வாஞ்சிநாதன்

20-ம் நூற்றாண்டின் ஆரம்பம் இந்திய சுதந்திர போராட்டத்தின் ஒரு முக்கிய காலக்கட்டம் ஆகும். இந்த காலக்கட்டத்தில் தான் வடக்கிலும் சரி தெற்கிலும் சரி இளைஞர்களிடையே பொறுமை குறைந்து வந்தது. வீரம் மிகுந்து இருந்தது. எப்படியாகிலும் வெள்ளையர்களுக்கு நல்ல புத்தி கற்பிக்க வேண்டும் என்ற வேகம் மிகுந்து காணப்பட்டது. அதற்கு ஆயுதமே சரியானது என ஒரு சிலர் எண்ணினர். அங்கு வடக்கில் பகத் சிங் கொதித்து எழுவதற்கு முன்னறே வேறு பலர் தெற்கில் வேகமாகப் பாய்ந்தனர் .அவர்களில் குறிப்பிட தக்கவர்கள் வ.வே.சு.அய்யர், வாஞ்சிநாதன் மற்றும் சுப்ரமணிய சிவா போன்றோர் ஆவார்கள். அவர்கள் என்ன செய்தார்கள்; அவர்கள் நினைத்ததை சாதிக்க முடிந்ததா என்பதை சற்றே பார்ப்போம்.

1886-ம் வருடம் செங்கோட்டையில் ரகுபதி அய்யருக்கும் ருக்மணி அம்மாளுக்கும் மகனாக பிறந்த சங்கரன் தான் பின்னர் வாஞ்சிநாதன் ஆனார். எல்லோரையும் போல தான் அவர் இளம் வயது வாழ்க்கை முதலில் இருந்தது. பள்ளி படிப்பை நன்கே முடித்து பின்னர் M.A. பட்டம் பெற்றவருக்கு பொன்னம்மாள் என்ற நங்கையுடன் இனிதே திருமணமும் நடந்தேறியது. `மணி அடித்தால் சோறு’ என்பது போல் வருமானம் நிறைந்த ஒரு அரசாங்க வேலையும் அவர் படிப்பிற்கு ஏற்றால் போல் கிடைத்து, வாழ்க்கை சொகுசாக நடந்து கொண்டு இருந்தது. அப்படியே காலம் சென்று இருந்தால், அவரும் எல்லோரையும் போல வாழ்ந்து, பிள்ளை குட்டிகள் பெற்று, அவர்களுக்கு திருமணம் முடித்து, பென்ஷனுடன் அரசாங்க வேலையில் இருந்து ரிடையர் ஆகி ஒரு நாள் பேரன் பேத்திகளுடன் விளையாடிக்கொண்டே ஒரு சாதாரண குடிமகனாக உயிர் நீத்து இருப்பார். ஆனால் அவர் பிறப்பு அதற்காக ஏற்பட்டது அல்ல. நாம் ஒவ்வொருவரும் எதோ ஒரு காரணத்தால் தான் பிறப்பெடுக்கிறோம்; பலருக்கு அது தெரிவது இல்லை. அதை உணர்ந்தவர்கள் மகான்கள் ஆகிறார்கள்; மற்றவர்கள் ஒரு விலங்கை போல் உண்டு, வளர்ந்து மறைந்து விடுகிறார்கள். அதுவே வித்தியாசம்.

அதேபோல், சங்கரன் என்ற வாஞ்சிநாதனும், பிள்ளை குட்டிகள் பெற்று, பென்ஷன் வாங்கி ரிடையர் ஆவதற்காக பிறப்பெடுக்கவில்லை. அவர் ஒரு காரண, காரிய புருஷர்.

வாஞ்சிநாதன் அப்படி அரசாங்க அலுவலகத்தில் வேலை பார்த்து கொண்டு வந்த சமயம் நாடெங்கும் சுதந்திர வேட்கையில் கொந்தளிப்பு இருந்து வந்ததை கவனித்துக் கொண்டு தான் வந்தார். அந்த காலத்தில் தமிழகத்தின் தலை சிறந்த சுதந்திர போராட்டத் தலைவர்கள் ஆன வ.உ.சிதம்பரனார் மற்றும் சுப்ரமணிய சிவா போன்றோரின் தீரமான பேச்சுக்களால் மிகவும் ஈர்க்கப்பட்டார். வெள்ளையர்களின் அராஜகம் கண்ட அவர் அரசாங்க வேலையில் இருந்து வெளி ஏறினார். குடும்பம் எப்படி வருமானம் இல்லாமல் கஷ்டப்படும் என்று அவர் சற்றும் யோசிக்கவில்லை.

அப்பொழுது, வ.வே.சு அய்யர் அவர்கள் பாரதமாதா இயக்கம் என்ற இயக்கத்தில் தீவீரமாக பங்கு ஏற்று இருந்தார். இது முன்பு குறிப்பிட்ட ஹிந்துஸ்தான் ஜனநாயக இயக்கத்தின் முன்னோடியாக தென் இந்தியாவில் அமைந்து இருந்தது. சுப்ரமணிய சிவா போன்ற தேச பக்தர்களும் இந்த தீவீர இயக்கத்தில் ஈடுபட்டு இருந்தனர். பகத் சிங், சந்திர சேகர ஆசாத் போன்றோர் போல இவர்களும், ஆயுதபலம் ஒன்றே வெள்ளையரை வெளியேற்ற சிறந்த வழி என்ற எண்ணம் கொண்டு, நேரம் கிடைக்கும் போது எல்லாம் பழி தீர்க்கும் நெறியை மேற்கொண்டு வந்தனர். அந்த சமயம் வாஞ்சிநாதன், ஒரு சுதந்திர வீரரும் தீவீரவாதியுமான வா.வே.சு அய்யர் என்ற வரகனேரி வெங்கடேச சுப்ரமணிய அய்யரின் சீடர் ஆனார். அவரே மக்களிடம் மிகவும் கடுமையாக நடந்து கொண்ட காரணத்திற்காக, திருநெல்வேலி கலெக்டர் ஆன ஆஷ் என்பவரை கொலை செய்ய திட்டம் ஒன்று போட்டார்.

