ஸ்ரீருத்திரம்
ஸ்ரீருத்திரம் நமகம், சமகம் என இரு முக்கிய மந்திர மாலைகளால் பின்னப்பட்டது.
‘நமக’ அல்லது ‘நமஸ்காரம்’ என்பது ‘ந + மமகாரம்’ - யான் எனும் கர்வம் விட்டு, ‘இறைவனே’ காரணம் எனத் துதிப்பது ஆகும்.
‘ப்ராணானாம் க்ரந்திரஸி ருத்ரோ மா விசாந்தக:’
அதாவது பிராணவாயுக்களும் இந்திரியங்களும் கலந்து உயிர்ப்பிக்கும் இடத்தில் (அதாவது ‘லலாடம்’ எனும் நெற்றியில்) ருத்ரனாக இருக்கிறீர்.
‘தேனான்னேனாப்யா ஸ்வாஹா’ :
அப்படி (என்னுள்) உறைவதால், நான் உண்ணும் உணவை (யானிடும் ஹோம ஹவிஸாக) ஏற்று திருப்தியுற்று எமைக் காப்பீராக!’
என்ற வரியுடன் நமகம் முடிவுறுகிறது.
ஸ்ரீ ருத்திரத்தில் நமகத்தின் இறுதியில், இறைவனைத் தன்னுள்ளே நாம் பெற்றதை உணர்வதால், எல்லாமுமாகிய இறைவனைச் சுமந்திருப்பதால், தன்னுள்ளேயே உலகின் எல்லா வளங்களும் அடங்கி விடுகிறது என்பதை உணர்த்துவதே ‘சமகம்’ எனும் மந்திரமாலை. வெளிப்படையாகப் பொருள்காணும்போது கனிகளும், வளங்களும், நதிகளும், பொருட்களும், எனப்பல வகையான வெகுமதிகளும் எனக்குள்ளேயே அமைகிறது என்பதாயும், அப்படி அமையட்டும் எனும்படியாக, உலக வாழ்க்கைக்கான சுகத்தினைக் கேளாமலேயே இறையருளால் பெறுகின்ற பேராண்மையைத் தருவதாயும், சமகம் கருதப்படுகிறது.
சமகத்தின் பதினோராவது அனுவாகத்தில் வெறும் எண்களை வரிசைப்படுத்தித் துதிப்பதாக இருக்கிறது. இது ஏனென்ற கேள்வி பலருக்குமிருக்கிறது.
பேரிலக்கியங்கள், அருமந்திர நூல்கள் முதலானவற்றைப் படிக்கும்போது அவை சொற்பொருள் (சாமான்ய அர்த்தம்), குறிபொருள் (லக்ஷயார்த்தம்), மறைபொருள் (தத்வார்த்தம்) என் மூன்று வகையான பொருட்களைத் தரும் என்பதை ஆய்ந்து உணரல் அவசியம். சொற்பொருள் மொழிச்சுவை, கவிநயம் ஆகிய அழகுப்பொறுப்பினைச் சுமந்தளிப்பது. குறிபொருள் அறிவால் மேலும் ஆயவைக்கும் வழியினைக் காட்டுவது.
மறைபொருள் என்பதனை மட்டும், ஒரு ஆசானிடம் முறையாக் கற்பது வேண்டும். ஏனெனில் மறைபொருள் அனுபூதி எனும் அனுப உணர்வுக்கு வழிகாட்டுவது. குறிபொருள் அறிவால் மேலும் ஆயவைக்கும் வழியினைக் காட்டுவது.
