கவிஞர்கள் வாயிலிருந்து பொய்கள் வராது. ஆனால் மிகைப் படுத்தப்பட்ட கூற்றுகள் வரலாம். “பதியெழுவறியாப் பழங்குடி” என்றும் “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி” என்றும் தமிழ் இனத்தை நம் புலவர்கள் பாடியதை எந்த ரகத்தில் சேர்ப்பது? மிகைப் படுத்தப்பட்ட ஒரு புகழ்ச்சியா? உண்மை நிகழ்ச்சியா?

உண்மை நிகழ்ச்சி என்றே கூற வேண்டியுள்ளது. மந்திரம் போல் சொல் இன்பம் வேண்டுமடா என்று இறைவனிடம் வேண்டும் பாரதியும் கூட பாரத அன்னையைப் பாடுகையில்

தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடும் சூழ்கலை வாணர்களும்-இவள்

என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்

என்றுப் போற்றிப் புகழ்கிறார். அது சரி, இந்த உண்மை இவ்வளவு நாள் உங்கள் கண்களில் படவில்லையா? என்றுச் சிலர் கேட்கலாம். நாம் அனைவரும் வெள்ளைக்காரர்கள் எழுதிய சரித்திரப் புத்தகத்தைப் படித்து வந்ததால் மூளை மழுங்கிப் போய் விட்டோம். நல்ல ஒரு குடம் பாலில் ஒரு சொட்டு விஷத்தைக் கலந்தது போல ஆரிய திராவிட இனவாதம் என்னும் விஷத்தை ஊற்றி நமக்கு பாலை ஊட்டியதால் மூளை பேதலித்துவிட்டது. வடமொழி அல்லது தமிழ் மொழியின் 2000 ஆண்டு இலக்கியத்தில் இப்படி வேற்றுமையே இல்லை. சில சொற்களைப் புரட்டியும் பிரட்டியும் நம்மை மிரண்டு போகச் செய்துவிட்டார்கள். உண்மையில் வடமொழி இலக்கியங்களில் தமிழர்களின் பழமையை ஆங்காங்கு சுட்டிக் காட்டியிருக்கின்றனர். ஆரிய திராவிட இனவாதம் என்பதை மறந்துவிட்டு ஒவ்வொரு புத்தகத்தையும் மீண்டும் படித்தால் நமது வரலாறு எகிப்திய, சுமேரிய, சீன வரலாறுகளை விட மிகப் பழையது என்பது தெள்ளிதின் விளங்கும். இதோ ஒரு சில சான்றுகள்:

 1. அவதாரம்: மஹா விஷ்ணுவின் முக்கிய அவதாரங்களில் முதல் அவதாரம் மீன் அவதாரம். இதைப் பற்றிய மத்ஸ்ய புராணத்தில் இந்த அவதாரம் தென்னாட்டில் திராவிட மன்னன் சத்யவிரதன் காலத்தில் நடந்ததாக வடமொழியில் எழுதி வைத்துள்ளனர். ஆக முதல் அவதாரம் ஏற்பட்ட பூமியே தமிழ் நிலம்தான்.
 2. தோணிபுரம்: ஞான சம்பந்தர் தனது சொந்த ஊரான சீர்காழியின் சிறப்புகளைப் பாடுகையில் (தேவாரம் 1-60, 2-753 முதல் 764,787-810, 3-81, 3-100, அப்பர் 5-45) சீர்காழியைத் தோணிபுரம் என்று அழைக்கிறார். பிரளய காலத்தில் தோணி/ படகு அங்கே அடைக்கலம் பெற்றதாகவும் பாடுகிறார். முதல் அவதாரமான மீன் அவதாரத்துக்கு சைவ நூலும் சான்று வழங்குகிறது. திருவாவடுதுறையின் பழைய தேவாரப் பதிப்பில் அம்மையப்பர் இருவரும் தோணியில் செல்லும் படமும் உள்ளது
 3. தொல்காப்பியத்தில் வேத கால தெய்வங்களான இந்திரனையும் வருணனையும், விட்டுணுவையும் தமிழ் தெய்வங்களாகத் தொல்காப்பியர் காட்டியிருக்கிறார். அவரைப் பொய்யர் என்று யாராவது கூறுவார்களா?
