டெல்பி ஆரூடமும் தமிழ்நாட்டுக் குறி சொல்வோரும்
கிரேக்க (Greece) நாட்டில் உள்ள டெல்பி ஆரூடம் ( Delphi Oracle ) உலகப் புகழ் பெற்றது. காரணம் என்னெவென்றால் கிரேக்க நாட்டின் அறிஞர்களும் ரோமானிய மன்னர்களும் இங்கு வந்து ஜோதிடம் கேட்டனர். அது மட்டுமல்ல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் மக்கள் இதில் (கி.மு 800 முதல் கி.பி.300 வரை) நம்பிக்கை வைத்து அங்கே போனார்கள். இப்போதும் இது ஒரு பெரிய சுற்றுலா தலமாக விளங்குகிறது.
தமிழ் நாட்டில் குறிசொல்லும் குறத்திகள், சாமி ஆடுவோர், கோடங்கி அடித்து சோதிடம் சொல்லுவோர், நாடி சோதிடக் குறிப்புகள் எழுதுவோர் என்ன என்ன எல்லாம் செய்தார்களோ அத்தனையும் இங்கே செய்திருக்கிறார்கள். கிரேக்க நாட்டில் இது போல பல குறி சொல்லும் இடங்கள் இருந்தபோதும் பிதகோரஸ், ஹெரோடாட்டஸ், ஈடிபஸ், ப்ளூடர்ச், சாக்ரடீஸ், அலெக்சாண்டர், ரோமானிய மன்னர்கள் மற்றும் பல தலைவர்கள் வந்த இடம் டெல்பியே. அங்கு இசைப் போட்டி நடத்தி பரிசு கொடுப்பதும் வழக்கம்.
பர்னாசஸ் மலைப் பகுதியில் ஒரு குகை போன்ற அறையில் ஒரு பெண் உட்கார்ந்திருப்பாள். அங்கு புகை வரத் துவங்கும். பின்னர் வந்திருப்பவர்கள் கேள்வி கேட்டால் அதற்கு தெளிவில்லாத, விளங்கிக் கொள்ள முடியாத வகையில் பதில்கள் கிடைக்கும். அம்மையார் ஓரிரு வரிகளில் பதில் தருவார். பல விஷயங்கள் இரு பொருள்பட இருக்கும். பக்கத்தில் உள்ள ஒரு பூசாரி, அந்த அம்மையார் கூறிய ஆரூடத்தை விளக்குவார். அங்கு பூமியிலிருந்து வந்த புகை “எதிலின்” என்ற ரசாயன வாயு என்றும் அது போதையை உண்டாக்கவே இப்படி அம்மையார் உளரத் துவங்கினார் என்றும் சில ஆராய்ச்சியாளர் சொன்னதெல்லாம் இது வரை நிருபணமாகவில்லை.
டெல்பியில் நடந்ததை ஒவ்வொரு அம்சமாகப் படியுங்கள். நீங்களே தமிழ் நாட்டில் நடந்த, நடக்கும் விஷயங்களுடன் ஒப்பிட முடியும். (சிலப்பதிகாரத்தில் இதே போல கேள்வி கேட்கும் பூதங்கள் பற்றி வருகிறது. அப்பர் பெருமானுக்கும் சுந்தரருக்கும் பூதங்கள் வந்து உதவி செய்தன. அவைகளை ஏற்கனவே தனிக் கட்டுரைகளில் கொடுத்துள்ளேன்).
- இங்கே அபல்லோ தெய்வத்தின் கோவில் உள்ளது. அவர் பைதான் என்னும் பாம்பைக் கொன்று உலகைக் காப்பாற்றினார். அவர் டால்பின் வடிவு எடுத்து, முதுகில் கிரீட் தீவு பூசாரிகளை ஏற்றிக் கொண்டு வந்தார். (கிருஷ்ணனின் காளிங்க நர்த்தனமும் மச்சாவதரக் கதையும் உங்களுக்கு நினைவுக்கு வந்திருக்கும்).
- .இங்கே மூன்று பொன்மொழிகள் எழுதப்பட்டிருக்கும் 1.உன்னையே நீ அறிவாய். 2.அளவுக்கும் மிஞ்சாதே (அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷமாகும் 3. உறுதி எடு, விஷமம் செய்யாதே. இந்தப் பொன்மொழிகள் ஏழு முனிவர்கள் கொடுத்தது. (இப்போது சப்த ரிஷிக்களும், உபநிஷத வாக்கியங்களும் நம் நினைவுக்கு வரும்)
- சாமி ஆடும் பெண் வேகமாகப் பேசுவார். அதை பூசாரிகள் விளக்கி அர்த்தம் சொல்லுவார்கள் (இதுவும் நம் ஊர் மாதிரிதான். நாடி சோதிடத்தில் அவர் ஒன்று செய்யுள் வடிவில் சொல்ல பக்கத்தில் உள்ளவர்கள் வேறு ஒன்று உரை நடை வடிவில் சொல்லுவார்கள்.)
