Assorted Tamil Poems
கங்கையின் சாபம்
இமயவனின் இருமகளில் ஈசனின் ஒருபாதி
உமையொருத்தி கங்கை எனும் மங்கை!
அவன் சடைமுடியில் மற்றொருத்தி
தண்எனும் சொற்பொருட்குத் தக்க நங்கை!
கங்காதரன் திருநாமக் காரணத்துப் பேரணங்கு
சடைமுடிந்த கங்கையைப் புவியிறக்கத் முனைந்து
தவமிருந்த நல்முனிவன் தக்கோன் பகீரதன்!
மனமிரங்கி வரமருள வந்ததிருக் கயிலையனைச்
சடைதளர்த்தி கங்கைபுவி சரியவரம் வேண்டிட்டான்!
முடிவிடுத்த கங்கைநதி முறுவலித்து ஆர்ப்பரித்தாள்!
முன்னரனைப் பணிந்தாள்! முனிவன்துயர் தீர்த்தாள்!
தவழ்ந்து தத்தையெனத் தாவிப் பரந்தெங்கும்
விரைந்தாள்! நந்நீராய் விளையாடி வளம்தந்தாள்!
தரணியை முத்தமிட்டாள்! தரையெலாம் செழிக்கத்தான்
பரவினாள்! நிலவளத்தைப் பாரெங்கும் காண்பித்தாள்!
ஈன்றனள் நற்செல்வம் எங்கும் நல்வாழ்க்கை!
தோன்றின கங்கைத் துறையெங்கும் குடியேற்றம்!
நாடுகளும் மற்றும் நகரங்களும் வரலாற்றை
ஆளுவன இதிகாசம் அதிலவளின் கைஎழுத்து!
காலத்தே தெய்வக் கங்கா எனஆனாள்!
கோலத்தை என்ன சொல்ல! கொடுமை எனவாகிச்
சாத்திரங்கள்,சடங்குஎனும் சன்னல்கள் வழியாக
ஈர்த்துவரும் பலகுப்பை இன்னல்கள் அவள்தலையில்!
தாயான கங்கைமடி தவழும்பல சடலங்கள்!
போயான பேர்சிவனைப் போயடைவார் எனஎண்ணம்!
நாகரீகம் விளைத்த நகர்க்கழிவுச் சங்கமத்தால்
போகமீன் விளைத்த பொய்கையிலே சங்கடங்கள்!
நான்முகனே கவலையுற நாவாய்களும் அச்சுறுத்தும்
சீவநதி சிதைகின்ற சீர்கேட்டின் உச்சகட்டம்!
முறையிட்டாள் முக்கண்ணன் முடிவிளைந்த என்னுள்
கறைசொட்டச் சாக்கடையைக் கலப்பதா எனச்சினக்க
கோபமே கங்கையின் சாபத்தின் முகவுரை!
தாபமே கொண்டு தனலான கங்கை!
அன்று வியாச முனிவன் கங்கை
சந்தனு மன்னனுக்கிட்ட கோரிக்கை
ஒத்ததொர் சாபம் விடுத்தாள்!
தான் வரண்டு இப்புவியில் ஓர் சொட்டு
நீர் மீஞ்சாது, எஞ்சும் உங்கள் கண்ணீரே!
மானுடரே, ஏனின்னும் மயக்கம்! கங்கைநதித்
தாயிடமே சென்றுநம் தவறுக்குப் பொறுப்பேற்போம்.
இரணிய வதைப்பாடல்
"நாமம் பலவெனனினும் நாராயணா எனும்
நாமம் தவின்று நான் வேறோர் பேரறியேன்
ஆசான் கற்பிக்கும் எந்தை நரத்துதியும் நவிலேனே”
தளரா பிரகலாதன் சொல்லிது! செவி மடுத்த தந்தை
அரக்கர் கோமான் இரணியனது, அரச கட்டளை
தன் நாமமொன்று தவிர வேறோர் நாமம்
எவர் வாயினின்றும் கேளாதென்பதை
தகர்த்தெறிந்தது தன் மகனோ என்று சினமுற்று
மடியிலிட்டு உச்சிமுகர்ந்த மைந்தனை
காலடியில் கிடத்திக் கண்களால் வெறித்து
பலவகையாய் அச்சுறுத்தியும், எதற்கும் அஞ்சாப்
பிஞ்சுப் பாலகனின் “நெஞ்சில் நாராயணன் அன்றி
வேறொரு நாமம் துதியேன்” என்ற கூற்று!
விண்ணோரும் மண்ணோரும் விதிர்விதிர்த்து
அவன்பெயர் கேட்டாலே நடுங்குவர் என்றால்
அரக்கர்கோமான் தனயன் வாய் விளிப்பதோ
தன் செவி கேளா “நாராயணா” எனும் சொல்லை!
ஈன்ற தன் மக னே தனக்கெதிரியா ?
