நம் பாரத பண்பாட்டில் நாம் எது செய்வதாயினும் முதலில் கடவுளை வணங்கிதான் ஆரம்பிப்போம். அதிலும் முழுமுதற் கடவுளான விநாயகரை யானை முகத்தானை வேண்டியே ஆரம்பிப்போம். எந்தவித விக்னமில்லாமல் நன்றாக நடக்க அந்த யானையை பற்றி அதன் தத்துவம் பற்றி பார்ப்போம். மனிதர்கள், ஆடு, மாடு, நாய், குதிரை, சிங்கம், புலி போன்ற எல்லாவற்றிற்கும் உள்ள கண்கள் காதுகள் மூக்கு முதலிய அவயங்களை நாம் நன்றாக பார்க்க முடிகிறது. யானைக்கு மட்டும் நாம் அதன் வாயை பார்க்க முடிவதில்லை. யானை சாப்பிடும் பொழுது மட்டுமேதான் நாம் யானையின் வாயை பார்க்க முடியம். ஏனெனில் அதன் வாய் அதன் தும்பிக்கையடியில் அமைந்திருக்கிறது.

நாம் அடக்கமாக மரியாதையாக பேச வேண்டுமெனில் வாயில் கைவைத்துக் கொண்டுதான் பேசுவோம். ஆனால் யானைக்கு அது இயற்கையாக அமைந்துள்ளது. "தும்பி" என்றால் யானை என்று அர்த்தம், அதன் கை தும்பிக்கை. ஆகாரத்தை எடுத்து வாயில் போட்டுக்கொள்கிற பொழுது அது தும்பிக்கையை தூக்கும் பொழுது மட்டுமேதான் அதன் வாயை நாம் பார்க்க முடிகிறது. இதன் தத்துவம் என்னவென்றால் எத்தனை வித்வத் இருந்தாலும் வாதம் செய்யாமல் விஷயத்தை கொட்டாமல் அவசியமான பொழுது அவசியமான இடத்தில் மட்டுமே பேச வேண்டும். மற்ற காலங்களில் வாயை மூடிக்கொண்டிருப்பது நமக்கும் பிறர்க்கும் நல்லது. அடக்கம் அமரருள் உய்க்கும். அவர்கள் தான் நிஜமான பெரியோர்கள் மரியாதைக்குரியவர்கள் என்று காட்டவே விநாயகர் தும்பிக்கையால் தன் வாயை மூடிக்கொண்டிருக்கிறார்.

மௌனம் ஸர்வார்த்த சாதகம்.