வ.வே.சு.அய்யர்

வாஞ்சிநாதன் வாழ்வின் மிகப் பெரிய திருப்பத்திற்கு காரணமானவரான வ.வே.சு. அய்யரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

நான் செய்த பாக்கியமோ அல்லது என் வீட்டு பெரியவர்கள் செய்த புண்ணியமோ, வ.வே.சு அய்யரின் ஒரே மகனான டாக்டர். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தான் ஒரு காலத்தில் (47 வருடங்களுக்கு முன் ) எங்கள் வீட்டு குடும்ப டாக்டர் ஆக எங்கள் எதிர் வீட்டில் (ஸ்ரீரங்கம்) இருந்து வந்தார். அவர் மூலம் அவர் தந்தையார் எழுத ஆரம்பித்து முற்றுப்பெறாத கம்ப ராமாயணத்தின் ஆங்கில மொழி ஆக்கத்தை படிக்கும் புண்ணியம் செய்தேன். சீதையை பற்றி அவர் எழுதிய பகுதி முற்றுப்பெறாமலே அவர் திடீர் மறைவால் நின்றிருந்தது. அது ஒரு தனி அனுபவம்.

வ.வே.சு. அய்யர் திருச்சிக்கு அருகே உள்ள வரகனேரி என்ற ஒரு சிறு கிராமத்தில் ஏப்ரல் 2-ம் தேதி, 1881-ம் வருடம் பிறந்தார். நானும் திருச்சியை சேர்ந்தவன் என்பதால் அவர் எங்கள் ஊரார் என பெருமை கொள்கிறேன். அது மட்டும் அல்ல. அவர் படித்த அதே செயின்ட் ஜோசப் கல்லூரியில் தான் நானும் படித்தேன் என்பதில் எனக்கு கொஞ்சம் பெருமை. என் மானசீக குருவான நம் முன்னாள் குடியரசு தலைவர் மாண்புமிகு டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் படித்ததும் அதே கல்லூரி தான். அதுவும் எனக்கு பெருமை தானே, பூவுடன் சேர்ந்த நார் மணம் பெற்றாற்போல்.

மதராசில் சட்டப்படிப்பு படித்து விட்டு, திருச்சியில் ஜில்லா கோர்ட்டில் ப்ராக்டீஸ் செய்ய ஆரம்பித்தார். பின்னர் ரங்கூன் சென்றவர், அங்கிருந்து லண்டன் சென்று பாரிஸ்டர் படிப்பில் சேர்ந்தார். அங்கிருந்த போது தான் இந்திய விடுதலைக்கு போராடும் தீவீரவாதியான விநாயக் தாமோதர் சவர்காருடன் தொடர்பு கொண்டார். அவரால் வெகுவாக ஈர்க்கப்பட்டு, இந்திய நாட்டின் விடுதலைக்கு தன்னை முழுவதும் அர்பணித்துக்கொள்ள அவர் இயக்கத்தில் சேர்ந்தார். அந்த இயக்கத்தின் பெயர் தான் பாரத மாதா விடுதலை இயக்கம். அன்றிலிருந்து அவர் வாழ்க்கை முற்றிலும் மாறுபட்டது. அதன பின் நடந்ததை தான் சரித்திரம் நன்கு அறியும்.

பிரிட்டிஷ் அரசாங்கம் அவரை கைது செய்ய 1910-ம் வருடம் வாரண்ட் அனுப்பியது. தலை மறைவாக தப்பித்து பாரிஸ் சென்றார். பின்னர் இந்தியா திரும்பியவர் பாண்டிச்சேரி வந்து சேர்ந்தார். அது பிரெஞ்சு அதிகாரத்தில் இருந்தபடியால் அவரால் பிரிட்டிஷாரிடம் பிடிபடாமல் தப்பிக்க முடிந்தது. அங்கு தான் அவர் நம் சுப்ரமணிய பாரதியையும், அரபிந்தோ மகரிஷியையும் சந்தித்தார். அங்கு இருந்தபடியே தம் தொண்டர்களுக்கு அவ்வப்போது ஆணைகள் பிறப்பித்து வந்தார். அவரே மக்களிடம் மிகவும் கடுமையாக நடந்து கொண்ட காரணத்திற்காக, திருநெல்வேலி கலெக்டர் ஆன ஆஷ் என்பவரை கொலை செய்ய திட்டம் ஒன்று போட்டார்.

இந்த நிலையில், வேறு பல குற்றங்களுக்காக வ.வே.சு அய்யர் சிறையில் அடைக்கப்பட்டார். அதற்காக சிறிதும் வருந்தாத அவர், அந்த சிறை தண்டனைகள், அவருள் இருந்த மற்றொரு இலக்கிய திறைமையை வெளிக்கொணர கிடைத்த சந்தர்ப்பமாக எடுத்துக்கொண்டார். சிறையில் இருந்த காலங்களில் வ.வே.சு.அய்யர் அவரது ஆங்கில புலமை மற்றும் எழுத்து திறமைக்கு சான்றாக திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். மற்றும் கம்ப ராமாயணத்தை பற்றி ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதினார்.

அவர் மரணம் எதிர்பாராமல் நிகழ்ந்தது என்றே கூறலாம். அது அவரது சுதந்திர போராட்டத்தில் நிகழ்ந்தது அல்ல. 1925-ம் வருடம், ஜூன் 3-ம் தேதி அன்று, பாபநாசத்தில் தன் அருமை மகளுடன் நீர் வீழ்ச்சியில் நீராடிக்கொண்டிருந்த போது , அவரது மகள் சுபத்ரா தவறி அருவியில் வீழ்ந்து முழுகிக்கொண்டு இருந்த போது, அவரை காப்பாற்றும் முயற்சியில் அவரும் குதிக்க, இருவரும் பரிதாபகமாக மூழ்கி இறந்தனர்.

தமிழகம், ஏன் இந்தியா ஒரு அருமையான தேச பக்தனை இழந்தது என்று சொல்லலாம். அதுவே விதி எனப்படுவது. ஆனாலும் கூர்ந்து கவனித்தால் அவர் எங்கே இறந்தார்? பாபநாசத்தில் அல்லவா? அவரது சேவை கண்டு, அவர் மேற்கொண்ட முயற்சிகள் சரியாக இல்லை என்றாலும், அந்த பாவங்களை நாசம் செய்து பாரத அன்னை தன் பாதங்களில் புனிதனாக சேர்த்துக்கொண்டாள் என்று தான் கூற வேண்டும்.