நெல்லிக்காய் மகிமை: அவ்வையாரும் ஆல்பிரூனியும் அருணகிரிநாதரும்
அதியமான், அவ்வையார், ஆல்பிரூனி, அருணகிரிநாதர் ஆகிய நால்வருக்கும் நெல்லிக்காயுக்கும் இடையே சுவையான தொடர்பு உண்டு.
அதியமான் நெடுமான் அஞ்சி என்ற குறுநில மன்னன் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டின் தகடூர் பகுதியை ஆண்டு வந்தான்.தமிழ்ப் புலவர்களை ஆதரித்த வள்ளல்களில் முதல் வரிசையில் நின்றவன். ஒரு முறை அவனை தமிழ் மூதாட்டி அவ்வையார் சந்திக்க வந்தார். நல்ல விருந்து கொடுத்து நிறைய பரிசுகளையும் கொடுத்தான். தமிழ் கூறு நல்லுலகில் அவ்வைக்குள்ள புகழழாலும் விரல் விட்டு எண்ணக்கூடிய பெண்பால் புலவர்களில் ஒருவர் என்பதாலும் அவரை விஷேசமாகக் கவனிக்க விரும்பினான் அதியமான்.
நெல்லிக்காய் ஆரோக்கியம் தரும் ஒரு அருமருந்து. பழங்களையுயும் மிஞ்சும் அளவுக்கு சத்து உடையது. ஆயுளை வளர்க்கச் செய்வது. வைட்டமின் சி சத்தும் புத்தியை வளர்க்கும் பாஸ்பரஸ் சத்தும் மிக்கது.
வட இந்தியாவில் ரத்த சுத்திக்குப் பயன்படுத்தும் திரிபலா சூர்ணத்திலும் சியவனப் ப்ராஷிலும் நெல்லிக்காய் பயன்படுத்தப் படுகிறது. தென் இந்தியாவில் ஊறுகாய், துவையல்,பச்சிடியில் முக்கிய அங்கம் வகிப்பது.
இவ்வளவு புகழ் உடைய நெல்லிக்காயிலும் ஒரு அரிய வகை நெல்லிக்காய் மரம் அதியமான் ஊரில் இருந்தது. அது கரு நெல்லி மரம். அதில் நன்கு வளர்ந்து முற்றிய ஒரு நெல்லிக்காய் மன்னன் கைக்கு வந்தது. நாட்டில் ஏதேனும் அரிதாகக் கிடைத்தால் அதை ஓடோடி வந்து மன்னரிடம் ஒப்படைப்பது பழங்கால இந்திய வழக்கம். புதையல் ஆனாலும் சரி, பெரிய வைரமானாலும் சரி, அரிதான பொருள் எல்லாம் இறைவனுக்குச் சமமான மன்னனுக்கே உரியது. இப்படிக் கிடைத்த அரிய நெல்லிக்காயை மன்னன் சாப்பிட்டால் நீண்ட காலம் வாழ்ந்து எல்லோருக்கும் மேலும் மேலும் உதவுவான் என்று மக்கள் எண்ணினர்.
ஆனால் அதியமானோ தமிழின் மீது ஆராக் காதல் கொண்டவன். நான் சாப்பிடுவதை விட, வயதான அவ்வைப் பாட்டி சாப்பிட்டு இன்னும் நீண்ட காலம் உயிர்வாழ்ந்தால் தமிழ் மொழியும் வாழும் உலகமும் உய்வு பெறும் என்று எண்ணி அதை அவ்வையாரிடம் கொடுக்கிறான். என்ன அதிசயம் பாருங்கள். அவ்வையார் வாழ்ந்தாரோ இல்லையோ அது பற்றி ஒன்றும் இலக்கியச் சான்று இல்லை. ஆனால் ஈராயிரம் ஆண்டுகளாக அதியமானின் புகழ் வாழ்கிறது.
இன்னும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு தமிழ் வாழும் வரை அவன் புகழும் வாழும். தங்கமும் வைரமும் சாதிக்காத பணியை நெல்லிக்காய் சாதித்தது என்றால் அது அதிசிய நெல்லிதானே! இது காலத்தால் அழியாத புறநானூற்றுக் கவிதையில் (91) இடம் பெற்றுவிட்டது.