தன் விரலே தன் கண்ணைக் குத்துவதா எனச்
சினங்கொண்டு சீரிய எழுந்த இரணியன்,
மகனென்றும் பாராமல் மதம் தலைக்கேறி
அன்பைத் துறந்து அகந்தைக்கு ஆளாகி
மத்தகத்தாலும், மலைலிருந்து உருட்டியும்
அரவம் கொத்தியும், ஆற்றில் மூழ்கியும், நெருப்பிலிட்டும்
நலியாமல் துணிவாக நாராயணக் கவசமணிந்து
தளரா நின்ற தனையனைக்கண்டு கலங்கி
நிலை குலைந்த அரக்கன் சீற்றம் பொங்க
“நீ வணங்கும் நாராணன் எங்குள்ளான்” என வினவ
“இத்ததூணிலுமுள்ளான் ,துரும்பிலுமுள்ளான்” என்று
துணிந்து விடையளித்த மகனை விளித்து,
“நீ போற்றும் நாரணன் இத்தூணில் இல்லையேல்
உன் தலை தரையில் தவழும்” என்று
முழு பலத்தோடு முன்னிருந்த தூணைத் தாக்க
அண்டம் பிளந்ததோ என்றோர் ஒலியுடன்
சீரும் அரிமுகமும் நரஉடலும் கொண்ட உருவம்,
செவ்வரிப் பிடரியும், செஞ்சுடர் ஞாயிற் கண்களும்
எரிமலையொத்த வாயும் கொண்டெழ, வடிவு கண்டு
மதி இழந்து கதிகலங்கி நின்ற அரக்கனின்
கரத்தை இமை மூடித்திறக்கும் நேரத்தில்
பற்றி இழுத்து உள்ளும் புறமுமில்லா
நடுநிலை வாசற்படியில் தன்மடியில் இட்டுப்
பகலும் இரவும் சேரா அந்தி வேளைதனில்
அரக்கன் தொந்தியை நகம் பற்றிக் கிழித்துக்
குடலுருவித் தன் கழுத்தில் மாலையாய் அணிந்து
வினோதமான இறவா வரம் பெற்ற இரணியனை
வதைத்தார்! வதைத்தும் சீற்றம் வதங்காதது கண்டு
தேவர் குழாம் நடுங்கி, ஒடுங்கி
திருமகளை வேண்டி முறையிட்டதும், அதற்கிணங்கி
சிம்மம் மடியமர்ந்து செல்வமகள் கரம்தழுவ
இந்து சீதளத்தால் மனம் குளிர்ந்து, எம்மான்
இலக்குமி நரசிம்மனுமானான்!
வேதனையில் விழுந்த வேதியன்
வேதமோதும் வேதியன் வேதனையடைய
வேதாந்தத்தை வேரறுத்து விவேகம் முறிய
வேத மோதுவதையே தொழி லாக்கிய
வேதியன் வாழ்க்கையில் வேத நெறி வழுவ
வயிற்றுக் கவலைக்கு வேதமோதும் வேதியன்
வேத விற்பன்னனின்று வேதம் விர்ப்போனாகி
வேதச்சடங்குகளை வியாபாரச்சந்தையாக்கி
சாத்திரமும் சம்பிரதாயமும் சாக்கடையாகி
சமயநெறி சமய சந்தர்ப்பத்தேற்கச் சரிய
கோத்திரம் குலையும் நிலையிலே
ஆத்திரம் அடையும் அந்தணன்
தோத்திரப் பாடலும் மறந்தான்
தோளிலே பாபமும் சுமந்தான்
கணக்கன் கணக்கறிவான்
கணக்கன் கண்ணுக்கு எண்கள் எய்யும்
கணக்கில் நுணுக்கம் காண்பது
கணக்காயன் கைத்திறனாகக் கணக்கில்
பிணக்கு கமழும் மணமு மறிவா னதைப்
பிரித்துப் பார்த்துப் பரிகாரமும் படைப்பான்
கள்ளக் கணக்குப் பள்ளத்திலி ருந்தாலு மவன்
கொள்ளிக் கண்கள் அள்ளி எடுத்து அம்பலப்
படுத்த சுள்ளிக்கட்டை சுட்டெதென ஈன்ற
செல்வம் இடுக்கண் காண கண்டானோ
கணக்கானோ ருபாயம் உய்த ததனால்
உதிர்ந்த நிறுவனமொன்றாக வர்த்தகம்
பெருகுவதும் உருகுவதும்
கணக்காயராலே
- நாராயணன்
காலன் கணக்கு
கழுதைபோல் சுமந்த வினைகள் காலங்கள் கடந்தும்
உழுத உடலில் விதைத்த கருமங்களில் சருமப்பை வாட
விழுந்த தருணம் இரு கரங்கள் விண்ணோக்கித்
தொழ நாடி நரம்பு தளர்ந்த பின் நாராயணனை
விளித்தாலும் வேந்தனோ வேதியனோ வித்தகனுக்கோ
கூனிக் குறுகிய வினைகளின் சுமை அசலுக்கு விஞ்சிய
வட்டிக் கடன் போலக் காலனெனும் கடன்காரன் கதவைத்
தட்டி கூட்டிக் கழித்துக் கணக்குப் பார்த்துக் கழியாதோ
உன் கணக்குப் பல சன்மங்களிலு மென இவர் வீடு
காலியாக விளைந்த மறு பிறவி தொடருமெங்கோ
- நாராயணன்
நெறி
பழ நெறிக் களைவதும் புது நெறிப் புகுவதும்
தீந்நெறி தீர்ந்தால் சமூகம் திளைப்பதும்
நன் நெறி நெரிந்தால் சமூகம் நலிவதும்
என் நெறி நன் நெறி என அறியா திருப்பதும்
அவரவ ரவரவர் நெறியே சரியென்றிருப்பதும்
நெறி குலைந்த நிலை கேடாகும்
- நாராயணன்