 4. புறநானூற்றிலும் அகநானூற்றிலும் ஏனைய நூல்களிலும் பல ராமாயண மகாபாரத நிகழ்ச்சிகளைக் கொடுத்துள்ளனர். இவை வால்மீகி ராமாயணத்திலோ வியாசரின் மகாபரத்திலோ, பாகவத புராணத்திலோ இல்லை. அதாவது தமிழர்களுக்குத் தெரிந்த பல அரிய பெரிய செய்திகளை வடமொழியாளர் கூட மறந்துவிட்டனர். ஆனால் தமிழன் நினைவு வைத்துக் கொண்டு போகிற போக்கில் உவமைகளாகப் பயன் படுத்துகிறான். மக்கள் எல்லோருக்கும் நன்கு தெரிந்த விஷயங்களைத்தான் புலவர்கள் உவமைகளாகப் பயன்படுத்தவேண்டும் என்பது இலக்கிய விதி.
 5. மஹாபாரதத்துக்கு முந்தியது ராமாயணம். இரண்டும் தமிழர்களுடன் மிகவும் தொடர்புடையவை. அர்ஜுனன் இங்கே வந்து அல்லி ராணியை மணம் முடித்ததைத் தெருக்கூத்தில் கூடப் பாடுகிறார்கள். சேர மன்னன் பாரதப் படைகளுக்கு சோறு கொடுத்து உதவுகிறான்.
 6. அகத்திய முனிவர் வேளிர் குடிமக்களுடன் தமிழ்நாட்டுக்கு வந்ததை 2000 ஆண்டுக்கு முன்னரே கபிலர் பாடிவிட்டார் (புறநானூறு 201).
 7. அவரது காலத்துக்கு முந்தைய அகத்தியன் (இது கோத்திரப் பெயர்.ஆகையால் அவர் பரம்பரையில் வரும் அனைவரும் அகத்தியர் என்று சொல்லிக் கொள்வர்) ராவணனுடன் வீணைப் போட்டியில் இறங்கியதை நச்சினார்க்கினியர் போன்றோர் எழுதிவைத்துள்ளனர்.
 8. மஹாவம்சம் என்பது இலங்கை வரலாற்றைக் கூறும் நூல். கி.மு 500 ஆண்டு வாக்கிலேயே அவனது வம்சத்தினருக்கு பாண்டிய மன்னன் பெண்களைத் திருமணம் செய்து கொடுத்ததாகக் கூறுகிறது.
 9. அவ்வையார் பாடிய புறனானூற்றுப் பாடலில் அதியமானின் முன்னோர்கள்தான் கரும்பைப் பயிரிட கொண்டுவந்ததாகப் பாடுகிறார். இந்து மத, சமண மத புத்தகங்கள் இக்சுவாகு மன்னன் மற்றும் ரிஷப தேவர் இதைச் செய்ததாகக் கூறும். இக்ச்வாகு என்ற வடமொழிச் சொல்லுக்கு கரும்பு என்று பொருள். சிந்து சம்வெளி நாகரீகத்தில் சர்க்கரையே கிடப்பதால் அதியமானின் முன்னோர்கள் கி.மு 3000 ஆண்டில் வாழ்ந்தது தெரிகிறது.
 10. இக்ஷ்வாகு வம்சத்தில் ஒரு பெண் பெயர் திராவிடா. அதாவது அவள் தென் நாட்டிலிருந்து போய் அவனது வம்சத்தில் ஒருவனை மணந்தவள். காந்தாரத்திலிருந்து வந்தவளை காந்தாரி என்றும் கேகய நாட்டிலிருந்து வந்தவளை கைகேயி என்றும் அழைப்பதை நாம் அறிவோம். ஆக வடமொழியில் கூறப்படும் முதல் மன்னருடன் ஒரு தமிழச்சிக்குத் திருமணத் தொடர்பு உண்டு.
 11. பாண்டியர் செப்பேடுகளும் சோழர் செப்பேடுகளும் இந்த புராண மன்னர்களின் தொடர்புகளை ஆயிரம் ஆண்டுக்கு முன்னரே போற்றி வருகின்றன. சிலப்பதிகாரத்தில் கண்ணகியும் சிபி சக்கரவர்த்தி முதல் பல சோழ மன்னர்களின் முன்னோரைக் குறிப்பிடுகிறாள். இளங்கோ அடிகள் பொய்யா சொல்வார்?
 12. உலகப் புகழ் பெற்ற வடமொழிக் கவிஞன் காளிதாசன் எழுதிய ரகுவம்சத்திலும் பாண்டியன், அகத்தியன் ஆகியோரை அடுத்தடுத்த சுலோகங்களில் வைத்துப் பாடுகிறான். அவனும் 2000 ஆண்டுக்கு முன் பாடியவன்.