நீல மணிமிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும நீயே! தொன்னிலைப்
பெருமலை விடர் அகத்து அருமிசை கொண்ட
சிறி இலை நெல்லி தீங்கினி குறியாது,
ஆதல் நின்னகத்து அடக்கிச்
சாதல் நீங்க எமக்கு ஈந்தனையே.
(அதியமான் நெடுமான் அஞ்சி மீது ஔவையார் பாடியது-புறம் 91)
பொருள்: மலைச் சரிவிலே கடு முயற்சியுடன் பெற்ற நெல்லியின் இனிய கனியைப் பெறுதற்கு அரிது என்றும் கருதாது, அதனால் விளயும் பலனையும் கூறாது, அதை உன் மனதில் மட்டும் வைத்துக் கொண்டு என் மரணத்தைத் தவிர்க்க எனக்குக் கொடுத்தாயே நீ சிவ பெருமான் போல நீண்ட புகழோடு வாழ்வாயாக.
இந்தியவியலின் தந்தை ஆல்பிரூனி
ஆல்பிருனி என்பவர் இஸ்லாமியர்களில் மாமேதை. லியார்னோ டா வின்சி போல அவர் பல் துறை வித்தகர். பன் மொழிப் புலவர். கணிதம், மருத்துவம் ,வான சாத்திரம், உயிரியல், மொழியியல் என்று எல்லா துறைகளிலும் புலமை பெற்றவர். ஒரு பாரசீக மன்னர், அவரை இந்தியாவுக்கு அனுப்பி இந்து மத சாத்திர ரகசியங்களை அறிந்துவர உத்தரவிட்டார். அவர் கி.பி.1017 முதல் இந்தியாவில 13 ஆண்டுகள் தங்கி இந்திய அறிவியல் ரகசியங்களை அராபியர் மூலம் உலகத்துக்கு அறிவித்தார். இந்தியவியல் (Father of Indology) படிப்பின் தந்தை என்று இன்று அவரை உலகம் பாராட்டுகிறது. அவர் இந்தியாவின் சரித்திரம் என்ற புத்தகம் எழுதியுள்ளர். கஜினி முகமது படை எடுப்பு பற்றியும் எழுதியுள்ளார். அவர் நெல்லிக்காய் மகிமையை இந்தியர்களிடமிருந்து அறிந்து தனது மருத்துவப் புத்தகத்தில் எழுதியுள்ளார். திரிபலா சூர்ணத்தில் பயன்படும் கடுக்காய் மகிமையையும் எழுதியுள்ளார். நெல்லிக்காய், புளி ஆகியவற்றுடன் தயாரிக்கும் சில பொருட்களை அவர் குறிப்பிடுகிறார்.
நெல்லிக்காய் நிற விஷ்ணு
அருணகிரிநாதர் திருப்புகழில் விஷ்ணுவை கரு நெல்லி நிறத்துடன் ஒப்பிடுவது வியப்பான ஒரு உவமை. ஒருவேளை நெல்லி போல விஷ்ணுவும் நமக்கு ஆரோக்கியம் அருள்வான் என்பதை அருணகிரி நாதர் நமக்குச் சொல்லாமல் சொல்ல நினைக்கிறாரோ!! (கரு நெல்லி நிறமுடைய அரியின் மருகன் நீ)
“மருமல்லி யார் குழலின் மடமாதர்
மருளுள்ளி நாயடியன் அலையாமல்
இருநல்ல வாகும் உனது அடிபேண
இனவல்ல மான மனது அருளாயோ
கரு நெல்லி மேனியரி மருகோனே
கன வள்ளியார் கணவ முருகேசா
திருவல்லிதாயம் அதில் உறைவோனே
திகழ் வல்ல மாதவர்கள் பெருமாளே.
நெல்லிக்காயின் மகிமை 2000 ஆண்டுகளாக எழுதப்பட்டாலும் அந்த ஏழைகளின் ஆப்பிளுக்கு தமிழர்களிடையே இன்னும் சரியான புகழ் கிட்டவில்லை! வட இந்தியர்கள் இதை தங்க பஸ்பம் போல கருதி பயன்படுத்துகிறார்கள்.