அதன்படி வாஞ்சிநாதன் ஜூன்17-ம் தேதி 1911-ம் வருடம் மதராசை நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் மணியாச்சி ஸ்டேஷனில் நின்ற போது, மார்பிற்கு நேராக குறி பார்த்து சுட்ட ஒற்றை குண்டால் ஆஷ் கொல்லப்பட்டார். உடனே வாஞ்சிநாதன் ஓடி பிளாட்பாரத்தில் ஒரு கோடியில் இருந்த கழிவறையில் பதுங்கிக் கொண்டார். ஒருவழியாக போலீசார் அவரை தேடி கண்டு பிடித்தபோது, அவர் தன்னையே சுட்டுக்கொண்டு பிணமாக கிடந்தார் என்பதை அறிய மனம் ஒருபக்கம் வேதனை படுகிறது. அவர் சட்டைப்பையில் ஒரு மரண வாக்குமூலம் இருந்தது. அதில் அவர் இவ்வாறு எழுதிருந்தார்.

"வெளிநாட்டினர் பழமையும் பெருமையும் வாய்ந்த பாரதத்தை ஆள்வதும் மக்களை அடிமைகளாக நடத்துவதும் மிகவும் கண்டிக்கப்பட வேண்டியதாகும். அவர்கள் நம் புராதன தர்மத்தை அழிக்கின்றனர். நமக்கு ஸ்வராஜ்யம் கிடைத்து நம் தர்மத்தை காக்க வேண்டியது ஒவ்வொரு இந்திய குடி மகனின் கடமை ஆகும். ராமனும், கிருஷ்ணனும் தோன்றிய இந்த பாரத பூமியில், குரு கோவிந்தர் போன்றோர் வாழ்ந்த இந்த புண்ணிய பூமியில், அர்ஜுனன் போன்ற மாவீரர்கள் ஆண்ட வீர மண்ணில், நம்மால் வழிபடப்படும் தெய்வமான பசுவைக் கொன்று அதன் மாமிசம் உண்ணும் மிலேச்சர்கள் நம்மை ஆள்வது கொடுமையிலும் கொடுமை ஆகும். மேலும், எந்த நிலையிலும் 5-ம் ஜார்ஜ் மன்னனாக முடிசூடிக் கொள்வதை ஏற்க முடியாது. இந்த கொலை என் வெறுப்பை, இந்த இந்திய மக்களின் வெறுப்பை காட்டுவதே ஆகும். இதேபோல் ஒவ்வொரு இந்திய குடிமகனும் செய்ய வேண்டும் "

கொடுமையிலும் கொடுமை, பழமையில் ஊறிய அவரது பெற்றோர், அவர் செயலில் கொண்ட வெறுப்பால், அவர் தூய உணர்வை புரிந்து கொள்ளாமல், அவர் பூத உடலை ஏற்றுக் கொள்ள மறுத்து , அந்திம கிரியைகள் செய்ய மறுத்துவிட்டது தான். அது அவர்களது அறியாமையைத்தான் காட்டுகிறது. இன்று நாம் அவரை தேச பக்தராக கொண்டாடி என்ன பிரயோசனம்? அவருக்கு சிலை வைத்து என்ன லாபம்? அவர் ஆன்மாவிற்கு ஒரு நல்ல வழி அனுப்புதலை கொடுக்க முடியாதபோது? நம் சாஸ்திரங்களுக்கு என்ன பெருமை? நம் பழம் பெருமையை பேசி என்ன லாபம்? நம் மூட நம்பிக்கைகளும், வறட்டு பிடிவாதங்களும் அவருக்கு சரியான அஞ்சலி செய்ய முடியாமல் தடுத்து விட்டனவே. இதே போல் எத்தனையோ கொடுமைகள் நாம் பலருக்கு, குறிப்பாக பெண்களுக்கு செய்திருக்கிறோம். இளைய தலைமுறை, நம் சாஸ்திரத்திலும், சம்பிரதாயத்திலும் இன்று வெறுப்பை காட்டுகிறார்கள் என்றால், அது நாம் சாஸ்திரங்களை தவறாக புரிந்து கொண்டு, சம்பிரதாயம் என்ற பேரில் செய்து வந்த அட்டூழியங்கள் தான் என்று நினைக்கும் போது, இந்த இரண்டு தலைமுறையினருக்கும் இடையே கிடந்தது தவிக்கும் என் போன்றோருக்கு மிகவும் வேதனையாக இருக்கின்றது. அவரது பெற்றோர் செய்த கொடுமைக்கு இன்று நாம் ஒரு சொட்டு கண்ணீராவது விட்டு, சில நிமிட மௌன அஞ்சலி செலுத்துவோமாக.