144 ஆண்டுகளுக்கு பின் மகாபுஷ்கர விழா : தூத்துக்குடியில் கோலாகலம்!! 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாபுஷ்கர விழா !!

புஷ்கரம் என்பது நதிகளுக்கு உரிய விழா. புஷ்கரம் என்றால் தீர்த்த குரு, ஆதி குரு என்று பொருள்படும். இந்த விழா 144 வருடத்திற்கு ஒரு முறை நடைபெறக்கூடியதாகும். நவகிரகங்களில் ஒருவரான வியாழன் ஒரு முறை பிரம்மனை நோக்கி தவம் இருந்தார். குருவின் தவத்தை கண்டு மகிழ்ந்த பிரம்மன், குருவின் முன் தோன்றி அவரின் கோரிக்கையை கேட்டார். குரு, தங்களின் கமண்டலத்தில் உள்ள புஷ்கர தீர்த்தத்தை எனக்கு தாருங்கள் என்று கேட்டார். பிரம்மனும் தருவதாக ஒப்புக்கொண்டார்.

பிரம்மனின் கமண்டலத்தில் இருந்த புஷ்கரம், 'என்னை உங்களிடம் இருந்து பிரித்து விடாதீர்கள்" என, பிரம்மனிடம் வருந்தி கெஞ்சி கேட்டுக் கொண்டது. இதனால், பிரம்மன், குருவுக்கும், புஷ்கர தீர்த்தத்திற்கும் இடையே ஒரு சமாதான உடன்படிக்கையை மேற்கொண்டார். புஷ்கரமானது, குரு பகவான் சஞ்சரிக்கும் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளிலும், அந்தந்த ராசிக்குரிய புண்ணிய நதிகளிலும் வாசம் செய்வதுடன், மக்களுக்கும் நன்மை செய்ய வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. இதன்படி, புஷ்கரம் விழா, ஒவ்வொரு வருடமும், குருபகவான் ஒரு ராசியில் இருந்து, மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது, அந்தந்த ராசிக்குரிய நதிகளில் நடப்பது வழக்கமானது.

ராசிகளும் அதற்குரிய புண்ணிய நதிகளும் :

மேஷம் - கங்கை

ரிஷபம் - நர்மதை

மிதுனம் - சரஸ்வதி

கடகம் - யமுனை

சிம்மம் - கோதாவரி

கன்னி - கிருஷ்ணா

துலாம் - காவிரி

விருச்சிகம் - தாமிரபரணி

தனுசு - சிந்து

மகரம் - துங்கபத்திரா

கும்பம் - பிரம்மபுத்திரா

மீனம் - பரணீதா ஆகிய நதிகளில் குரு பகவான் எந்தெந்த ராசிகளில் இருக்கிறாரோ அந்தந்த நதிகளில் புஷ்கரம் தங்கி இருப்பதுடன், அந்த சமயத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்திரன் ஆகியோர் ஒன்றாக இருந்து, மக்களுக்கு அருள்பாலிக்கின்றனர் என்பது ஐதீகம்.

அந்த வகையில் இந்த ஆண்டு குரு பகவான் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி இன்று(11.10.2018) துலாம் ராசியிலிருந்து விருச்சக ராசிக்கு பிரவேசிக்கிறார். எனவே, நாளை 12-10-2018 (வெள்ளி) அன்று தாமிரபரணி மகாபுஷ்கர விழா ஆரம்பமாகி அக்டோபர் 23.10.2018 (செவ்வாய்) அன்று நிறைவுபெறுகிறது. இதற்கு இடையில் வரும் 12 நாட்களும், 12 ராசிகளைக் குறிக்கும். ஒவ்வொருவரும் தங்களுடைய ஜென்ம ராசிக்கு ஏற்ப தேதி, கிழமைகளில் தாமிரபரணி நதியில் நீராடுவதன் மூலம் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகும்.

இதை முன்னிட்டு பொதிகை மலையில் உற்பத்தியாகி தூத்துக்குடி புன்னக்காயலில் கடலில் கலக்கும் தாமிரபரணியில், 64 தீர்த்தக்கட்டங்களில் பக்தர்கள் நீராட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நதிக்கரையில் உள்ள 149 படித்துறைகளில் ஆரத்தி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. 12 நாட்களும் அந்தந்த ராசிக்காரர்கள் இங்கு புனித நீராடுவார்கள்.

சிறப்பு :

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரமகலசம் 12 நாட்கள் தாமிரபரணி ஆற்றில் இருப்பதாகவும், இந்த விழாவின்போது தாமிரபரணி ஆற்றில் நீராடினால் புண்ணியம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

பலன்கள் :

புஷ்கர புண்ணிய காலத்தில் சிவபெருமான், விஷ்ணு, பிரம்மா, தேவர்கள், ரிஷிகள் போன்றோர் நதிகளில் வாசம் செய்வதால், இந்த புண்ணிய காலங்களில் நதியில் நீராடுவதால் மூன்றரை கோடி தீர்த்தத்தில் புனித நீராடிய பலன் கிடைக்கும்.

அதுமட்டுமின்றி அன்னதானம், வஸ்திரதானம் போன்ற பல தானங்கள் செய்தால் பன்மடங்கு பலனை தந்து நம்மை மோட்சத்திற்கு போக வழி வகுக்கும். மேலும், புஷ்கர புண்ணிய காலத்தில் நீராடி பிதுர்களுக்கு தர்ப்பணம் முதலிய சடங்குகள் செய்வதால் பிதுர் சாபம் நீங்கி நல்வாழ்க்கை வாழ வழி வகுக்கும் என்பது ஐதீகம்.