- பூசாரினி சொல்லுவதில் ஒரு சொல்லையோ, கமா (காற்புள்ளி) வையோ இடம் மாற்றிப் போட்டால் அர்த்தம் அனர்த்தம் ஆகிவிடும். “Go Return Not Die in War”. என்று பூசாரினி கூறுவாள். இதில் ஆங்கிலச் சொல் “நாட்” என்பதற்கு முன் காற்புள்ளியை (,,,,,) ப் போட்டால் போருக்குப் போ, திரும்பி வா, போரில் இறக்க மாட்டாய் என்று அர்த்தம் வரும். ஆங்கிலச் சொல் “நாட்” என்பதற்குப் பின்னால் காற்புள்ளியை வைத்தால் போருக்குப் போ,,திரும்பி வராதே, செத்துத் தொலை என்று பொருள் வரும். ஆக எப்படியும் பொருள் கொள்ளக் கூடிய நாட்ர்தாமஸ் எழுதிய செய்யுள் வடிவ சோதிடம் போல குழப்பத்தோடு வீடு திரும்புவார்கள் (இதுவும் நம் ஊர் ஜோதிடர்களையும் அவர்கள் கூறும் பரிகாரங்களையும் நினைவு படுத்தும்
- பூசாரினி இருக்கும் இடத்துக்குக் கீழேயிருந்து நறுமணப் புகை வருவதாக அங்கே பூசாரியாக வேலை பார்த்த ப்ளூடார்ச் எழுதி வைத்துள்ளார். இது இயற்கையான ஊற்றிலிருந்து எழுந்த ரசாயன வாயு என்றும் செயற்கையாகப் போட்ட போதை ஊட்டும் பொருள் என்றும் கூறுவர் ( இதுவும் நம் ஊர் வேத கால சோம பானம் பற்றி மேல் நாட்டார் எழுதி வைத்தது போல எல்லோரையும் குழப்பும்).
- பூசாரினிகளை இளம் வயதுப் பெண்களிலிருந்து தேர்ந்தெடுப்பார்கள். அவர்கள் பிரம்மசர்ய விரதத்தைக் கடுமையாகக் கடைப் பிடிக்க வேண்டும். இது நம் ஊர் சந்யாசினிகளை நினைவுக்குக் கொண்டு வரும்.
- ஒரு மன்னன் வந்து “நான் எதனால் சாவேன் என்று கேட்டானாம். பூசாரினி சொன்னாள்: மூஸ், மூஸ், மூஸ் என்று. பக்கத்தில் இருந்த பூசாரி எலி என்று மொழி பெயர்த்தானாம். கிரேக்க மொழியில் எலி (மூஷிகம்),தசை (மஸில்), மனிதனுடைய பெயர் (எடுத்துக் காட்டு: மோசஸ்) என்று பல பொருள்கள் உண்டு. ஆகையால் அந்த மன்னன் எலிகளை எல்லாம் ஒழித்தானாம். மூஸ் என்ற பெயருடையவர் எல்லோரையும் விரட்டிவிட்டானாம். கடைசியில் தசைப் (மஸில்) பிடிப்பால் இறந்தானாம். இதே போல கம்சன்--கிருஷ்ணன், இந்திரன் – விருத்தாசுரன், ஹிரண்யகசிபு—பிரஹ்லாதன் கதைகளில் நாம் படிக்கிறோம்.
- ஒரு நாள் ஒரு ஆட்டிடையன் பர்னாசஸ் மலை அடிவாரத்துக்குப் போனான் என்றும் ஆடுகள் குகைக்குள் போகவே அவை வினோதமாகக் கூச்சலிட்டன என்றும் அவன் உள்ளே போனபோது சாமி ஆடி வருங்காலம் உரைக்கும் கணியன் ஆக மாறினான் என்றும் எழுதி வைத்துள்ளனர். (இது நம் ஊர் ஸ்தல புராணக் கதகள் போல இருக்கிறது!!)
சுருக்கமாகச் சொன்னால் கிரேக்க நாட்டு பழக்க வழக்கங்கள் இந்திய, அதிலும் குறிப்பாக, தமிழ் நடைமுறைகளை ஒத்து இருக்கும். (கிரேக்க—தமிழ் மொழி தொடர்பு பற்றிய வேறு இரண்டு கட்டுரைகளில் மேல் விவரம் காண்க)