தமிழ்நாட்டில் பல குடும்பங்களில், குறிப்பாக பிராமண மற்றும் செட்டியார் குடும்பங்களில் வைரம் வாங்குவதற்கு முன் அதை வீட்ல் சில நாள் வைத்து நல்ல செய்திகள் வருமா என்று பார்த்தே வாங்குவார்கள். ஏனெனில் சில வைரங்களில் குறைகள் இருக்கும். இதோ, கிருஷ்ண பரமாத்மாவை படாத பாடு படுத்திய வைரம் பற்றிப் படியுங்கள்.

வைரங்கள் பெண்களின் சிறந்த நண்பர்கள் என்று ஆங்கிலத்தில் சொல்லுவதுண்டு. அது உண்மையாக இருக்கலாம். ஆனால் கட்டாயம் கடவுளுக்கும் வைரத்துக்கும் ரொம்ப தூரம்!! சியமந்தக மணி எனப்படும் வைரம் கண்ண பிரான் காலத்தில் இருந்தது. அது யாதவ குலத்தில் மூன்று கொலைகளுக்கும் பல சண்டைகளுக்கும் காரணமாகிவிட்டது பின்னர் இது பிரான்ஸ், பிரிட்டன் ,அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குச் சென்று அங்கும் பல சாவுகளுக்கும் சண்டைகளுக்கும் வித்திட்டது. இதை இப்போது வாஷிங்டனில் உள்ள ஸ்மித்சோனியன் மியூசியத்தில் பார்க்கலாம். ஆனால் அவர்களுக்கே இது கண்ணனின் வைரம் என்று தெரியாது.

சத்ரஜித் என்பவர் ஒரு யாதவர் தலைவர். அவர் சூரிய தேவனை வழிபடுவார். ஒரு நாள் சூரிய தேவனே அவருக்கு ஒரு பெரிய வைரத்தைக் கொடுத்தார். (அதாவது அவர் கோவிலுக்குச் சென்றபோது அது பூமியிலிருந்து கிடைத்தது.) அது பள பள என்று ஜொலித்தவுடன் கிருஷ்ணருக்கும் கூட பொறுக்கவிலை. அதை உக்ரசேனன் என்பவனிடம் கொடு என்றார். ஆனால் சத்ரஜித் அதற்கு மறுத்துவிட்டார்.

சத்ரஜித் அவருடைய தம்பி ப்ரசேனன் என்பவரிடம் கொடுத்துவைத்தார். அவன் அதை எடுத்துக் கொண்டு வேட்டை ஆடப்போனான். அவனை ஒரு சிங்கம் அடித்துக் கொன்றது. இந்த வைரத்தை கரடி இனத் தலைவர் ஜாம்பவான் எடுத்துச் சென்றார். முன் காலத்தில் மக்கள் தங்களை அடையாளம் கூற ஒரு பறவை அல்லது மிருகம் பெயரைச் சொல்லுவார்கள். ஜம்பவான் கரடி இனம் எனப்படும் மலை ஜாதி இனத்தைச் சேர்ந்தவர். அவருடைய பிள்ளைகள் அந்த வைரத்தை வைத்து விளையாடத் துவங்கினர்.

எல்லோரும் கண்ண பிரானைச் சந்தேகப் பட்டனர். உடனே அவர்ப்ரசேனனைத் தேடிச் சென்றார். காட்டில் அவனது சடலத்தையும் மற்ற அடிச் சுவடுகளையும் கண்டு அதைப் பின்பற்றினான். ஒரு மாதம் சண்டை போட்ட பின்னர் ஜாம்பவானுடன் ஒரு சமரச ஒப்பந்தம் ஏற்பட்டது. அவருடைய பெண் ஜாம்பவதியைக் கல்யாணம் செய்து கொண்டால் சியமந்தக மணியைத் திருப்பித் தருவதாகச் சொன்னார். கண்ணனுக்கு அடித்தது யோகம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். ஒரு பெண்+ ஒரு வைரம்!!

துவாரகைக்குத் திரும்பிவந்தார். வைரத்தை சத்ரஜித்திடமே திருப்பித் தந்தார். அவருக்கு ஏக சந்தோஷம். அவருடைய பெண் சத்யபாமாவையும் கண்ணனுக்கு மணம் முடித்தார். சியமந்தக வைரத்தால் இரண்டு பெண்கள் லாபம் !! இந்த நேரத்தில் ஹஸ்தினாபுரத்திலிருந்து எஸ்.ஓ.எஸ். (அவசர உதவி தேவை என்று) செய்தி வந்தது. பாண்டவர்கள் அனைவரும் அரக்கு மாளிகை தீ விபத்தில் இறந்துவிட்டதாக வந்தது செய்தி. அங்கே சென்றால் எல்லோரும் சுபம்.