இந்தப் பதினோராவது அனுவாகத்தைத் தமிழில் சொன்னால்:
ஒன்றோடு மூன்றைந் தேழொன்பதுபதி
நொன்றுபதி மூன்றுபதி நைந்துபதி னேழு
பத்தொன்பதிரு பத்தொரீருபத்து மூன்றிரு
பத்தைந்து இருபத்தேழிருபத் தொன்பதாய்
முப்பத்து ஒன்றுமாய் முப்பத்து மூன்றுமாய்
முழுவமரர் அருளபயம் முகிழ்த்த தாகி
நாலெட் டீராறு பதினாறு மாகி
நல்லிருபத் தோடிருபத்து நாலுமாகி
மேலிரண்டு முப்பதுடன் குறையாகிக் கூட்டாகி
முவ்வாறும் நாற்பதும் நாற்பத்து நாலுமாகி
நாற்பத்து எட்டாகி நயக்கவே எனக்குளே
நல்லுணவு வேள்வி நலம் மிகஉயரவே,
காரணமாம் சூரியனும் வானகமும் தேவரும்
பூரணமாய்ப் பிரளயமும் புவனமும் அதிபனும்
நேரிலினி தாயெனது காயமுட் சோதியாய்
நிறைந் தருள நெகிழ்ந்து காண்பேன்
ஒற்றைப்படை எண்கள் 1 முதல் 33 வரையிலும், இரட்டைப்படை எண்கள் சிலவற்றை 4 முதல் 48 வரையிலும் குறிக்கும் இப்பாடலின் குறிப்பொருள் என்ன?
ஒற்றைப்படை எண்களில் வானவர் அளித்த வரமாகக் கருதப்படும் தம்முள் விளங்கும் சக்திகளையும், இரட்டைப்படை எண்களில் தம்மை உய்யவைக்க இய்ய்றகையும், சான்றோர்களும் அளித்த வரமாகக் கருதப்படும் புறச்சக்திகளையும் இத்துதி குறித்துக்காட்டுகின்றது.
ஒன்று என்பது பிரகிருதியாகி வெளியே விரிந்த பொருளே உள்ளே மூலமாய் இருக்கிறது.
மூன்று என்பது தாமஸ, ராஜஸ, ஸாத்வீகக் குணங்கள். ஐந்து என்பது வான்,வளி, ஒளி, நீர், மண் எனும் பஞ்சபூதங்களின் வடிவங்கள். ஏழு என்பது ஐந்து புலன்களுடன் மனம் மற்றும் அறிவு. ஒன்பது என்பது ஒன்பது துளைகளை உடைய உடல். பதினொன்று என்பது பத்து முக்கிய வாயுக்களுடன் ஸுஷூம்னை எனும் முதல் நாடி. பதிமூன்று என்பது திசைகள், மேல், கீழ், உள், வெளி, முழுமை என எல்லாப் பரிமாணங்களையும் காக்கும் தேவதைகள். பதினைந்து உடலின் முக்கிய உயிர் நாடிகள். பதினேழு என்பது மெல்லுடல் கூறுகள். பத்தொன்பது மூலிகையாக உடலினுள் இருக்கும் உடல் வளர் சக்திகள். இருபத்தொன்று வர்மசாத்திரத்தில் சொல்லப்பட்ட மர்மஸ்தானங்கள். இருபத்து மூன்று உடலினுள் உள்ள நோயறு சக்திகள். இருபத்தைந்து உற்சாகத்தையும் சுகத்தையும் தருகின்ற அப்ஸரஸ் போன்ற நடன சக்திகள். இருபத்தேழு கந்தரவர்கள், இருபத்தொன்பது கின்னரர்கள், முப்பத்தொன்று புவனங்கள், முப்பத்து மூன்று தேவர்கள் எனும் பரசக்தி வடிவங்களே இந்திரியங்களாயும் மேலுடல், மெல்லுடல், உள்ளுடல் எனும் வலைகளின் வரப்பொருளாயும் இருக்கின்றன.
இரட்டைப்படை எண்களில் நான்கு என்பது அறம், பொருள், இன்பம், வீடு என்பதைக் குறிக்கும். எட்டு என்பது வேதங்களையும் உபவேதங்களையும் காட்டும். ஈறாறு என்பதுஆறு அங்கம், ஆறு சாத்திரம். பதினாறு சித்திகள். இருபது என்பது மேலுடலுக்கும், மெல்லுடலுக்கும் மூலகாரணமான ஐந்து பூதங்கள், ஐந்து புலன், ஐந்து பொறிகள், ஐந்து வாயு ஆகியன.