 13. இருங்கோவேளைப் பாடும் கபிலரோ (புறம் 201) அவனை 49ஆவது தலைமுறை மன்னன் என்கிறார். இதற்கு உரை எழுதப் போன நச்சினார்க்கினியர் யாதவ மக்கள் தமிழ் நாட்டுக்கு வந்த காலத்தைப் பற்றிப் பேசுகிறார். ஒரு தலை முறைக்கு 30 ஆண்டுக் கணக்கு வைத்தாலும் கி.மு 1500 ல் அது நடந்ததாக கொள்ளலாம்.
 14. இந்திய நாகரீகத்தின் பழமையை உணர்தும் குறிப்புகள வட மொழி நூல்களில் ஏராளம். ஆரிய திராவிட வாதத்தை மறந்துவிட்டு இவைகளைப் படித்தால் ஒரு குழப்பமும் இல்லாமல் விளங்கும். வெள்ளைக்காரகளும் கூட கி.மு 800 என்று தேதி குறித்த பிருஹதாரண்ய உபநிடத்தில் 50 முதல் 60 தலை முறை குருமார்களின் பெயர்கள் வருகின்றன. மன்னர்களுக்கு 30 ஆண்டு கொடுத்தால் குருமார்களுக்கு 40 முதல் 50 ஆண்டுகள் கொடுக்கலாம். அதாவது முதல் உபதேசம் பெற்றவர் கி. மு 3000 வாக்கில் வாழ்ந்திருப்பார். வியாச மஹரிஷி வேதங்களை நான்காகப் பிரித்த காலத்தை ஒட்டி இது நடந்திருக்கும்.
 15. கி.மு ஆறாம் நூற்றாண்டில் உலகின் முதல் இலக்கணப் புத்தகத்தை எழுதிய பாணினியோ மிகவும் சர்வ சாதாரணமாக பாரத்வாஜரின் 23ஆவது தலை முறை கௌதமரின் 53ஆவது தலைமுறை என்று எடுத்துக்காட்டுகள் தருகிறார். கௌதமர், பாரத்வாஜ ரிஷிகள் வேத காலத்தில் வாழ்ந்தவர்கள். அவர்களுடைய 50 அல்லது 60 தலைமுறைகளை உதாரணமாகக் காட்டவேண்டுமானால் பழமை என்பது அவர்களுக்கு கத்தரிக்காய், வெண்டைக்காய் என்பது போல சாதாரண விஷயங்களாகும்
 16. பல கல்வெட்டுகளில் கலியுகத்தையும் குறிப்பிடுகிறார்கள். தமிழ்நாட்டில் பார்த்திவ சேகரபுர செப்பேட்டில் கலி ஆண்டு 3967ஐ (கி.பி865) நாட்கணக்கில் 1449087 நாட்கள் என்று குறித்துள்ளனர். தமிழர்களுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கலியுகத்தில் எவ்வளவு நம்பிக்கை பாருங்கள். அதாவது கி மு 3102ல் நமது புதுவரவு செலவுக் கணக்கு துவங்கியதை அவர்கள் நம்பினார்கள். காரணம்-அப்போது ஆரிய திராவிட விஷம் பாலில் கலக்கப் படவில்லை.இதற்கு முன் ஐஹோல் கல்வெட்டிலும் கலி ஆண்டு உள்ளது
 17. மெஹஸ்தனீஸ் கி.மு மூன்றாம் நூற்றாண்டில் எழுதிய குறிப்பில் அப்போதைய மன்னருக்கு முன் 140 தலைமுறை இந்தியாவில் இருந்ததாக எழுதிவைத்துள்ளார்.