இதற்குள் சத்ரஜித் வீட்டில் சததன்வா என்பவன் புகுந்து சத்ரஜித்தைக் கொன்றான். வைரத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான். சத்யபாமாவுக்கு ஒரே துக்கம். துவாரகைக்குத் திரும்பி வந்த கண்ணனிடம் கதறி அழுதாள். கண்ணனும் பலராமனும் சததன்வாவைத் தேடினர். அவன் பீஹாருக்கு ஓடிவிட்டான். குஜராத்திலிருந்து ஆயிரம் மைல் துரத்திச் சென்று அவனைக் கண்ணன் கொன்றான். பின்னர்தான் தெரிந்தது. அதை அவன் அக்ரூரன் என்பவனிடம் கொடுத்து வைத்தான் என்பது. கிருஷ்ணன் துவாரகைக்குத் திரும்பி வருவதற்குள் அவன் உத்தரப் பிரதேசத்தில் உள்ள காசிக்கு ஓடிவிட்டான். ஆட்களை அனுப்பி அவனை கண்ணன் அழைத்து வந்தார். மீண்டும் ஒரு சமரச ஒப்பந்தம். அக்ரூரனே அதை வைத்துக் கொள்ளலாம் என்றும் ஆனால் துவாரகையை விட்டு வெளியே போகக் கூடாது என்றும் உத்தரவு போட்டார். இதற்குப் பின் அந்த வைரத்தின் கதை தெரியவில்லை.

ஹோப் வைரம்

சியமந்தக மணியை ஒரு கோவில் அம்மனின் நெற்றியில் பதித்து வைத்தனர். அதைத் திருடிய அர்ச்சகருக்கு மரண தண்டனை கிடைத்தது. அதைத் திருட்டுத்தனமாக வாங்கிய பிரெஞ்சுக்காரர் ஜீன் பாப்டிஸ்ட் டவர்னியர் வெறி நாய்கள் கடித்து இறந்தார். இதற்கு ஹோப் வைரம் என்று பின்னர் பெயர் சூட்டப்பட்டது!

இந்தியாவிலிருந்து பிரான்ஸ், பிரிட்டன் ,அமெரிக்கா சென்ற ஹோப் வைரம் இதே போல படுகொலைகள், வழக்கு வாய்தாக்கள், சண்டை சச்சரவுகள், கடன் திவாலாக்கள் எல்லாவற்றையும் உண்டாக்கியது. மேலும் ஹோப் வைரம் புற ஊதா கதிர்களில் தக தக என்று சிவப்பாக ஜொலிக்கிறது. இதைத்தான் பாகவதமும் சூரியன் போல ஜொலித்த வைரம் என்று சியமந்தக மணி பற்றியும் கூறுகிறது. பலரும் அதை மாணிக்கம் என்று நம்பினர். ஆனால் அது வைர வகைகளில் ஒரு அபூர்வ வைரம். இப்போது அது அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் ஸ்மித்சோனியம் மியூசியத்தில் உள்ளது.

இது மனிதர் கையில் இருந்தால் பல துரதிருஷ்டங்கள் ஏற்படுவதால் கடைசியாக இதை வைத்திருந்த வாட்சன் என்பவரிடமிருந்து இதை அந்த மியூசியத்துக்கு நன்கொடையாக வாங்கிவிட்டனர். அவரும் உடும்பு வேண்டாம் கையை விட்டால் போதும் என்று கொடுத்துவிட்டுப் போய்விட்டார். அவருக்கு முன் ஹோப் என்பவர் வைத்திருந்ததால் இதற்கு ஹோப் வைரம் என்று பெயர். உண்மையில் இது ஹோப்லெஸ் (அவ நம்பிக்கை) வைரம்!!!

முதலில் இது லாம்பெல் இளவரசி கைக்குப் போனது. அவரை ஒரு கும்பல் அடித்துக் கொன்றது. அதன் பின்னர் ஜாக்ஸ் செலோட் என்பவர் கைக்குப் போனது. அவர் புத்தி சுவாதினம் இழந்து தற்கொலை செய்துகொண்டார். இதற்குப் பின்னர் ரஷிய இளவரசர் கனிடொவ்ஸ்கியை அடந்தது. அவர் தனது காதலிக்குக் கொடுத்துவிட்டு பின்னர் அவளை கொலையும் செய்தார். பிறகுதான் ஹென்ரி தாமஸ் ஹோப் வாங்கினார்.

பிரெஞ்சுப் புரட்சியில் லூயி மன்னரையும் அவருடைய மனைவி மேரி அன்டாய்னெட்டையும் கில்லட்டின் எந்திரத்தில் வைத்து பகிரங்கமாக கொடூரமாகக் கொன்றதைப் படித்திருப்பீர்கள். அப்போது இந்த ஹோப் வைரம் (கண்ண பிரானின் சியமந்தகம்) அவர்கள் கையில் இருந்த்தது. உலக வரலாற்றில் ஒரு மன்னரும் ராணியும் இவ்வளவு பரிதாபமாக இறந்தது கிடையாது. அதற்குப் பின் வேறு ஒருவர் கைக்குப் போய் அவர்கள் குடும்பத்தில் பெரிய சண்டை ஏற்பட்டு பல ஆண்டுகள் வழக்கு நடந்தது. இதை வாங்கிய ஒருவர் பணம் எல்லாம் இழந்து திவால் ஆனார்.

சில வைரங்கள் அதிக யோகத்தைக் கொண்டு வரும். இந்தியாவில் ஆந்திரப் பிரதேசத்தில் கிடைத்த கோஹினூர் வைரம் சென்ற இடம் எல்லாம் சிறப்பை ஈட்டித் தரும். அது இப்போது இலண்டன் டவர் மியூசியத்தில் உள்ளது. அது இருப்பதால் எலிசபெத் மஹாராணியார் கொடிகட்டிப் பறக்கிறார். அவருடைய 60ஆவது வருட பதவி ஏற்பு நிறைவு வைபவம் லண்டனில் ஜூன் மாதம் நடைபெறப் போகிறது. கோஹினூர் அவர் கையில் இருக்கும் வரை அவரை யாரும் அசைக்க முடியாது.