றிவேல், தாரகாசூரன் தலையைத் தரணியில் தள்ள, தேவர் குழாம், மாமுனியோர், நான் மறையோரும், மண்ணோரும் என்றும் போற்றும் சரவணனே, ஆறுமுகனே, கார்திகேயனே, வேலனே, முருகனே சுபமும் ரமணீயமுமிணைந்த சுப்பிரமணியனே எனத் துதித்துப் புகழ்ந்தனர் என்றால், நின்னமுதத் தமிழில் என் எண்ணக் கவிதைகொண்டு உன்னை நான் என்னவென்று புகழுவது?

நாராயாணன்

பின் குறிப்பு: இக்க விதையில் முருகன் பிறப்பின் அடிப்படை “ஸ்கந்த்தோ குஹ: ஷண்முகஶ்ச பால நேத்ரஸூத: ப்ரபு:”ஏனும் ஸ்ரீ சுப்ரமண்யாஷ்டோத்தரம் ஓர் வரியை தழுவியது.