 18. அகநானூற்றில் கபிலர் (பாடல் 12) ஒரு இரண்டு தலைப் பறவை பற்றிப் பாடுகிறார். இதே இருதலைப் புள் வடமொழியில் பஞ்ச தந்திரக் கதைகளில் வருகிறது. இரு நூல்களும் சம காலத்தவை. இந்த பறவை உவமை எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டும். இதே இருதலைப் புள் சுமேரியாவில் கி.மு 3800 ல் ஒரு சிலிண்டர் முத்திரையிலும் பின்னர் துருக்கியில் கி.மு 1350 வாக்கில் பல சிற்பங்களிலும் காணப்படுகிறது. துருக்கியில் இது உள்ள பகுதியில் பொகஸ்கோய் என்னும் இடத்தில் வேத கால தெய்வங்களைக் குறிப்பிடும் கல்வெட்டும் கிடைத்திருக்கிறது. இவை எல்லாம் இந்திய தொடர்பை உறுதிப்படுத்துகின்றன. துருக்கியில் உள்ள இருதலைப் புள் இரண்டு முயல்களைத் தூக்குவது போல செதுக்கப் பட்டுள்ளது. ஆனால் கி.பி.1530ல் அச்யுத ராயர் வெளியிட்ட தங்க நாணயத்தில் இந்தப் பறவை ,இரண்டு யானைகளைத் தூக்குவது போல சித்தரிக்கப் பட்டுள்ளது. தட்சசீலம் முதல் தமிழ்நாட்டுக் கோவில்கள் வரை இப்பறவையின் சிற்பங்களும் ஓவியங்களும் உள்ளன. ஒரு தமிழ் பறவை அல்லது ஒரு இந்தியப் பறவையின் செல்வாக்கு கி.மு 3800 ல் சுமேரியாக்குச் சென்றிருக்கிறது. ஆரிய திராவிட மஞ்சள் கண்ணாடியைப் போட்டுப் பார்த்தால் தலை கால் புரியாது. காமாலைக் கண்ணணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள். தமிழிலிருந்து சுமேரியாவுக்குப் போனதா வடமொழியிலிருந்து போனதா என்று ஆய்வுக் கட்டுரைகளை எழுதிப் பிதற்றத் துவங்கி விடுவோம்.
 19. தமிழ் வடமொழி இலக்கியங்களில் மன்னர்களைக் குறிப்பிடும் போது பயன்படுத்தும் உவமையில் ஆற்று மணல் துகள்களை விட, நட்சத்திரங்களை விட அதிக மன்னர்கள் இப்பூவுலகை ஆண்டதாகக் குரிப்பிட்டுள்ளனர். சங்க இலக்கியங்களில் பல இடங்களில் இந்த உவமை வருகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வட இமயம் முதல் தென் குமரி வரை வழங்கி வந்த பேருண்மையை ,நம் முன்னோர்கள் அனைவரும் மறுகேள்வி கேட்காமல் செப்பேட்டிலும் கல்வெட்டிலும் சங்கப் பாடல்களிலும் எழுதிவைத்த மாபெரும் உண்மையை நேற்றுவந்த ஐரோப்பியர்கள் எவ்வளவு எளிதில் விழுத்தாட்டிவிட்டார்கள். ஒரு குடம் பாலில் கலந்த ஒரு துளி விஷத்தை—அதுதான் அந்த ஆரிய திராவிட வாதத்தை--- எடுப்பது எளிதான பணியல்ல.ஆனால் முடிந்தால் முடியாதது உலகில் உண்டோ! காமாலைக் கண்ணாடியைத் தூக்கி எறிவோம்.தெளிந்த பார்வை பெறுவோம்.
 20. தமிழ் இனம் மத்திய தரைக் கடலிலிருந்து வந்ததாகவும் ஆரிய இனம் மத்திய ஆசியாவிலிருந்து வந்ததாகவும் ஐரோப்பியர் எழுதிய வாதங்களை முறியடித்து இங்கிருந்து அவர்கள் உலகம் முழுதும் சென்றதை ஆதாரங்களுடன் நிரூபிப்போம். சுமேரிய, எகிப்திய, பாபிலோனிய மன்னர்களின் மொத்த எண்ணிக்கையை விட நம்மிடையே மன்னர்கள் இருந்திருக்கிறார்கள். ஹோமர் என்ற கிரேக்க கவிஞன் இலியட், ஆடிசி என்னும் முதல் கிரேக்க நூல்களை எழுதும் முன்னர் வடமொழியில் வேதங்கள், பிராமணங்கள், உபநிசத்துக்கள் என்று ஏராளமான நூல்கள் தோன்றிவிட்டன. அப்போதைய ஜனத்தொகையும் உலகிலேயே நம் நாட்டில்தான் அதிகம். நூல்களையும் மக்கட் தொகையும் வைத்தே மனித இனம் எந்தப் பக்கத்திலிருந்து எந்தப் பக்கம் போனது என்றும் யார் அதிகம் பண்பாடுடையவர்கள் என்தையும் எடை போட்டு விடலாம்.
 21. உபநிஷத் கூறும் கருத்துச் செறிவுகளைப் பார்க்கையில் களிமண் பலகைகளில் கணக்கு எழுதிய சுமேரியர்களை விட நாம் காலத்தால் அறிவால் எவ்வளவு மூத்தவர்கள் என்பதை பாமரனும் கூட கூறமுடியும்.